இலங்கை செல்லவிருக்கும் இந்திய நாடாளுமன்ற குழுவின் பயணத் திட்டம் இலங்கை அரசின் விருந்துபசாரமாக இருப்பதாக அதிமுக தலைவி ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இந்திய நாடாளுமன்ற குழுவில் செல்ல இருக்கும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்திப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.
இனமோதலில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசு இலங்கையில் முன்னெடுத்துவரும் பல்வேறு திட்டங்களின் செயற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காகவே தாங்கள் இலங்கை செல்வதாகவும் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் அதிமுக சார்பில் ஒரு உறுப்பினர் இடம்பெறுவார் என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த குழுவிலிருந்து தனது உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக அ இ அ தி மு கவின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா புதன்கிழமை திடீரென்று அறிவித்திருந்தார்.
இந்திய நாடாளுமன்ற குழுவினரின் பயணத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறல்களை கேட்டறியவும் வாய்ப்பு இல்லாததால், தமது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த உறுப்பினரை விலக்கிக் கொள்வதாக ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்த நாடாளுமன்றக்குழுவினர், இலங்கைக்குச் செல்லும் பயணத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் பார்ப்பதை விட, இலங்கை அமைச்சர்களை சந்திப்பது, ஜனாதிபதியுடன் விருந்து போன்ற விஷயங்களே முக்கியத்துவம் பெறுகின்றன என்பதால் இதை அதிமுக புறக்கணிப்பதாக அவர் கூறியிருந்தார்.
ஜெயலலிதாவின் இந்த விமர்சனம் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சுதர்சன நாச்சியப்பன் ஜெயலலிதாவின் விமர்சனம் சரியல்ல என்றார். அவரது செவ்வியின் ஒலிவடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
No comments:
Post a Comment