Translate

Friday, 4 May 2012

கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைப்பதை விடுத்து பேச்சு நடத்துமாறு அரசை வலியுறுத்துங்கள்; ரவூப்புக்கு சுமந்திரன் சுட்டிக்காட்டு


கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைப்பதை விடுத்து பேச்சு நடத்துமாறு அரசை வலியுறுத்துங்கள்; ரவூப்புக்கு சுமந்திரன் சுட்டிக்காட்டு
news
தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்பை வலியுறுத்துவதைவிட இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதலில் அரசாங்கத்தை முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்த வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட சந்திப்பு ஒன்றிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அச்சந்திப்பின்போது சுமந்திரன் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நாம் ஒருபோதும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பங்குபெற மாட்டோம் என அறிக்கவில்லை. பேச்சுவார்த்தைகளின்போது, அரசாங்கம் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவோம். நாங்கள் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்குபற்றாது என பிழையான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெரிவுக்குழு அமைப்பது தொடர்பாக அரச அமைச்சர்கள் பேசி வருகின்ற போதிலும் இது தொடர்பில் ஆதரவு பெரியளவில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்பை வலியுறுத்துவதை விடுத்து, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு முதலில் அரசாங்கத்தை வருமாறு வலியுறுத்த வேண்டும்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்கும் வரையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரை செய்வது குறித்து சிந்திக்கப்போவதில்லை எனவும் சுமந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment