Translate

Thursday 19 April 2012

அதிகாரப் பகிர்வு மலையக தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படல் வேண்டும்: மனோ _


  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு வலியுறுத்த வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது.

அதேபோன்று அதிகாரப் பகிர்வை வடக்கு கிழக்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் மலையக தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். 



நேற்று செவ்வாய்க்கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வைத்து இந்தியக் குழுவினரை சந்தித்தபோதே மனோ கணேசன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்தும் இந்தியா அக்கறை காட்ட வேண்டும். தேசிய இனப்பிரச்சி னைக்கான தீர்வு கூட்டமைப்பினதும் அரசாங்கத்தினதும் பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை.

மலையக மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே அதிகாரப் பகிர்வு வட, கிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படாமல் தமிழர்கள் வாழும் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மலையக சமூகத்தினரின் தற்போதைய நிலைமையை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது வறுமையிலும் சுகாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சிறுபான்மை இன மக்கள் பிரச்சினைகளை உறுதிப்படுத்தியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டியது இந்தியாவின் பொறுப்பு" என அவர் கூறினார். ___

No comments:

Post a Comment