Translate

Monday, 16 April 2012

பேரினவாதிகளின் நீலிக் கண்ணீர்; தமிழ் மக்கள் அறிவர்


ஆட்சிக்கு வரும் எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நல்லிணக்க சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் இதய சுத்தியுடன் இனப்பிரச்சினையைத் தீர்க்க ஆட்சியில் இருக்கும் போது முயல்வதே இல்லை. எனினும் அதன் பின்னர் பதவி போனதும் சுடலை ஞானம் பெற்றவர்கள் போல தமிழர் பிரச்சினை தொடர்பாக அக்கறை கொள்வது போல கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால் கடைசிவரையும் உருப்படியான எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவே மாட்டார்கள். பேரினவாதிகளின் இத்தகைய கபட நாடகங்களை இனங்கண்டு, எமது அரசியல் தீர்வை நாமே தீர்மானிக்க வேண்டும் .அதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்து பாடுபடும் இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
வட்டுக்கோட்டை கலைநகர் விளையாட்டுக்கழகத்தின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழர் பக்க நியாயங்களை வெளிப்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். இவற்றை ஒரு புறம் வரவேற்றாலும் இன்னொரு புறத்தில் இந்தக் கருத்தின் உண்மைத் தன்மை குறித்து கேள்வியும் எழுகின்றது. சந்திரிகா ஜனாதிபதியாக பதவி வகித்த போது இனப் பிரச்சினையைத் தீர்க்க இதய சுத்தியோடு முன்வரவில்லை. மாறாக தமிழர் தாயகத்தில் கொடும் போரையே ஏவிவிட்டார்.
அதற்குப் பின் ரணில் பிரதமர் ஆனவுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான நடவடிக்கைகளையும் குழப்புவதிலேயே சந்திரிகா குறியாக இருந்தார். இப்போது தமிழர்களின் பிரச்சினை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.சந்திரிகா மட்டுமல்ல, எந்தவொரு பேரினவாத அரசியல் வாதியும் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க மனதார விரும்புவதில்லை. இதனை தமிழ் மக்களும் நன்குணர்ந்துள்ளனர்.
இப்போது களநிலைமை நமக்கு சாதகமாக மாறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் சர்வதேசத்தின் ஆதரவு தமிழருக்கு இருப்பதை வெளிக்காட்டுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 24 நாடுகளையும் தன் பக்கம் இழுக்க இலங்கை அரசு படாதபாடு படுகிறது. ஏனெனில் இலங்கைக்கு எதிரான இன்னொரு தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதன் போது தனக்கு எதிரான முடிவு வரக் கூடாது என்பதற்காகவே இந்த முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது. அந்த முயற்சியின் ஒரு நடவடிக்கையாகவே இந்தியக்குழுவை இலங்கை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை இதன் மூலம் தன் பக்கம் இழுக்கலாம் என அரசு நம்புகின்றது. இத்தகைய வீணான முயற்சிகளை விடுத்து தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க அரசு முன்வந்தால் சர்வதேசத்திற்கு பயப்படும் நிலைமை மாறிவிடும். என்றார்.

No comments:

Post a Comment