ஆயுதம் தாங்காத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விட்டு கொடுப்பிற்கு தயார் இல்லை
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை, இலங்கை வந்துள்ள கனடிய பாராளுமன்ற குழுவினர் சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம் பெற்றது.
இச்சந்திப்பில் கிரிஸ் அலெக்சாண்டர், ரிக் டிஸ்ட்ரா, வேர்ன் வைட், ஜோன் லைட் ஆகிய கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போருக்கு பிந்திய இன்றைய சூழலில் மனித உரிமைகள், மனிதாபிமான நடவடிக்கைகள், தேசிய இனப்பிரச்சினைகான அரசியல் தீர்வு முயற்சிகள் ஆகியவை தொடர்பில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பற்றியும், அவற்றிற்கு அரசாங்கம் இதுவரை தந்துள்ள பதில்கள் பற்றியும், அரசு செய்ய தவறியவை பற்றியும் மனோ கணேசனின் கருத்துகளை கனடிய பாராளுமன்ற குழு கேட்டு தெரிந்துகொண்டது.
கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு மனோ கணேசன் தெரிவித்ததாவது, கனடிய பாராளுமன்ற குழுவினரிடம் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறியுள்ளேன்.
போரினால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாரிய அழிவுகளுக்கு அரசாங்கம், விடுதலை புலிகள் ஆகிய இரண்டு தரப்பினருடன் சர்வதேச சமூகமும் தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டும். இது தொடர்பில் ஏற்கனவே ஐநா சபை மீது சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐநா செயலாளரின் அறிக்கையும்கூட குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்ச்சியாக தமிழ் மக்கள் தொடர்பில் பொறுப்புகூறும் பாத்திரத்தை சர்வதேச சமூகம் வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
ஐக்கிய இலங்கைக்குள், தேசிய இனப்பிரச்சினைக்கான அதிகார பரவலாக்கல் தீர்வு, மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்பு கூறல் ஆகியவை சம்பந்தமாக இதுவரையிலும் வெறும் வாக்குறுதிகள் மாத்திரமே தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளன. தற்சமயம் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலமாக சர்வதேசமும் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதாகவே நாம் கருதுகிறோம்.
இந்த வாக்குறுதி ஒரு செய்தி மாத்திரமே. இந்த செய்தி துன்பப்படும் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் நல்ல விளைவுகளை கொண்டு வரவேண்டும். அதுவரையில் அதை வெறும் செய்தியாக மாத்திரமே நாம் கருதுவோம். இந்த வாக்குறுதிகள் நடைமுறையாக வேண்டும். அதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். அதில் கனடா பாரிய பங்கை வகிக்க வேண்டும்.
அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு தெரிவுக்குழு அமைத்து அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை கலந்துகொள்ள அழைக்கின்றது. ஆனால் இதுவரையில் கூட்டமைப்பு இதில் கலந்துகொள்ள வில்லை. தேசிய இனப்பிரச்சனை தொடர்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும். எனவே பேச்சுவார்த்தை உள்ளடக்கம் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது.
தமிழ் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில், இலங்கையின் பல்வேறு அரசாங்கங்களுடன் தமிழ் தலைமைகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு ஆவணங்கள் உள்ளன. இந்த அரசாங்கத்தின் காலத்தில்கூட ஒரு அனைத்துக்கட்சி ஆவணம் உருவாக்கப்பட்டது.
கடந்தகால ஆவணங்களை அடிப்படையாககொண்டு அடிப்படை விடயங்கள் தொடர்பில் ஒரு இணக்கப்பாடு ஏற்படவேண்டும். மீண்டும் பேச்சுவார்த்தை என்று மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது. இதுதான் இன்றைய கட்டம். இந்த கட்டத்தை தாண்டிய பிறகே அரசாங்கத்துடன் தமிழ் தலைமை பேசவேண்டும் என்பதே எமது கருத்தாகும். இதுவே தமிழ் மக்களின் கருத்து எனவும் நாம் நம்புகின்றோம்.
எனது கருத்துகளுக்கு பதில் வழங்கிய கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்துடன் நாம் பங்காளிகளாகவே செயல்படுகிறோம். எமது வர்த்தக நலன் என்று இதில் எதுவும் கிடையாது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போதே கனடிய பிரதமர், இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு மறைமுக செய்தியை வழங்கியிருந்தார்.
இலங்கை அரசாங்கத்திற்கு பதில் வழங்க அவகாசமும் வழங்கி இருந்தார். போர்குற்றம் தொடர்பில் தொடர்பில் நாம் அரசு, புலிகள் ஆகிய இரு சாராரையும் கவனத்தில் எடுத்துள்ளோம். குறிப்பாக வன்னி போரின் இறுதி நாட்களில் ஆயுதம் தாங்காத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளது தொடர்பில் நாம் எந்தவித விட்டு கொடுப்பிற்கும் தயார் இல்லை.
அதேபோல் ஆயுதம் இல்லாமல் சரணடைந்தவர்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம். இவை விசாரிக்கப்பட வேண்டும். ஏனென்றால் நாம் ஒரு ஜனநாயக நாடு. மனித உரிமை தொடர்பில் உயரிய அளவுகோல்கள் எம்மிடம் உள்ளன. எவரும் இதை மீறுவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இலங்கை தொடர்பில் நாம் தொடர்ந்து அவதானம் செலுத்துவோம், என தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment