ஜெனீவாவில் அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அதனால் இலங்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. அந்தத் தீர்மானத்திற்கு நாம் உடன்படப் போவதில்லை. கட்டுப்படப்போவதுமில்லை என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின்போது ஜெனீவா விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில் : ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டதும் நிறைவேற்றப்பட்டிருப்பதுமான இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் ஆரம்பம் முதலே நாம் மாறாத நிலைப்பாட்டிலேயே இருந்தோம்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் பிரேரணையில் திருத்தம் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என இந்தியாவும் அமெரிக்காவும் எம்மிடத்தில் கேட்டன. எனினும் அதற்கு நாம் உடன்படவில்லை. நாம் எமது நிலைப்பாட்டில் மிகத் தெளிவாகவே இருந்தோம்.
மேற்படி பிரேரணைக்கு அடிபணிவதில்லை என்ற எமது தீர்மானத்தால் எமது நாட்டுக்கு பாரிய நன்மைகள் கிட்டியுள்ளன. நாம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பின் வேறு பலன்களே கிடைத்திருக்கும்.
ஆரம்ப காலங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற நிறுவனமே இருந்தது. எனினும் அந்த நிறுவனம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது திருப்தி கொண்டிருக்கவில்லை. இதன் பின்னணியில் தான் மனித உரிமைகள் பேரவை என மாற்றியமைக்கப்பட்டது.
இன்று மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமை கொண்டிருக்கின்றன. இந்த 47 நாடுகளில் 11 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாகும். இந்த 11 நாடுகளின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில் அவை அந்தந்த நாடுகளின் தலைநகரங்களில் தீர்மானிக்கப்படுவதில்லை. லிஸ்பன் உடன்படிக்கையின் பிரகாரம் அதன் அதிகாரங்கள் அனைத்தும் பிரசல்ஸ் நகருக்கே வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஐரோப்பிய ஒன்றியமே இதனைக் கையாளுகின்றது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் என்னுடன் தொடர்பு கொண்டு பேசிய சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் பிரேரணையானது காலத்துக்கு ஏற்றதாக இல்லை என்று கூறியிருந்தனர். இதேவேளை தமது கருத்துகள் இவ்வாறானதாக இருக்கின்ற போதிலும் பிரேரணைக்கு வாக்களிக்கும் விடயத்தில் தம்மால் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்றும் கூட்டுப் பொறுப்புடனேயே செயற்பட வேண்டியிருக்கிறதாகவும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இதனைப் பார்க்கும் போது விவகாரம் பேசப்படுவதற்கு முன்னரே மேற்படி ஐரோப்பிய நாடுகள் பதினொன்றும் முடிவுகளை எடுத்து விட்டன. எனவே ஜெனீவா பேரவை ஓர் அரசியல் மயப்படுத்தப்பட்ட சபையாகவும் நியாயத்தை தாபிக்கக்கூடிய சபையாக இல்லை என்றும் ஐரோப்பிய பிரதி நிதிகள் கூறுகின்றனர். இதனாலேயே நாம் மனச் சாட்சிக்கு அமைவாக தீர்மானம் எடுத்தோம். இது இவ்வாறிருக்க அமெரிக்க காங்கிரஸின் வெளியுறவுக் கொள்கை விருப்புக் குழுவின் தலைவர் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையானது கள்வர்களின் குகையாக இருப்பதாக விமர்சித்திருந்தார்.
அத்துடன் தற்போதைய ஜெனீவா பேரவையின் அங்கத்துவத்தை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதுடன் பேரவைக்கு மாற்றீடாக மாற்று சபை ஒன்றை அமைக்குமாறும் அவர் கோரிக்கையொன்றையும் முன் வைத்திருந்தார்.
கடந்த 22 ஆம் திகதி அமெரிக்க தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பதாக இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் ஒன்றும் அங்கு நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பில் பேரவையில் பேசிய இஸ்ரேலிய பிரதிநிதி பாரதூரமான மூன்று விடயங்களை முன்வைத்திருந்தார். அதாவது ஜெனீவா பேரவையானது அரசியல் கலந்ததாகவும் நயவஞ்சகத்தன்மையுடையதாகவும் அத்துடன் ஒருதலைப்பட்சமானதாகவும் செயற்படுகின்ற நிறுவனமாக செயற்படுவதாகக் குறிப்பிட்டார். அது மாத்திரமின்றி ஐக்கிய நாடுகள் சபையுடனான தனது அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேரவையின் அதிகாரிகள் எவரும் இஸ்ரேலுக்குள் வர முடியாது. ஆவணப்பரிமாற்றங்கள் இடம்பெற முடியாது என்றும் உறுதியாகக் கூறினார். இவ்வாறான நிலையில் தான் இலங்கைக்கு எதிரான பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கு எதிரான பிரேரணை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ரஷ்ய பிரதிநிதி மேற்படி பிரேரணையின் மூலம் பேரவையானது தனக்குத் தானே அவமானத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றது என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்த போது தெரிவித்திருந்தார். இது அரசியல் நோக்கத்திற்காகவே சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நிலைமைகள் இவ்வாறிருக்கும்போது மேற்படி பிரேரணைக்கு நாம் ஆதரவு தெரிவித்திருப்போமெனில், இல்லாவிட்டால் ஏற்றுக்கொண்டிருப்போமெனில், அது எமது நாட்டுக்குப் பாதகமாகவே அமைந்திருக்கும். அதுமாத்திரமின்றி நாட்டுக்கு இழைக்கும் துரோகமாகவும் அமைந்திருக்கும். ஆகையால் தான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு நாம் தயாரில்லை என்று உறுதியாகத் தெரிவித்ததுடன் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் முகம் கொடுக்கத் தயாராகவே இருப்பதாகவும் கூறினோம்.
எது எவ்வாறிருப்பினும் பிரேரணை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற போதிலும் அது இங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. அரசாங்கமானது இங்கு ஏற்கனவே வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது. அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிக்க முடியாது. எமது விடயங்களை நாமே கையாள்வோம். எமக்கான எமது வழிமுறைகளை ஜெனீவாவுக்கு வழங்கி விட நாம் தயாரில்லை. எமது மக்களின் நலன்கள் தொடர்பில் எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப தூரநோக்குடன் சிந்தித்து அரசாங்கம் செயற்படும் என்றார். _
No comments:
Post a Comment