மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும்.
88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட்.
1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார்.
கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்தைத் தயாரித்துக் கொடுத்ததால், அதற்குக் கட்டணம் வாங்காததால், அவருக்கு எப்பொழுதும் அங்கே ஓர் அறை.
1972 இலங்கை அரசியலமைப்பு, அதைத் தொடர்ந்த தமிழர் நிலை, இவை எம்மை இணைக்கும் பாலம்.
மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றும் காந்தியத்தின் முயற்சி. இராசசுந்தரம், டேவிட் இருவரின் இடையறா ஈடுபாடு, இதில் என் சிறிய பங்களிப்பு.
1977 இனக் கலவரத்துடன் கொழும்பைவிட்டு வெளியேறினேன். யாழ்ப்பாணத்தில் 1978இல் தந்தை செல்வா நினைவுத் தூண் கட்டியெழுப்பும் குழுவின் செயலாளராக நான். திராவிடத் தூணாக 80அடி உயரத்தில் அமையும் வரைபடத்தைத் தந்தவர் வி. எஸ். துரைராசா. மொட்டையாக நிற்காமல் கூம்பாக்கிக் கலசத்தில் முடிக்குமாறு டேவிட் ஐயா கருத்துரைத்தால் 100 அடியாக அத் தூண் உயர்ந்தது. கட்டி முடிக்கும் வரை யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.
1979இன் பின் இலங்கையை விட்டகன்றேன்.
வன்னியில் காந்தியம் டேவிட், இராசசுந்தரம் இருவரின் இடையறா முயற்சி. வன்னி நிலத்தில் வன்முறைசார் இளைஞர்களின் பயிற்சி நிலையங்கள். வெளிநாட்டில் வாழ்ந்த இவை எனக்குச் செய்திகள்.
1983 வைகாசியில் டேவிட் கைதாகிறார். இலங்கை அரசின் பனாகொடைப் படைமுகாமில் தடுத்து வைக்கின்றனர். காந்திய வாதி, காந்தியம் இதழின் ஆசிரியர் எனினும் கொழும்பு அரசுக்கு டேவிட் வன்முறையாளர்.
இரு மாதங்கள் பனாகெடையில், பின்னர் கொழும்பு, வெலிக்கடைச் சிறைச் சாலையில்.
1983 ஆவணியில் இனக் கலவரம். வெலிக்கடைச் சிறைச் சாலையில் கொடுமைகள். யாவும் டேவிட் கண் முன்னே. மயிரிழையில் உயிர் தப்புகிறார் டேவிட்.
வெலிக்கடையிலிருந்து மட்டக்களப்புக்கு மாற்றம். அங்கு இரு மாதங்கள். மட்டக்களப்புச் சிறைச்சாலையை உடைத்துக் கைதிகளைத் தப்பவைத்தவர்களுள் உள்ளிருந்த டக்ளசு தேவானந்தாவும் ஒருவர்.
தப்பிய இளைஞர் யாவரும் விரைந்து படகில் தப்ப, வயதான இவர் மட்டும் தனித்து நின்றதால், 20 நாள்கள் தலைமறைவு வாழ்க்கை. திருகோணமலை, கேரதீவு எனக் கரந்து பயணித்துத் தலைமன்னாரில் இருந்து தனுக்கோடி வந்தடைகின்றனர் டேவிட்டும் வேறு பயணிகள் பதினொரு பேரும்.
மார்பளவு தண்ணீருக்குள் இறங்கிய டேவிட், கரையேறி நடந்து இராமேச்சரம் வருகிறார். மாலைகள் சூட்டி வரவேற்பு. சென்னை வருகிறார். 28 ஆண்டுகள் சென்னை வாழ்க்கை.
1986இல் சென்னைக்கு நான் வந்தேன். மீண்டும் டேவிட் ஐயாவுடன் என் தொடர்பு. தொடக்கத்தில் சென்னையிலும் அவர் உயிருக்கு ஆபத்து. எனவே சில நாள்கள் அவர் தலைமறைவு வாழ்க்கை.
கடந்த சில ஆண்டுகளாகச் சென்னை திருவல்லிக்கேணியில் ஆனைமுத்து ஐயாவுடன் இணைந்து பணிபுரிகிறார். Periyar Era என்ற ஆனைமுத்து ஐயாவின் ஆங்கில இதழுக்கு மாதந்தோறும் இலங்கை நிலவரத்தை எழுதி வருகிறார்.
கடந்த பல ஆண்டுகளாக அவர் மாதமிருமுறை கட்டாயமாக எனதில்லம் வருவார். காலை உணவுக்கு வருவார். ஓட்சுக் கஞ்சியை அவருக்காக வைத்திருப்பேன்.
இன்றும் காலை வந்தார். அமெரிக்கரான பேராசிரியர் போயில் ஈழத் தமிழருக்கு ஆற்றி வரும் நன்மைகளை எடுத்துரைத்தார். இரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார், உணவருந்தினார்.
என் வீட்டுக்கு எதிர்ப்புறமாக உள்ள கன்னிமாரா நூலகத்துக்குச் செல்வதாகச் சொல்லி விடைபெற்றார். வரலாற்று நாயகன் அவர். 38 ஆண்டுகாலத் தொடர்பு. ஈழத் தமிழரின் நன்மையே நம் இருவரின் அடித்தள நாதம். 2012 ஏப்பிரல் 24இல் தனது 88 ஆவது பிறந்த நாள் எனக் கூறிச் சென்றார். மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்கிறேன். அவரது சந்திப்பைப் பதிந்தேன், பார்க்க, பகிர்க.
No comments:
Post a Comment