ஐ. நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு பல நாடுகள் தமது ஆதரவை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், இந்திய அரசு, அமெரிக்கா முன்வைத்துள்ள இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சியினரின் குரல்களும் பாராளுமன்றத்தில் எம்.பிக்களின் மூலமாக வலியுறுத்தப்பட்டிருப்பதுடன் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
ஆனால், இந்திய மத்திய அரசு, அவர்களின் குரல்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பதால் இந்தியா, இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் என்ற செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
இதனால், கோபமடைந்த கோவை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் திரண்ட தோழர்கள், கோவை காந்திரபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு சோனியாகாந்தியின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், தீயிலிட்டும் கொளுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று நடந்த இந்த சம்பவத்தால் பதட்டத்துக்குள்ளான கோவை மாநகர பொலிஸார், அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், ‘’இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தால், தமிழகத்திற்கு வரும் காங்கிரஸாருக்கு தொடர்ந்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் செய்வோம்’’ என்று கோஷமிட்டுள்ளார்.
No comments:
Post a Comment