கனேடிய தமிழர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்? சன் நியூஸ் நெட்வேக்
கிளிநொச்சியில் வைத்து கனேடிய தமிழ் பொதுமகன் கொல்லப்பட்டமைக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கனடாவின் சன் நியூஸ் நெட்வேக் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
மொன்றியலை சேர்ந்த மகேந்திரராஜா அந்தோனிபிள்ளை என்பவரே கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கனேடிய பொதுமகனின் சொத்துக்களை சுவீகரிப்பதற்காகவே இலங்கை இராணுவத்தினர் அவரை கொலை செய்தனர் என்று ஜெயா கோபிநாத் என்ற தமிழ்நெட் ஸ்தாபக ஆசிரியர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட அந்தோனிப்பிள்ளை, கிளிநொச்சியில் 8 வியாபாரத் தளங்களை கொண்டிருந்தார்.
இந்தப்பகுதியில் அதிகளவான இராணுவப் பிரசன்னமும் உள்ளது.
ஏற்கனவே அந்தோனிப்பிள்ளையின் இரண்டு வியாபாரத்தளங்கள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டன. எனினும் அதற்காக நட்டஈடுகள் எவையும் அந்தோனிப்பிள்ளைக்கு வழங்கப்படவில்லை.
இதேவேளை தமது வீட்டுக்கு மின்சாரம் பெற்றுக்கொள்வது தொடர்பில் அந்தோனிப்பிள்ளை, உள்ளுர் இராணுவத்தினருடன் முரண்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
மே மாத முற்பகுதியில் அந்தோனிப்பிள்ளை, இலங்கை இராணுவத்தினரால் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தார்.
உள்ளுர் பெண் ஒருவர் தொடர்பிலேயே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, தமது மைத்துனரான அந்தோனிப்பிள்ளை, இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை தம்மால் உறுதிப்படுத்தப்பட முடியவில்லை என்று அவரின் உறவினரான பெஞ்சோ பூனே என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அந்தோனிப்பிள்ளையின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கனடாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிக்கிரியை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று இடம்பெறவுள்ளது.
அந்தோனிப்பிள்ளை, மொன்றியலில் தமிழ் சமூகத்தின் மத்தியில், தளபாட வடிவமைப்பாளராக செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment