Translate

Saturday 7 April 2012

மாலியில் தனிநாடு பிரகடனம், புலிகளுக்கு இருந்த அதே சிக்கல்களுடன்!


மாலி நாட்டின் வடபகுதியில் ராணுவத்துக்கு எதிராக போராடிவந்த போராளிக்குழு ஒன்று தனிநாடு பிரகடனம் செய்துள்ளது. மாலியில் சமீபத்தில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு அங்கிருந்த அரசு கவிழ்க்கப்பட்டது அதன் காரணத்தால் நாட்டில் உள்ள குழப்பத்தைப் பயன்படுத்தி, தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை தனி நாடாக பிரகடனம் செய்திருக்கிறது இந்த விடுதலை இயக்கம்.

NMLA (National Movement for the Liberation of Azawad) என்ற பெயருடைய இந்த விடுதலை இயக்கம் மாலியின் வடபகுதியில் உள்ள பாலைவனப் பிரதேசத்தை தனிநாடாகப் பிரிப்பதற்காக கடந்த சில வருடங்களாகவே போராட்டம் நடத்திவந்தது. மாலி நாட்டு ராணுவம் இவர்களுக்கு எதிராக யுத்தம் புரிந்து கொண்டிருந்தது.
அந்த ராணுவத்தின் சில இளநிலை அதிகாரிகள் அரசுக்கு எதிராக புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றி விட்டனர். அதையடுத்து, வடபகுதியில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த ராணுவம், எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு, தலைநகருக்குச் சென்றுவிட்டது.
கிடைத்த சந்தர்ப்பத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட விடுதலை இயக்கம், தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியுடன், அருகில் இருந்த வேறு சில பகுதிகளையும் பிடித்துக்கொண்டு, தனிநாடு பிரகடனம் ஒன்றைச் செய்துள்ளது.
“ஒரு நாடு என்ற அந்தஸ்தை அடைவதற்கு போதியளவு நிலம் எமது கட்டுப்பாட்டில் உள்ளது” எனவும் அறிவித்துள்ள NMLA விடுதலை இயக்கம், தமது புதிய நாடு (!) உலகின் மற்றைய நாடுகள் அனைத்தையும்போல அனைத்துலக சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இயங்கும்” எனவும் தெரிவித்துள்ளது.
“அஸவாட் (பாலைவனப் பிரதேசத்தின் பெயர்) நாட்டு பிரஜைகளான நாம், இன்று 2012, ஏப்ரல் மாதம், 6-ம்தேதி முதல் தனி நாடாக இயங்குவதை பிரகடனம் செய்கிறோம்” என்ற இவர்களது அறிக்கை அனைத்து நாடுகளின் அரசுகளுக்கம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகள் தமது தூதரகங்களை அஸவாட் நாட்டில் அமைக்க விரும்பினால், தமது தலைமையிடம் விண்ணப்பம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
இவர்களது தனிநாட்டு பிரகடனம் உடனடியாகவே உலக நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஆபிரிக்க யூனியன், “இவர்களது பிரகடனம் ரத்து செய்யப்படுகிறது” என்று அறித்திருக்க, பிரான்ஸ், “இந்த அறிவிப்புக்கு எந்த அர்த்தமும் கிடையாது” என்று கூறியுள்ளது. பிரான்ஸ் உடனடியாக கருத்து தெரிவித்ததன் காரணம், மாலி நாடு நீண்ட காலமாக பிரான்ஸில் காலனி நாடாக இருந்துவந்தது. பிரிட்டன், மாலி நாட்டில் இருந்த தமது தூதரகத்தையே தற்காலிகமாக மூடிவிட்டு, தூதரக அதிகாரிகளை திருப்ப அழைத்துக் கொண்டது.
ஆபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான எக்காவாஸ் (ECOWAS – Economic Community of West African States) நேற்று வெளியிட்ட அறிக்கையில், தனிநாட்டு பிரகடனம் செய்துள்ள போராளி இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கூறியிருந்தது. இன்று, அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி, மாலி நாட்டின் வட பகுதிக்கு ஆபிரிக்க கூட்டு ராணுவ படைப்பிரிவு ஒன்றை அனுப்பலாமா என்று ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
அதன் அர்த்தம், தனிநாட்டு பிரகடனம் செய்த போராளி அமைப்புடன் யுத்தம்!
உலக நாடுகள் இவர்கள் தனிநாடு ஒன்றை அமைப்பதற்கு எதிராக இருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஆச்சரியகரமாக, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக மேலைநாடுகள் எதிர் நிலைப்பாடு எடுத்த அதே காரணங்கள்தான், இங்கும் உள்ளன!
முதலாவது, முஸ்லீம் மத அமைப்பான இந்த விடுதலை இயக்கம், சில ஆண்டுகளுக்கு முன், தமது பகுதியில் இருந்த கிறித்துவ மக்களை இரவோடு இரவாக தமது பகுதியில் இருக்க கூடாது என்று வெளியேற்றியது. (விடுதலைப்புலிகள் இயக்கம், யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம் மக்களை இரவோடு இரவாக வெளியேற்றியது)
இரண்டாவது, தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பகுதிகளுக்குள் (அரசுக் கட்டுப்பாட்டு பகுதிகள்) ஆயுதங்களுடன் புகுந்து பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றது. (விடுதலைப்புலிகள் இயக்கம், சிங்கள பகுதிகளுக்குள் பொதுமக்களை சுட்டுக் கொன்றது)
மூன்றாவது, செப். 11 தாக்குதலின்பின் மேலைநாடுகள் ‘பயங்கரவாதத்தின் உச்சம்’ என்று பாகுபடுத்திய தற்கொலைத் தாக்குதல்களை இந்த இயக்கம் தொடர்ந்தும் செய்து வந்தது. (புலிகளுக்கும் அதே சிக்கல் கடைசிவரை இருந்தது)
இந்தக் காரணங்களால், NMLA இயக்கம், மேலை நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டிருந்தது. அப்படியான அமைப்பு ஒன்று தனிநாடு ஒன்றை அமைப்பதை எந்த நாடும் வரவேற்காது என்பது சிம்பிள் சைகாலஜி.
மேலேயுள்ள விவகாரங்களைவிட மற்றொரு சிக்கலும் உண்டு.
இவர்கள் தனிநாடாக பிரகடனம் செய்துள்ள பகுதியில் இவர்கள் மட்டும்தான் ஒரேயொரு தீவிரவாத இயக்கம் என்றில்லை. அந்தப் பகுதிக்குள் வேறு சில தீவிரவாத குழுக்களும் இயங்குகின்றன. அத்துடன், அல்-காய்தா ஆதரவு குழு ஒன்றும் அங்கு ஓரளவு பலத்துடன் உள்ளது. இந்த நிலையில், NMLA இயக்கம் தனிநாடு பிரகடனம் செய்திருப்பதால், மற்றைய குழுக்கள் போர்க்கொடி தூக்குவார்கள். விரைவில் ரத்த ஆறு ஓடும்.
வெளிநாடுகள் இவர்களது தனிநாட்டு பிரகடனத்துக்கு எதிராக உள்ளதைப் பற்றிக் கவலைப் படாமல், சுதந்திரக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் NMLA இயக்கமும், அவர்களை ஆதரிக்கும் மக்களும்.

No comments:

Post a Comment