மீண்டும் ஒரு சிறிலங்கா-இந்தியா கூட்டுத்தயாரிப்பில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட உள்ளது. போரிற்கு பின்னரான தமிழர்களது வாழ்வைப் பற்றி ஆய்வு செய்யவென இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு வரும் 16ம் திகதி சிறிலங்கா புறப்பட்டுச் செல்ல உள்ளது.
இந்தியா பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவியான பா.ஜ.க. தலைவர் சுசுமா சுவராச் தலைமையில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்கின்றனர்.
தமிழர்களது நலனில் அதிதீவிர அக்கறையும் பாசமும் கொண்ட தி.மு.க. காங்கிரசு மார்சிட் கம்யுனிட்டு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாடகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கூண்டோடு கொன்று புதைக்கப்பட்டு மூன்று வருடங்கள் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் தமிழர்களது நிலை ஆய்விற்குட்பட்டதாகவே இருக்கின்றது. ஜநாவில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தின் போது இந்தியாவின் பின்கதவு வாசல் வழியாக முயற்சித்து வலுவிழக்கச் செய்தது மட்டுமல்லாது தொடர்ந்து காப்பாற்றும் முயற்சியாகவே இந்த குழுவினரது பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்ரல்-16ம் திகதி சிறிலங்கா செல்லும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மறுநாள் சிறிலங்கா பொருளாதார மேம்பாட்டு அமைச்சரும் கொலைவெறியன் மகிந்தவின் ககோதரருமான பசில் ராசபக்சே வெளியுறவுத்துறை அமைச்சர் பீரிஸ் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரையும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துப் பேசுகின்றனர்.
பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் இவர்கள் சந்திக்கின்றனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரை சந்திக்கின்றனர்.
ஏப்ரல்-18 அன்று வடபகுதிக்கு செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய தமிழர் பகுதிகளிற்கு சென்று மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை(?) வழங்கும் நிகழ்ச்சியிலும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். அன்றைய இரவை யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கவும் ஏற்பாடாகியுள்ளதாம்.
இதைத் தொடர்ந்து ஏப்ரல்-19ம் தேதி இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை பார்வையிட்டு மறுநாள் மட்டக்களப்பிற்கு செல்கின்றனர். அங்கும் இந்திய அரசின் நிதிப்பங்களிப்புடனும் ஒத்துழைப்புடனும் மேற்கொள்ளப்படும் திட்டங்களை பார்வையிடவே செல்கின்றனர்.
நிறைவாக தமிழின அழிப்பினை மேற்கொண்டு இரத்தக் கறையுடன் வலம்வரும் கொலைபாதகன் மகிந்தவை சந்தித்து கலந்துரையாடிவிட்டு காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு இந்தியா திரும்புகின்றனர்.
இதுதான் இந்திய எம்.பி.கள் குழுவின் நிகழ்ச்சி நிரல். போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை பார்வையிடப் போவதாக பிரச்சாரம் செய்து சிறிலங்கா செல்லும் இந்திய எம்.பி.கள் குழு தமது பயணத்தில் பெரும்பாலும் இந்திய அரசின் நிதி உதவியுடனும் ஒத்துழைப்புடனும் மேற்கொள்ளப்படும் முதலீட்டுத் திட்டங்களைப் பார்வையிடவே முக்கியமாக செல்வது இந்த நிகழ்ச்சி நிரல் வெளிப்படுத்துகின்றது.
முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை பார்வையிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் என்ற பெயரில் காடுகளில் அனாதைகளாக விடப்பட்டுள்ள தமிழர்களை இவர்கள் பார்வையிட வாய்ப்புகள் இருக்காது. இவர்கள் விரும்பினாலும் தான் நினைத்ததை விட ஒரு துரும்பைக் கூட மகிந்த காட்டமாட்டான்.
இது சிறிலங்கா செல்லும் இந்திய எம்.பி.கள் குழுவிற்கு நன்றாகவே தெரியும். அவர்கள் செல்வது ராசபக்சேவின் அழைப்பில் அல்லவா. ராசபக்சே தனக்கு சாதகமானதாகவே இந்த பயணத்தை திட்டமிட்டுள்ளார்.
இந்திய எம்.பி.கள் குழு பயணம் குறித்து முழுத்திருப்தி தெரிவித்து சிங்கள அரசிற்கு நற்சான்று வழங்கும் என்பது உண்மை. அதற்காகத்தானே இவர்கள் அங்கு செல்வதும் அதற்கான முன்னேற்பாடுகளில் சிங்களம் இறங்கியுள்ளது.
தமிழர் தாயகத்தில் இராணுவமுகாம்களை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற அம்சம் நல்லிணக்க குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அனைத்துலக நாடுகளும் வலியுறுத்துவதும் அதனையே.
தற்போது அவசர அவசரமாக இந்திய எம்.பி.கள் குழு பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பாதையில் உள்ள சிறிலங்கா இராணுவ காவலரண்கள் முகாம்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டு வருகின்றன.
அப்பதானே தமிழர்பகுதி அமைதியாக உள்ளது. அங்கு இராணுவ பிரசன்னமே இல்லை. நாங்கள் சென்ற இடங்கள் எங்கும் எந்த இராணுவ முகாமையோ காவலரணையோ காணவில்லை என இந்திய எம்.பி.கள் குழு அறிக்கை கொடுக்க வசதியாக இருக்கும்.
இந்திய எம்.பி.கள் குழுவினரது பயணத்தில் அ.தி.மு.க. தரப்பில் இருந்து யாரும் பங்குபற்றமாட்டார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதன் பின்னணியில் தமிழர்களது எழுச்சியை நிரந்தரமாக முடக்கும் தொடர் நடவடிக்கையின் பகுதியாகவே கருதவேண்டும்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்று பல மாதங்கள் ஆனபின்னும் ஈழத்தில் உள்ள எமது உறவுகளின் உண்மைநிலையினை கண்டறிய எதுவித முயற்சியும் எடுக்கவில்லை. கண்டிப்பாக ராசபக்சே அதற்கு ஒத்துழைக்க மாட்டான்.
செயலலிதா விரும்பியிருந்தால் ஈழத்தமிழர் தரப்பில் உள்ள அரசியல் தலைவர்களையோ மக்கள் பிரதிநிதிகளையோ மதத்தலைவர்களையோ வரவழைத்து உண்மை என்னவென்று அறிந்து கொண்டிருக்கலாம் அல்லவா. அதற்கும் ஜெயலலிதாவிற்கு விருப்பமில்லை.
ஏன் என்றால் நாங்கள் அறிந்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.கள் உள்பட ஈழத்தமிழ் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டு பலமாதங்களாக காத்திருக்கின்றனர்.
தற்போது இல்லாவிட்டாலும் வரும் காலத்திலாவது காங்கிரசு கட்சியுடன் கைகோர்க்க வேண்டி வரும் என்ற நிலையினை மனதில் வைத்திருக்கும் ஜெயலலிதா தமிழர் நலன்களின் அடிப்படையில் எப்போதுமே செயற்படப் போவதில்லை.
முள்ளிவாய்க்கால் மரணங்கள் தமிழகத்தில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நீறு பூத்த நெருப்பாக தமிழர்களின் நெஞ்சங்களில் கனன்று கொண்டுள்ளது. அதற்கு உருவம் கொடுத்து தமிழ்த் தேசியத்தை எழுச்சிபெற தமிழ் உணர்வாளர்களும் ஆர்வலர்களும் தீவிர முயற்சி எடுத்து வருகையில் அதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கிவிடக் கூடாது என்பதற்காக ஜெயலலிதா தானே அந்தக் களத்தில் குதித்து போராடுவது போன்று பாவனை செய்து வருகின்றார்.
தொடர்ந்து இந்திய அரசும் தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகளும் தமிழர்களை கிள்ளுக்கீரையாக கருதி தமிழர்களது தலையில் மிளகாய் அரைக்கும் வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழர்கள் நாம் சிறுபிள்ளைத்தனமான காரணங்களை முன்னிறுத்தி இன்றும் பிளவு பட்டிருப்பதால் இவர்களது வேலை சுலபமாகிவிடுகின்றது. தமிழர்களே நாம் ஓரினமாக இணையவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. சிந்திப்பீர் தமிழர்களே!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
No comments:
Post a Comment