Translate

Sunday 13 May 2012

ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்ட சிவன்கோவிலின் சின்னங்கள் சாவகச்சேரியில் மீட்பு!


ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்ட சிவன்கோவிலின் சின்னங்கள் சாவகச்சேரியில் மீட்பு!

யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற கட்டிடம் இருந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர், பிரித்தானியர் காலத்தில் இப்பகுதியில் இருந்த சிவன் ஆலயம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் நீதிமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கலாம் என யாழ். பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் புஷ்பரத்தினம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியர் காலம் தொட்டு சாவகச்சேரியில் இயங்கிவந்த உயர்நீதிமன்றக் கட்டிடங்கள் தற்போது அங்கிருந்து முற்றாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் மீண்டும் புதிய நீதிமன்றம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கான அத்திவாரம் வெட்டும் பணி நடந்துவரும் இடங்களில் வரலாற்றுப் பெறுமதி மிக்க தொல்பொருட் சின்னங்கள் காணப்படுவதாக சோலையம்மன் கோவில் பிரதமகுரு வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜாவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதன் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பேராசிரியர் புஷ்பரட்ணம், தொல்லியற்துறை ஆய்வு உத்தியோகத்தர் மதியழகன் ஆகியோர் நீதிமன்றக் கட்டிடங்கள் இருந்த இடத்தில் மிகப்பழைய ஆலயம் ஒன்று இருந்து அழிந்ததற்கான சான்றுகளை அடையாளப்படுத்தி உள்ளனர்.
தற்போதைய நீதிமன்ற வளவில் இருந்த பிற்காலக் கட்டிடங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டிருந்தும் அந்த பிரதேசம் மட்டுமே சற்று மேடாகக் காணப்படுகிறது.
இதற்கு போத்துக்கேயர் அல்லது ஒல்லாந்தர் ஆட்சியில் அழிக்கப்பட்ட அல்லது அழிவடைந்து போன ஆலயத்தின் அழிபாடுகள் அவ்விடத்தில் புதையுண்டிருப்பதே காரணமாக இருக்கவேண்டும் என பேராசிரியர் புஷ்பரத்தினம் தெரிவித்துள்ளார்.
தற்போது இவ்விடத்தில் சதுர வடிவில் வெட்டப்பட்டுவரும் ஒவ்வொரு ஆழமான குழிக்குள்ளும் செறிந்த அளவில் செங்கட்டிகளும், பொழிந்த முருகக்கற்களும் வெளி வந்துள்ளதைக் காணமுடிகிறது.

No comments:

Post a Comment