Translate

Friday 13 April 2012

இலங்கையில் டான் விட்டோ கார்லியோன் குடும்பம்- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன்


இலங்கையில் டான் விட்டோ கார்லியோன் குடும்பம்- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன்
டான் விட்டோ கார்லியோனுக்கு என்றும் மரணமில்லை. மரியோ புசோவுக்கு கார்லியோன் அவரது கற்பனைப் பாத்திரம். இலங்கையில் கார்லியோன் வாழும் நவீன அரசியல் கதாபாத்திரம். புசோவின் கார்லியோனுக்கும் இலங்கையின் நவீன கார்லியோனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் பாசமிகு தந்தையர். இருவருமே தமது தொழிலை தமது வாரிசுகளுக்குக் கற்பித்தார்கள்.


தமது செல்ல மகனின் முகத்தை இரு கைகளாலும் ஏந்தி உச்சி மோந்து இருவருமே முத்தமிட்டார்கள்.  
இருவருமே குடும்பத்தை நேசிப்பவர்கள். சொந்தங்கள் பந்தங்கள் துணைவி, சகோதர சகோதரியர் என உணர்ச்சிகரமான பிணைப்புக் கொண்ட குடும்ப சாம்ராஜ்யத்தினையே இருவரும்; உருவாக்கினார்கள். எதிரிகள் எவரையும் இருவரும் விட்டு வைத்ததில்லை. திட்டமிட்டு அவர்களைக் கொலை செய்து முடித்தார்கள். கொலைகளைச் செய்வதில் இருவருக்கும் அறம் உண்டு. குடும்ப மதிப்பீடுகளையும், சகோதர பாசத்தையும், எதிரிகளைக் கொலை செய்யும் அமைப்பையும் இருவரும் இறுக்கமாகவும் கட்டுக்குலையாமலும் கட்டிக் காத்தார்கள்.

கார்லியோன் மிகுந்த கிறித்தவ மத நம்பிக்கை கொண்டவர். நவீன கார்லியோன் மிகுந்த பௌத்த நம்பிக்கை கொண்டவர். 
கார்லியோனுக்கு தமது மாபியா வியாபாரத்தைக் காத்துக்கொள்ள ஆலிவ் எண்ணெய் வியாபாரம் மூடுதிரையாக இருந்தது. நவீன கார்லியோனுக்கு தமது மாபியா அரசியல் அதிகாரத்தைக் காத்துக் கொள்ள இலங்கை தேசபக்தி மூடூதிரையாக இருக்கிறது. 

பிரான்சிஸ் போர்டு கொப்போலாவின் மூன்று பாகங்களிலான காட்பாதர் படத்தின் மூத்த மாபியா தலைவன் கார்லியோனாக நடித்த மார்லன் பிராண்டோ அமர கலைஞன். நவீன கார்லியோனாக நிஜவாழ்வுப் பாத்திரம் ஏற்றிருப்பவர் இலங்கை அரசின் தலைவன்.

இறுதி யுத்த காலப்பகுதியில் ஆவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் மெக்கே உள்பட, ஐ.நாவின்  இரு சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்கள் உடையன்கட்டு எனும் கிராமத்தில் சிக்குண்டிருந்த போது, தனியார் ஆரம்ப பள்ளி ஒன்றின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனையொன்றின் மீது எறிகணை வீச்சு நடைபெற்றதாகவும், அவை ஐ.நாவின் பாதுகாப்பு பதுங்குகுழிகளுக்கு மிக அருகில் வீழ்ந்து வெடித்ததால் கொல்லப்பட்ட, படுகாயமடைந்த பொதுமக்கள் தொடர்பான ஆதாரங்கள் ஐ.நா ஊழியர்களால் புகைப்படங்களாக எடுக்கப்பட்டதாகவும் சேனல் நான்கு ஆவணப்படத் தொகுப்பாளர் ஜோன் ஸ்நோ தெரிவிக்கிறார்.  

நடைபெற்றுக்கொண்டிருந்த கடும் யுத்தத்தில் இது ஒரு சிறிய அங்கமாகவே கருதப்படும்போதும், பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு ஆதரமாக இவை இருக்கின்றன என்கிறார் அவர்.

இத்தாக்குதல்களை அடுத்து, குறித்த இரு ஐ.நா பணியாளர்களும் செய்மதி தொலைபேசிகள் மூலம் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கொழும்பிலிருந்த ஐ.நா தூதரக அதிகாரிகளின் ஊடாக, இலங்கை அரச படைகளின் இராணுவத்தலைவர்களுடனும், பாதுகாப்பு அமைச்சரான கோதபாய ராஜபக்சேவுடனும் தொடர்பு கொண்டு உடனடியாக எறிகணைத் தாக்குதல்களை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதையடுத்து குறித்த ஐ.நா பதுங்குகுழிகள் அமைந்திருந்த பகுதியில் எறிகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும், எனினும் யுத்த சூனிய பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், தாம் தங்கியிருந்த கொட்டகைக்கு அருகிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடந்து கொண்டே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

எறிகணைத் தாக்குதல்களை எங்கு, எப்போது, எப்படி மேற்கொள்வது எனும் கட்டுப்பாட்டு அதிகாரம் அரச படைகளிடமும், பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்சேவிடமும் இருந்துள்ளதை இச்சாட்சியங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என சேனல் நான்கு சுட்டிக்காட்டுகிறது. 

முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட இருந்த பிரேம்குமார் குணரட்ணம், மற்றும் அந்தக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும் மகளிர் பிரிவுத் தலைவியுமான திமுது ஆட்டிக்கல ஆகியோரை  கொழும்பில் வைத்து ‘சிலர்‘ வெள்ளை வானில் கடத்திச் சென்றனர். சர்வதேச ரீதியாக எழுந்த கடுமையான அழுத்தங்களை அடுத்தும், குணரட்ணம் அவர்களும் அதனைத் தொடர்ந்து திமுது அவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். 

கார்லியோனின் சகோதருரும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சருமான டான் நெம்பர் டூ இப்போது காட்சிக்குள் பிரவேசிக்கிறார். ஆஸ்திரேலியப் பிரஜையான பிரேம்குமார் இலங்கைக்குள் வந்ததற்கான ஆதாரம் தருமாறு சவால் விடுக்கிறார். ஆஸ்திரேலிய அரசு தகவல்களை முன்வைக்க, அடுத்த நாள் டான் நம்பர் டூ தொலைக்காட்சியில் தோன்றி பிரேம்குமாரை விடுவித்து, சட்டவிரோதமாக 5 மாதகாலம் இலங்கையில் தங்கியிருந்ததற்காக அவரை நாடுகடத்துகிறார். அடுத்த நாள் கடத்தல்காரர்கள் திமுது ஆட்டிக்கலவையும் விடுவிக்கிறார்கள்.

கடத்தியவர்கள் இலங்கை இராணுவத்தினர் என்கிறார் பிரேம்குமார். பிரேம்குமார் தான் கடத்தப்பட்ட அதே இடத்தில் இருந்தார் என அடையாளம் சொல்கிறார் திமுது. இருவரையும் கடத்தியவர்கள் ஒரே அடையாளத்தவர்களே என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

நேரடியான சீனிற்கு வந்து டான் நெம்பர் டூ அறிவித்த பின்னால், இருவரும் ஒருவர் பின்னாக ஒருவர் விடுவிக்கப்படுகிறார்கள். டான் நெம்பர் டூ தனக்கும் கடத்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். சவால் விட்டவரும், விடுதலை செய்தவரும் அவர்தான். டான் நெம்பர் டூவுக்கு இதில் சம்பந்தம் இல்லை என கடத்தல்காரர்கள் திரும்பச் திரும்பச் சொன்னார்கள் என்கிறார் திமுது. 

அசின் முன்னால் நடந்து வர, பின்னால் சிராந்தி பட்டுத்தி வருகிறார். இசை மெலிதாக ஒலிக்கிறது. மலர்களை மிதித்தபடி இந்தி நடிகர் சுரேஷ் ஓபராய் காட்சியில் தோன்ற, அவரைத் தொடர்ந்து இளைய டான் கழுத்தில் மாலையுடன் தோன்ற இடி முழக்கமென டிரம் சத்தம் அதிர்கிறது. ராணுவ அணுவகுப்பு காட்சியாகிறது. தெருவில் போகிற வருகிற எவரும் கண்டு கொள்ளாத நிலையில் டான் நம்பர் த்ரி அங்குமிங்கம் ஓடியபடி, நல்ல வெய்யிலில் நின்றபடி கத்திக் கொண்டிருக்கிறார் : கடத்தல் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நகைச் சுவையாக மாற்றமடைந்துள்ளது. கடத்தல் சம்பவம்  தொடர்பில் முன்னணி சோசலிச கட்சியினர் பாரியளவில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்கள். பல மில்லியன் ரூபா செலவிட்டிருந்தாலும் இந்தளவுக்கு கட்சியை பிரச்சாரம் செய்திருக்க முடியாது என்றபடியிருக்க, காமெடியன் மெர்வின் இப்போது பிரவேசிக்கிறார். நடந்தது ‘ஊமை இதயம்’ போன்றதொரு தொலைக்காட்சி நாடகம் என்கிறார். மரத்தடி கல்மேசையில் அமர்ந்திருக்கும் கார்லியோனின் காலடியில் எதனையோ பொறுக்கிக் கொண்டிருக்கிறார் அவர்.

கார்லியோன் திட்டமிட்டபடி அனைத்தும் செயகிறார். காலை காப்பி எத்தனையாவது நிமிடம் வர வேண்டும் என்பதில் இருந்து, எந்த நேரத்தில் எவர் தலை அறுக்க வேண்டும் என்பது வரை பொறுப்புக்களை அவர் டான் டூ, டான் த்ரி, இளைய டான் எனப் பிரித்துக் கொடுத்துவிட்டு, அவர் புத்திஸ்ட் எதிக்ஸ் படித்துக் கொண்டிருக்கிறார். எதிரிகள் எதனைச் சொன்னாலும் உடனடியாக அவரது குடும்பத்தவரும், சுற்றத்தாரும், தளபதிகளும், ராஜதந்திரிகளும், அவர்களது வாகன ஒட்டுனர்களும் உடனடியாக, முழுமையாக மறுக்க வேண்டும் என்பது அவரது மாறாத கட்டளை என ஏற்பாடு செய்திருக்கிறார்.

மாபியா தலைவன் கார்லியோனாக வேடமேற்று நடித்த மார்லன் பிராண்டோவினது பாத்திரச் சித்தரிப்பு உலகின் தலைசிறந்த நடிப்புக்கான உதாரணமாகச் சொல்லப்படுகிறது. கொலையும் கடத்தலும் அவரது குடும்பத்தொழில். புனைவுப்பாத்திரமான அவரது வாழ்வு இத்தாலியின் சிசிலி பிரதேசத்து மாபியா கலாச்சாரம், அமெரிக்காவுக்கு அவர்களது குடிபெயர்வு, அன்றைய வரலாற்றுப் பின்னணி, அவர்கள் குடும்பமாக இருந்து அனைத்தையும் செய்தமை, அதற்கு அறம்சார் விளக்கமும் கொடுத்தமை  போன்றவற்றால் உலக சினிமாவில் செல்லுலாய்டு காவியமாக ஆகியது. நிஜத்தில் அது இரத்தம் தோய்ந்த நிகழ்;வாகவே இருந்திருக்கும். பிராண்டோ கார்லியோனாக மட்டுமே நடிக்கவில்லை. அவர் முதிய வயது காதல் மன்னன் காசினோவாகவும் நடித்தார். செவ்விந்திய மக்களது வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுத்த அவர் தலைசிறந்த கலைஞனாகவும்; போற்றப்படுகிறார். இலங்கை கார்லியோனுக்கு இருப்பதெல்லாம் இறுகிய தாடை கொண்ட, மாறாத கொலை முகம். இரத்தம் தோய்ந்த கரங்கள். இனவன்மம் உறைந்த மனம். கனவுத் திரையில் மெல்ல மெல்ல மறைந்து வந்த கார்லியோன் மாபியா குடும்பம், நனவில் இலங்கையில் இரத்தமும் சதையுமாக, சகோதர பாசத்துடன் இறுக்கமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. 

No comments:

Post a Comment