Translate

Wednesday, 21 March 2012

ஜெனீவாப் பிரேரணையை ஆதரிப்பதான இந்தியாவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது: சித்தார்த்தன்


அமெரிக்காவின் ஜெனீவாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு இந்தியா எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும், இதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளே உந்துசக்தியாக அமைந்ததாகவும் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் சர்வதேசத்தின் நேரடித் தலையீடுகளுக்கு இடமே இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இலங்கை இந்தியாவிடம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை முன்வைத்தது. அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நிறுவியதோடு, பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். அதனை நிறைவேற்றுமாறே பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இப்பிரேரணை தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் உரிமைகளோடு வாழ வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டு காங்கிரஸ் உட்பட திராவிட கட்சிகள் முக்கிய பங்களிப்பையும், அழுத்தத்தையும் கொடுத்தன.
இவர்களின் தீவிரமான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இனி இலங்கை அரசாங்கத்தின் பக்கத்திலேயே பந்து உள்ளது. எனவே, பரிந்துரைகளை நிறைவேற்றி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு சர்வதேசத்தின் நேரடியான தலையீடுகளை இலங்கை அரசாங்கத்தால் தவிர்த்துக்கொள்ள முடியும் என புளொட் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment