இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்தது அமெரிக்கா. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ள இந்தத் தீர்மான வரைவு, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த பிரேரணை தொடர்பிலான உப மாநாடு ஒன்றையும் இன்று வியாழக்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது.
அமெரிக்காவினால் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் வரைவு 47 அங்கத்துவ நாடுகளுக்கும் சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கண்டறிந்த விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்குப் பெரும் பங்களிப்பை வழங்கக்கூடியவை என்று அமெரிக்க சமர்ப்பித்த வரைவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிலர் காத்திரமான பரிந்துரைகளை வரவேற்றுள்ள அதேவேளை மனித உரிமைகள் தொடர்பாக அரசுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழு அக்கறை செலுத்தாமை தொடர்பில் இந்த வரைவில் கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட காத்திரமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் இந்த வரைவு இலங்கை அரசை வற்புறுத்துகிறது. அதேசமயம் இலங்கை மக்கள் அனைவருக்குமான நீதியையும், சமத்துவத்தையும், பொறுப்புக் கூறுதலையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்த வரைவு இலங்கை அரசைக் கேட்டுள்ளது.
நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பில் பரவலாகத் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பத்தகுந்த விசாரணை, காணாமற்போனோர் குறித்த விசாரணை வடக்கில் இராணுவத்தினரை குறைத்தல், பக்கச்சார்பற்ற காணிக்கொள்கையை நடைமுறைப்படுத்துதல், தடுத்து வைப்பதற்கான கொள்கைகளை மீளாய்வு செய்தல், பொது அமைப்புகளை பலப்படுத்தல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்றை எட்டுதல்.
எல்லோருக்குமான கருத்துச் சுதந்திரத்தையும், வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் பாதுகாத்து முன்னெடுத்தல், இவற்றுக் தேவையான சட்ட மறுசீரமைப்புகளை மேற்கொள்ளல் ஆகியன உள்ளிட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இந்த வரைவு இலங்கை அரசிடம் வலியுறுத்தி இருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைத் திட்டத்தின் படிமுறைகள் குறித்து தெளிவு படுத்துமாறும் இந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்தப் படிமுறைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையையும் இந்த வரைவு ஊக்குவிக்கிறது. இந்த உதவிகள், ஆலோசனைகள் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டமை குறித்த அறிக்கையை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ள 22 ஆவது மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வரைபில் கேட்கப்பட்டுள்ளது.
தற்போது ஜப்பானில் உள்ள இலங்கையின் மனித உரிமைகள் சிறப்புப் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்தத் தீர்மானத்தை எதிர்கொள்ள அடுத்த வாரம் ஜெனிவா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும் போது அதனை தோற்கடிக்க முடியும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment