Translate

Saturday, 12 May 2012

ஈழத்தமிழர் பிரச்சனை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் பாஜகவின் மாநில மாநாட்டில் நிறைவேற்றம்


ஈழத்தமிழர் பிரச்சனை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் பாஜகவின் மாநில மாநாட்டில் நிறைவேற்றம்

இலங்கையில் ஈழத்தமிழர்கள் ‘இனப்படுகொலை‘ செய்யப்பட்ட போது அதை மத்திய அரசோ, அதன் மாநிலக் கூட்டாளியான திமுகவோ தடுப்பதற்கு முன்வரவில்லை என்று பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் நேற்று ஆரம்பமான பாஜகவின் மாநில மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய அவர்,
தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கை முக்கியமாகப் பதிலளிக்க வேண்டும் என்று நான் கொழும்பிடம் கூறியுள்ளேன்.

சுஸ்மா சுவராஜின் பயணத்தின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு கொடுத்தனுப்பிய செய்தி ஒன்றில், இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். என்றும் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய பாஜகவின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடுவும், இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மத்திய அரசு வேடிக்கை பார்த்ததாக குற்றம்சாட்டினார்.
அதேவேளை, இந்தக் கூட்டத்தில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து அத்வானி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அவர், சமகால அரசியல் சூழல் குறித்து தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை.
இதற்கிடையே, நேற்று பாஜகவின் மாநில மாநாட்டில், ஈழத்தமிழர் விவகாரம் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும், இலங்கை அரசை மத்திய அரசு கண்டித்து, தமிழர்களை மீள்குடியமர்த்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வுக்கு எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை சென்று வந்த சுஸ்மா சுவராஜ் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அங்குள்ள தமிழர்களின் புனர்வாழ்வுக்கு உதவி செய்யவும், தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை நிலை நாட்டவும் இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்துடன் இந்தியாவின் பங்கு முடிந்து விடவில்லை. அது இன்னமும் செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன.
இந்தியா அணுசக்தி வல்லமைபெற்ற நாடாக இருந்த போதும் சிறிய நாடு ஒன்றின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment