Translate

Sunday 25 March 2012

ஐ.நா கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றது உறுப்புரிமை நாடுகளே


ஐ.நா கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றது உறுப்புரிமை நாடுகளே

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னணியில் கூட்டமைப்பு செயற்பட்டதாகவும் அது தொடர்பில் தற்பொழுது வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். சென்னையில் லயோலா கல்லூரியில் இன்று இடம்பெற்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநாடு இடம்பெற்று வருகிறது. அந்த மாநாட்டில் சட்டமின்மையும் அரசின் தப்பிக்கும் போக்கும் மதிபடும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் லயோலா கல்லூரியில் இன்று மாலை இடம்பெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் இலங்கையில் ஜனநாயகத்தை மீட்டெடுத்தல் என்ற தலைப்பில் சுமந்திரன் எம்.பி பேசினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு செல்லவில்லை என்று நாட்டில் உள்ள எங்கள் மக்கள் ஆதங்கத்துடன் பேசினார்கள் என்று குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளுர் அரசியலையும் உலக அரசியலையும் மக்கள் அறியாமையினாலேயே இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில சிக்கல்களை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டுக்கு செல்லக் கூடாது என்று எமக்கு ஆலோசனை தெரிவித்ததே உறுப்புரிமை நாடுகள்தான் என்றும் இந்த விவகாரத்தை முன்னர் பகிரங்கமாக சொல்ல முடியாத நிலமை காணப்பட்டதாகவும் தற்பொழுது அதை வெளிப்படையாக சொல்லக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த மாநாட்டில் கலந்து கொள்வது தீர்மானத்தை பாதிக்கும் என்று உறுப்புநாடுகள் சொல்லியிருந்தாவும் சுமந்திரன் தெரிவித்தார். 

தான் கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் இல்லாமல் வெளிநாடுகளில் தங்கியிருந்து இதற்காக வேலை செய்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐ.நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அவர் குற்பிபட்டார். கூட்டமைப்பு மீறப்பட்ட வாக்குறுதிகள் என்ற தலைப்பில் உறுப்பு நாடுகளுக்கு பலபக்க கடிதம் ஒன்றை எழுதியமையும் அவர் சுட்டிக்காட்டினார். 

போர்க்குற்றங்கள் நடந்தாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான விடயங்களை ஐ.நா தீர்மானம் உள்ளடக்கியிருப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த தீர்மானத்தை ஆதரித்த இந்தியா வாக்களித்தமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு புத்துயிர் அளிப்பதாகவும் அதற்கு அழுத்தங்களை கொடுத்த தமிழ் நாட்டு மக்களுக்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் சார்பாக நன்றியை அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment