Translate

Saturday 12 May 2012

தமிழினத் துரோகம்: தாமராவுக்கு சிங்களம் கொடுத்த பரிசு!

ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, சிறீலங்கவின் சார்பில் அதனை எதிர்கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான தாமரா குணநாயகம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் அடுத்த கூட்டத் தொடரைச் சமாளிப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த அவசர இடமாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.


இருந்தபோதிலும், ஒரு தமிழர் என்ற காரணத்தினால் தாமரா குணநாயகம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸினால் பழிவாங்கப்பட்டிருப்பதாக வேறு சில இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

இராஜதந்திரப் பதவி நிலையைப் பொறுத்தவரையில் தாமரா குணநாயகம் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தவர். ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி என்ற பதவி சாதாரண இராஜதந்திரப் பதவி ஒன்றைவிட உயர்ந்தது. குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு தூதுவர் பதவியைவிட இது உயர்ந்தது. இறுதியாக கியூபாவுக்கான தூதுவராகப் பதவி வகித்த இவர், தன்னுடைய திறமையால் மட்டுமன்றி, அரசின் மீதான விசுவாசத்தினாலும் பதவி உயர்வு பெற்று ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டவர். இப்போது பதவி இறக்கப்பட்ட இவர், மீண்டும் கியூபாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். இதற்கான அவசர உத்தரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது நியாயமற்ற ஒரு பதவி மாற்றம் எனவும், இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தாமரா குணநாயகம் கடந்த ஒரு வாரகாலமாக பிடிவாதமாகக் கூறிவந்த போதிலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இந்த உத்தரவுக்குக் கீழ்படிவதைவிட அவருக்கு இப்போதைக்கு வேறு தெரிவுகள் எதுவும் இல்லை. இவரது இடத்துக்கு பிரேஸிலில் இலங்கையின் தூதுவராகப் பணிபுரிந்த ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தொழில்சார் இராஜதந்திரியான ஆரியசிங்க, நெருக்கடியான விவகாரங்களைக் கையாள்வதில் அனுபவமும், திறைமையும் உள்ளவர் என்பது உண்மை. அவரது நியமனத்தை சிங்களப் பத்திரிகைகள் வரவேற்றிருப்பதற்கு அது மட்டும் காரணமல்ல. ஒரு தமிழரை நீக்கிவிட்டு சிங்களவரை அந்த இடத்துக்கு நியமித்திருப்பதை சில சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் வரவேற்றிருப்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான்!

இப்போது மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடருக்கான ஆயத்தங்கள் அனைத்தும் ரவிநாத ஆரியசிங்கவினால்தான் முன்னெடுக்கப்படப்போகின்றது. இதற்கான தயாரிப்புக்களில் ஈடுபடுவதற்கு அவருக்குள்ள நேரம் போதுமானதா என்பதும் முக்கிய கேள்வியாக எழுப்பப்படுகின்றது. சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சு கோஷ்டிப் பூசல்களிலும், சிறீலங்காவின் ஐரோப்பிய இராஜதந்திர வட்டாரங்கள் ஒருவித பனிப்போரிலும் ஈடுபட்டுள்ள நிலையில் ஜெனீவாவில் ஆரியசிங்கவைக் களமிறக்கியிருப்பது எந்தளவுக்குப் பலனளிப்பதாக அமைந்திருக்கும் என்பது கேள்விக்குறிதான்! ஏனெனில் இந்தக் குழுவாதங்களை அவரது நியமனம் முடிவுக்குக் கொண்டுவரப்போவதில்லை.

கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில்தான் சிறீலங்கா மூக்குடைபட்டது. அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிக்க முடியும் எனக் களமிறங்கிய சிறீலங்கா இறுதியில் படுதோல்வியடைந்தது. இந்த இராஜதந்திரத் தோல்விக்கு இந்தியா இறுதிவேளையில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுதான் காரணம் என சிறீலங்காத் தரப்பு அண்மைக்காலம் வரையில் கூறிவந்திருக்கின்றது. சர்வதேச அரங்கில் இதற்காக இந்தியாவைப் பழிவாங்குவதற்கான தருணத்தையும் சிறீலங்கா எதிர்பார்த்திருக்கின்றது என்பதும் உண்மை. ஆனால், இப்போது ஜெனீவா தோல்விக்கான முழுப்பொறுப்பையும் தாமரா குணநாயகத்தின் மீது போட்டுவிட்டு தான் தப்பித்துக்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் முற்பட்டுள்ளமையையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

சர்வதேச அரங்கில் தமது செயற்பாடுகளினால் ஏற்படக்கூடிய தோல்விகளை இராஜதந்திரிகளின் தலையில் சுமத்திவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் உபாயம் ஒன்றைத்தான் அரசியல்வாதிகள் நீண்டகாலமாக பின்பற்றிவருகின்றார்கள். இதேபோன்ற ஒரு நிகழ்வுதான் இப்போது தாமரா குணநாயகத்துக்கும் இடம்பெற்றிருக்கின்றது. சர்வதே அரங்கில் துணிச்சாக பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டு ஆச்சரியப்பட வைத்த தாமரா குணநாயகம் இறுதியில் அமைச்சர் பீரிஸின் காய்நகர்த்தலில் 'செக்மேட்'டாகியிருக்கின்றார். தன்னுடைய இறுதிக்கட்ட ஆயுதமாக "நான் ஒரு தமிழர் என்பதால்தான் இவ்வாறு பழிவாங்கப்படுவதாக சர்வதேசம் நினைத்துவிடக் கூடிய நிலைமையும் இருக்கின்றது" என அவர் அரசுக்குக் கூறியபோதிலும், அதனையிட்டுக் கவலைப்படுவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கவில்லை!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 18 வது கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற போதுதான் தமரா குணநாயகத்தின் பெயர் உச்சத்துக்குச் சென்றிருந்தது. ஜெனீவா ஐ.நா. சபைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி என்ற முறையில் சிறீலங்காவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையைக் கையள்வதற்கான பெரும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்தான் சிறீலங்காக் குழுவுக்குத் தலைமைதாங்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் பின்னர் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விஷேட தூதுவரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்க பீரிசுக்கு மேலாக செல்வாக்குச் செலுத்திய ஒரு நிலை உருவாகியது. இந்தப் பின்னணியில் சிறீலங்காக் குழுவுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு தமரா குணரட்ணத்தைச் சென்றடைந்தது.

ஜெனீவாவில் சிறீலங்காவைப் பாதுகாப்பதற்கான வியூகங்களை அமைத்துச் செயற்படுவதற்கான முக்கிய பொறுப்பு மூவரிடமே இருந்தது. ஒருவர் பீரிஸ். மற்றயவர் மகிந்த சமரசிங்க. மூன்றாமவர் தாமரா! இதில் ஜெனீவாவிலேயே நின்று நிலைமைகளை அவதானித்து காய்நகர்த்தும் முக்கிய பொறுப்பை தாமராதான் மேற்கொண்டிருந்தார். இதனால் ஜெனீவாவில் சிறீலங்கா தோல்வியைச் சந்தித்ததுடன், அதற்கான முழுப் பொறுப்பையும் தாமரா மீது போட்டுவிடுவதற்கு அமைச்சர்கள் இருவருக்கும் வாய்ப்பாகிவிட்டது. அவர் தமிழர் என்பதால் ஜனாதிபதி மட்டத்தில் வேறு சந்தேகங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கலாம்!

இந்தப் பின்னணியில்தான் கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள சிறீலங்காவுக்கான ஐ.நா. நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட அமைச்சர் பீரிஸ், தாமராவுடன் உரையாடினார். ஜெனீவாவிலிருந்து வெளியேறி கியூபா அல்லது பிரேசிலின் தூதுவராகப் பதவியேற்குமாறு அமைச்சர் பீரிஸ் அப்போது தாமராவிடம் கேட்டுக்கொண்ட போது தாமரா அதிர்ந்து போனார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தென் அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை விரைவில் மேற்கொள்ளவிருப்பதால் அதற்குரிய கள வேலைகளைச் செய்ய வேண்டியிருப்பதால்தான் தாமராவை அங்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பீரிஸ் தெரிவித்தார். இருந்தபோதிலும், இது தன்னை சமாளிப்பதற்காகத் தெரிவிக்கப்படும் ஒரு காரணம் என்பதையும் இது உண்மையில் தனக்கு ஒரு 'பதவி இறக்கம்' என்பதையும் தாமரா உணர்ந்துகொண்டார்.

அமைச்சர் பீரிஸின் உத்தரவுக்கு அடிபணிவதில்லை எனத் தீர்மானித்த தாமரா, தன்னுடைய இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு விரிவான கடிதம் ஒன்றை அமைச்சர் பீரிசிற்கு அனுப்பிவைத்தார். தான் ஒரு தமிழர் என்பதால் பழிவாங்கப்படுவதாக இந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்த அதேவேளையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் இந்த கடிதத்தின் விபரங்கள் கசிந்தன. ஊடகங்களில் கசிந்த இந்தக் கடிதம் அமைச்சருக்குப் பெரும் சீற்றத்தைக் கொடுப்பதாக அமைந்திருந்தது. குறிப்பாக, தான் தமிழர் என்பதால் பழிவாங்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தமை சர்வதேச அரங்கில் சிறீலங்காவுக்குப் பெரும் பாதகமான நிலையை ஏற்படுத்தக் கூடியது.

இந்த நிலையில் அமைச்சர் பீரிஸ் தூதுவர் தாமரா மோதல் உச்ச கட்டத்தை அடைந்தது. ஜனாதிபதியின் ஆதரவையும் பெற்றுக்கொண்ட அமைச்சர் பீரிஸ், ரவிநாத ஆரியசிங்கவை ஜெனீவாவுக்கான சிறீலங்காவின் புதிய வதிவிடப் பிரதிநிதியாக நியமிப்பதாக அறிவித்திருக்கின்றார். அத்துடன் கியூபாவுக்கான தூதுவராக தாமராவை நியமிப்பதாகவும் பக்ஸ் மூலமாக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கியூபாவுக்குச் செல்லமுடியாது என்பதில் தாமரா உறுதியாக இருக்கின்றார். கியூபாவிலிருந்துதான் பதவி உயர்வு பெற்று அவர் ஜெனீவா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் கியூபா செல்வது தனக்கு அவமானமாக இருக்கும் என தாமரா குணநாயகம் கருதுவதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

இதனைவிட முக்கியமான உண்மை என்ன வென்றால் தமிழர்களை சிங்கள அரசு இவ்வாறுதான் நடத்தும். சிங்கள அரசை நம்பி தமிழர்களைக் காட்டிக்கொடுக்கப் புறப்பட்ட பலருடைய கதை இவ்வாறானதாகத்தான் இருந்திருக்கின்றது. எல்லோராலும் கதிர்காமராகிவிட முடியாது! தாமரா இதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!!

- பூராயத்துக்காக கொழும்பிலிருந்து பார்த்தீபன்.
http://pooraayam.com...1-07-03-19.html 

No comments:

Post a Comment