இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல்போன 600 சிறுவர்கள் பற்றிய தகவல் இன்னமும் இல்லை கவலை தெரிவிக்கிறது பிரிட்டன்
சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சாசனத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதற்கு மத்தியிலும் சிறுவர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வருவதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது பிந்திய மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் கவலை தெரிவித்திருக்கிறது.
மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர்களின் பதிவுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.உள்ளூர் ஊடகங்களின் பிரகாரம் 2011 இல் பொலிஸார் சிறுவர் துஷ்பிரயோகம்,வல்லுறவுகள் தொடர்பாக அதிக எண்ணிக்கையான விபரங்களை பதிவு செய்திருப்பதை பார்க்கக்கூடியதாக உள்ளது. வர்த்தக ரீதியான பாலியல் நடவடிக்கைகளுக்காக 6 ஆயிரம் சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கணிப்பீடுகள் சில தெரிவிக்கின்றன. துஷ்பிரயோகம்,பாலியல் சுரண்டலால் பாதிக்கப்பட்ட சிறாருக்கு நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம் பாதுகாப்பை வழங்கியுள்ளது, ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பரந்தளவிலான செயற்பாட்டுத்திட்டங்கள் இல்லை என்று பிரிட்டனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் இடங்களென அடையாளம் காணப்பட்டவை இலங்கையில் உள்ளன.குற்றமிழைப்போர் மீது எப்போதுமே உரிய முறையிலான கண்காணிப்பு இருப்பதில்லை என்று உள்ளூர் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, சிறுவர்களை படைக்கு சேர்த்ததற்கு பொறுப்பானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் புலிஉறுப்பினர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று விடயத்தையும் பிரிட்டனின் மனிதஉரிமைகள் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மோதல் தருணத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளால் சேர்க்கப்பட்ட 13 பிள்ளைகள் எங்கே என்பது பற்றிஅறியப்படாதிருப்பதாகவும் மோதலின்போதுö கால்லப்பட்ட அல்லது அங்கவீனரான பிள்ளைகளின் சரியான எண்ணிக்கை பற்றியும் அறியப்படாது இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் ஒன்ற சேர்த்தல் மற்றும் தேடிக்கண்டு பிடித்தல் நடவடிக்கைகளை யுனிசெவ் மேற்கொண்டுள்ள போதும் மோதலின் இறுதிக்கட்டத்தில் காணாமல்போன 600 பிள்ளைகள் பற்றிய விடயங்கள் இன்னமும் நிலுவையாகவே இருக்கின்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சிறுவர்கள் மற்றும் ஆயுதப்போராட்டம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச்சபையின்செயற்குழு ஊடாக உட்பட இந்தவிடயங்கள் தொடர்பான கவலைகளை பிரிட்டன் தொடர்ந்தும் எழுப்பும் என்றும் தேசிய நல்லிணக்கத்துக்கான முயற்சிகளில் ஓரங்கமாக மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை பிரிட்டன் தொடர்ந்தும் ஊக்குவிக்குமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் மத சுதந்திரம்
இதேவேளை, இலங்கையில் தற்போது விவாதிக்கப்படும் மற்றொரு விடயம் குறித்தும் அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது.சமயத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சுதந்திரம் பற்றியதே அந்த விடயமாகும்.
தலையீடுகள் இல்லாமல் தமது மதத்தை கடைப்பிடிப்பதற்கான பொதுவான சுதந்திரத்தை மக்கள் கொண்டிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட மதங்கள், மதக்கல்வி என்பன மீது கடுமையான நிர்வாக ரீதியான சுமைகள் ஏற்றப்படுவதாக மதக்குழுக்கள் புகாரிட்டுள்ளன. சிறுபான்மையினரின் நம்பிக்கைகள் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை என்று சமயக்குழுக்கள் முறையிட்டுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கட்சியொன்றினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட நகல் வரைபு தொடர்பாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.அந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் பௌத்தத்துக்கு சிறப்புரிமை அந்தஸ்தை வழங்குவதாக அது அமையும்.செப்டெம்பரில் பௌத்த நகரமான அநுராதபுரத்தில் இருந்த முஸ்லிம் சமய வழிபாட்டிடம் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பலுக்கு பௌத்தபிக்குகளே தலைமை தாங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்து ஆலயங்களின் வேள்விகளின் போது அமைச்சு மட்ட தலையீடு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment