Translate

Tuesday, 1 May 2012

இரு தேசங்கள் ஒருநாடு- த.தே.ம.முன்னணியின் மே தினப் பிரகடனம்!


தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.00 மணிவரை கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

சாமியன் அரசடி சந்தியில் கூடிய மக்கள் அங்கிருந்து ஞானவைரவர் ஆலயத்திற்கு ஊர்வலமாகச்  ஞானவைரவர் ஆலய முன்றலில் சென்றடைந்தது. அங்கு ஓய்வுபெற்ற காணிப்பதிவாளர் செல்வரட்ணம் தலைமையில் மேதினக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அங்கு நெல்லியடி விவசாய அமைப்புக்களின் தலைவர் தம்பையா கனகரஜயா இளம் சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளார் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவார் இ.எ.ஆனந்தராஜா பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் வின்சன்ற் டீ போல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவருமான திருமதி பத்மினி சிதம்பரநாதன் இளம் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வரஜா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வெளிநாட்டில் இருந்த காரணத்தினால் தொலைபேசியுடாக பெறப்பட்ட அவரது உரை ஒலிபரப்புச் செய்யப்பட்டது. நிகழ்வு ஆராம்பமாவதற்கு முன்னர் கூட்டம் நடைபெறவிருந்த இடத்திற்கு பெரும் எண்ணிக்கையில் சிவில் உடையில் சென்ற புலனாய்வுத்துறையினரது செயற்பாடுகளால் அங்கு பெரும் பதற்றமும் அச்சமான சூழலும் பரவிக்கொண்டது. அதனால் அங்கு ஏற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் பலர் அச்சம் காரணமாக விலகிச் சென்றுவிட்டனர். நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது புலனாய்வுப் பிரிவினரர் வீடியோ மூலம் அதனைப் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
அத்துடன் ஒலி அமைப்பாளரிடம் கூட்டத்தில் உரையாற்றுபவர்களது உரைகள் அனைத்தையும் பதிவு செய்து தரவேண்டுமென வற்யுறுத்தி பதிவு செய்திருந்தனர்.பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வானது இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையில் அமைய வேண்டுமென்ற பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2012-05-01
தொழிலாளர் தின பிரகடனம்
பாரிய இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நடைபெற்று 3வது வருட முடிவில் இம் மேதினத்தை கொண்டாடுகின்றோம். யுத்தம் முடிந்துவிட்டாக இலங்கை அரசு கூறினாலும் தமிழ்த் தேசத்திற்கு எதிரான இன அழிப்பை சிறீலங்கா அரசு முன்னரிலும் பார்க்க தீவிரப்படுத்தியே வருகின்றது. தமிழ் தேசத்தின் இருப்பை பாதுகாப்பதிலும் தமிழ் தேசிய உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும் எமது தேசம் பலத்த சவால்களை சந்தித்து நிற்கின்றது. அந்த சவால்கள் சிங்கள தேசத்திலிருந்தும் எமக்குள்ளிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. சிங்கள தேசத்தின் சவால்களை அடையாளம் காணுகின்ற நாம் எமக்குள்ளிருந்து வரும் சவால்களை அடையாளம் காண திணறுகின்றோம்.
சிங்கள பௌத்த பேரினவாதம் முன்னரைவிடவும் அதன் உச்சியில் நிற்கும் இந்நிலையில் தமிழ் தேசிய உணர்வை இல்லாதொழிக்கும் நோக்கில் தமிழ் தேசிய அரசியலை பேரினவாத அரசியலுக்குள் கரையச் செய்யும் நடவடிக்கையை எமது இனத்திற்குள் இருக்கும் சிலரே இந்த மேதினத்தில் அரங்கேற்றியுள்ளனர். சிங்கள தேசத்தின் இன அழிப்புக்கு முகம் கொடுக்கவே நாம் திணறும் போது எம்மவர்களின் இந்த துரோகத்தனங்கள் எமக்கு இரட்டிப்பு வலியைக் கொடுத்துள்ளது.
மாபெரும் இன அழிப்பு நடைபெற்றாலும் தமிழ் மக்களின் விவகாரம் சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாகியுள்ளது. இலங்கைத் தீவினை மையமாக வைத்து சர்வதேச சக்திகளிடையேயான நலன்சார் ஆதிக்க மோதல்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. அம்மோதலுக்கு தமிழர்களையே கருவியாக பயன்படுத்துகின்றனர்.
இங்கு தான் எமக்கான வாய்ப்புக்கள் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களிடமிருந்த ஆயுதபலம் இழக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்புக்களை நாம் சரியாகப் பயன்படுத்தினால் அது பன்மடங்கு பலத்தை அரசியல் ரீதியாக எமக்கு வழங்கும். பிறசக்திகளால் தமிழர்களால் வெறுமனே கருவியாகப் பயன்படுத்தப்படுவதனைத் தவிர்த்து எமது தேச நலன்களும் அடைப்படும் நிலையை உருவாக்க முடியும். இதற்கு தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக பலமாக இருக்க வேண்டும். தாயக மக்களும் புலம் பெயர் மக்களும் தமிழக மக்களும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் வந்து செயற்படும்போது எம்மால் பலமான நிலையை அடைய முடியும். இதற்காக இம்மேதினத்தில் பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்ற உறுதிபூணுவோம்.
தீர்மானம் – 01
அரசியல் தீர்வு முயற்சிகள் இரு தேசங்கள் ஒரு நாடு என்ற வகையில் அமைதல் வேண்டும்
இணைந்த வடக்கு கிழக்கு தமிழ் மக்களது தாயகம் என்பதும் தமிழ்த் தேசம் தனித்துவமான இறைமையுடைய தேசம் என்பதும் வரலாற்று ரீதியான உண்மை. அதிகாரப் பகிர்வு என்பது சிங்கள தேசத்திடம் இருக்கும் அதிகாரத்தினை நாம் கேட்டுப் பெறுவதாக இருக்கும். அதிகாரப்பகிர்வுடான தீர்வுப் பாதை என்பது சம அந்தஸ்த்துள்ள தமிழ்த் தேசத்தின் இருப்பை நாமாகவே விரும்பி கைவிடுவதாக அமையும். தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் சேர்ந்து இலங்கை என்ற அரசினை உருவாக்குவதன் மூலம் மட்டுமே தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாக்க முடியும். இதனாலேயே இரு தேசங்கள் ஒரு நாடு என்ற வகையில் அரசியல் தீர்வு அமைய வேண்டுமெனக் கோருகின்றோம்.
 தீர்மானம்-02
தமிழர் தாயகத்தில் இடம்பெறும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகளை எதிர்த்து போராடுவோம்.
சிங்கள பௌத்த பேரினவாதமானது இலங்கைத் தீவின் ஏகபோக உரிமையாளர் தாமே என மார்தட்டுகின்றது. ஏனையவர்கள் வேண்டுமென்றால் வாழ்ந்து விட்டுப் போகலாம் உரிமைகள் எதுவும் கேட்கக் கூடாது எனக் கர்ச்சிக்கின்றது. இந்தக் கருத்தியலுக்கு தமிழ்த் தேசத்தின் இருப்பு அச்சுறுத்தலென அது அஞ்சுகின்றது. இந்த அச்சம் காரணமாக தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் முயற்சியை ஐரோப்பியர்கள் வெளியேறிய காலத்திலிருந்து தீவிரப்படுத்தியே வருகின்றது. தமிழ் மக்களது தியாகம் நிறைந்த போராட்டம் இந்த சிதைப்பு நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி வந்தது. அவ் ஆக்கிரமிப்பு நடவடிக்ககைள் 2009 மே மாதத்தின் பின்னர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நில அபகரிப்பு பொருளாதார ஆக்கிரமிப்பு கலாச்சார சீரமிப்பு உளவியல் உரண் சிதைப்பு என இது பல வடிவங்களை எடுத்து வருகின்றது. இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தி எமது தேசத்தின் இருப்பைப் பாதுகாக்க உலகம் முழுதும் பரவிவாழும் எமது உறவுகளை ஒருங்கிணைத்து இவ் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக சாத்வீக வழியில் போராடுவோம்.
 தீர்மானம்-03
போரினால் பாதிப்படைந்த எமது உறவுகளுக்கு கை கொடுப்போம்.
இன அழிப்பு நடவடிக்கையினால் எமது உறவுகள் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். சிறை வாழ்க்கை காணாமல் போதல் அங்கவீனம் வாழ்வாதார உதவிகளின்மை என அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் வார்த்தைகளில் அடங்காதவையாகும். விடுதலைப் போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை சம்பந்தப்பட்டவர்களும் அக் குடும்பங்களும் மட்டும் சுமக்க விடுவது சமூக அறமல்ல. நாம் அனைவரும் சேர்ந்து அவற்றைப் பொறுப்பேற்போம். அவர்களின் வாழ்வினை கட்டி எழுப்புவோம்.
 தீர்மானம் – 04
தமிழ் அரசியல் கைதிகள் தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகளது விடுதலை
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சகல தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படல் வேண்டும். மேலும் இறுதி யுத்தத்தில் சரணடைந்த முன்னாள் போராளிகள் எவ்வித சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படாது அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும்.
காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்துடன் இணைக்கப்படல் வேண்டும். அதற்காக சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கோருவோம்.
 தீர்மானம்-05
இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை உலகிற்கு கொண்டு செல்வோம்.
வன்னியில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றது வெறுமனவே போர்க்குற்றமல்ல அது இனப்படு கொலையின் ஓரங்கமாகும். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையும் அதற்கோர் சான்றாக உள்ளது. இறுதி யுத்தத்தில் மட்டுமல்ல கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். இலங்கை அரசினையே விசாரணை செய்ய கோருவது குற்றம் செய்தவனையே நீதி வழங்க கோருவது போன்றதாகும். எனவே இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என உரக்கக் குரல் எழுப்புவோம்.
 தீர்மானம்-06
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை நிராகரிப்போம்.
ஐ.நா. நிபுணர் குழுவைப் பலவீனப்படுத்துவதற்கும் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை தடுப்பதற்குமாக சிறீலங்கா அரசினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு இனப்படுகொலை
பற்றி தனது அறிக்கையில் எதுவும் கூறவில்லை. சிறீலங்கா அரச படைகளின் செயற்பாடுகளையே அது நியாயப்படுத்தியுள்ளது. அரசியல் தீர்வு தொடர்பாகவும் தெளிவாக எதனையும் கூறவில்லை. இந்த அறிக்கையை அமுல்படுத்தும்படியே ஜெனிவாத் தீர்மானமும் கோரியுள்ளது. கண்துடைப்பிற்காக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையை நாம் முழுமையாக நிராகரிப்போம்.
தீர்மானம் – 07
இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை நிராகரிப்போம்.
இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதன் அடிப்படையிலமைந்த 13வது யாப்புத் திருத்தமும் தமிழ் மக்களின் சம்மதத்துடன் உருவாக்கப்பட்டவையல்ல. இது எந்த வகையிலும் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்க போதுமானதாக இல்லை. மக்களால் தேர்தெடுக்கப்படும் மாகாண சபைகளுக்கு சுயாதீன இருப்பு எதுவும் கிடையாது. மாறாக சனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுனரிடமே முழுமையான அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன. தற்போதுள்ள கிழக்கு மாகாண சபையும் இதற்கு முன்னர் செயற்பட்ட வட-கிழக்கு மாகாண சபையும் இதற்கு மிகப்பெரும் சாட்சி. எதற்கும் உதவாத 13வது யாப்புத் திருத்தத்தினை எமது தலையில் கட்டி விட பல்வேறு சக்திகளும் முயற்சிக்கின்றன. இந்த முயற்சிகளை முழுமையாக நாம் நிராகரிப்போம்.
 தீர்மானம் – 08
தமிழ் தேசத்திற்கான சுயாதீன பொருளாதாரத்தை நாமே கட்டி எழுப்புவோம்.
அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் தேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் நடைபெற்றதைப் போன்று எதிர்கால சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளைகளை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது.
சிங்கள தேசம் எமது பொருளாதார வளங்களைச் சூறையாடி வருகின்றது. சுண்ணாம்புக்கல் அகழ்வு மணல் அகழ்வு கடல்வளச் சுரண்டல் வனவள அழிப்பு என்பன இதற்கு சில உதாரணங்கள் இதற்கு மேலாக தமிழ் வர்த்தகளிடமுள்ள வர்த்தக ஆதிக்கம் படிப்படியாக பறிபோதல் தொழில் பறிப்பு என்பவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சிங்கள தேசம் உதவப் போவதில்லை. நாம் புலம் பெயர் மக்களின் உதவியுடன் எமது பொருளாதாரத்தை நாமே கட்டியெழுப்புவோம். எமது மக்களை அவர்களது சொந்தக் காலில் நிற்கச் செய்வோம்.
 தீர்மானம்-09
சிங்கள தேசத்தின் அதிகாரத்தை எம்மீது திணிக்க முயலும் படையினரை அகற்றக் கோருவோம்.
தமிழ்த் தேசத்தினை சிதைத்து கொழும்பின் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக எமது தாயகம் முழுவதும் சிங்கள தேசத்தின் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எமது மக்களின் உள உறுதியைச் சிதைக்கின்றனர். எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். எமது வளங்களை சூறையாடுவதற்கும் எமது அடையாளத்தை அழிக்கவும் துணை நிற்கின்றனர்.
சிங்கள தேசத்தின் இந்தப் படைகள் எமது மண்ணிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்துவோம்.
தீர்மானம் – 10
இடம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் சொந்த ஊருக்குத் திரும்ப குரல்கொடுப்போம்.
வலிகாமம் வடக்கு முல்லைத்தீவின் கேப்பாபுலவு திருமலையில் சம்பூர் உட்பட மக்கள் மீளக் குடியமர அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் மீளக் குடியமர உடனடியாக அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துவோம்.
 தீர்மானம் – 11
சாதி மத பிரதேச பால் பேதமற்ற தேசத்தை கட்டி எழுப்புவோம்.
எம்மிடையே சாதி மத பிரதேச பால் வேறுபாடுகளை சில சக்திகள் திட்டமிட்டு வளர்க்க முயல்கின்றன. நாம் வலிமையான தேசமாக இருப்பதை உள்ளிருந்து அழிக்கும் சூழ்ச்சியே இது. இந்த சூழ்ச்சிகளை முறியடித்து சாதி மத பிரதேச பால் பேதமற்ற தேசத்தை கட்டி எழுப்புவோம். அத்தேசத்தில் சகல தொழிலாளர்களதும் சகல உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட உறுதிபூணுவோம்.
கNஐந்திரகுமார் பொன்னம்பலம் இ.எ.ஆனந்தராஐh செ.கNஐந்திரன்
தலைவர் தலைவர் பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிஸ் தமிழ் தேசிய மக்கள் முன்னணி

No comments:

Post a Comment