Translate

Friday 4 May 2012

தெரிவுக்குழுவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழுத்தம்; தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைக்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் கோரிக்கை


தெரிவுக்குழுவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழுத்தம்; தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைக்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் கோரிக்கை
news
 இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மீது சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக நம்பகரமாகத் தெரியவருகிறது. 


 
இந்த அழுத்தங்களை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு தீர்வை வழங்காமல் இருப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைத்து விடும் வகையில்  தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
கூட்டமைப்பை இந்தத் தெரிவுக் குழுவில் பங்கேற்குமாறு கோரி சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு இறுதி முடிவுக்கு வருவதற்காகவும் ஜனாதிபதியின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காகவும் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் கூறின.
 
இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமே எட்டப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் அவர் சார்ந்த குழுவினரும் உறுதியாக உள்ளனர். அரசியல் தீர்வு வேண்டுமாக இருந்தால் தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என்று அரசு கூட்டமைப்பிடம் தொடர்ந்து கோரிவருகிறது.
 
 அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற குழுவுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி மஹிந்த இதனைத் தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் அந்தக் குழுவிடம் கேட்டுக்கொண்டார்.
 
எனினும் தெரிவுக்குழு விடயத்தில் கூட்டமைப்பு இதுவரை உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. அரசின் தீர்வுத் திட்டம் என்ன என்பதில் வெளிப்படுத்தினால் மட்டுமே தெரிவுக்குழுவுக்கு வரமுடியும் என கூட்டமைப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்திய, அமெரிக்க தரப்புக்கள் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராமையால் தான் அரசியல் தீர்வு தாமதமடைவதாக ஜனாதிபதி கூறிவருகிறார். அதனை அவர் ஒரு சாட்டாகப் பயன்படுத்துகிறார். தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு வந்தால் 6 மாத காலத்தில் நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் என அவர் சர்வதேசத்திடமும் உறுதியளித்திருக்கிறார்.
 
 இந்த நிலையில் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்பதன் மூலம் அரசு அரசியல் தீர்வை வழங்காமல் இழுத்தடிப்பதற்கான கடைசி வாய்ப்பையும் அடைத்து விடமுடியும் என இந்திய, அமெரிக்க அரசுகள் கூட்டமைப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளன.
 
 இப்போது தெரிவுக்குழுவுக்குச் சென்று இந்த ஆண்டு இறுதிவரையான 6 மாத காலப்பகுதியில் அரசுக்கு ஒரு அவகாசமாக வழங்கிப் பார்க்கலாம் எனவும் அவை எடுத்துரைத்துள்ளன. 
 
இந்த அழுத்தங்களை அடுத்து தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்பதற்கான சாத்தியப் பாடுகள் அதிகம் உள்ளதாகவும் அது தொடர்பில் கூட்டமைப்பு விரைவில் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் எனவும் ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து மேலும் அறிய முடிகிறது.

No comments:

Post a Comment