Translate

Friday 18 May 2012

யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல்போனோருக்காக தீபமேற்றிப் பிரார்த்திக்குமாறு த.தே.கூ. வேண்டுகோள் _


  இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை இன்றைய தினம் நினைவுகூர்ந்து அவர்களுக்காக தீபமேற்றி ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பாக இலங்கை பொறுப்புக் கூறுவதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.



எமது சகோதர வெளியீடான யாழ். ஓசைக்கு கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா வழங்கிய நேர்காணலின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் இன முரண்பாடு காரணமாக குறிப்பாக 2009 ஆம் ஆண்டு காலத்திற்கு இடைப்பட்ட காலத்திலும் போர்க் காலத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச சமூகத்திடமும் நல்லிணக்க ஆணைக்குழுவிடமும் முறையிடப்பட்டுள்ளது. அதைவிட ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்ற தகவல்களும் எம்மிடம் இருக்கின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதக் காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள்.

தங்கள் உறவுகளை இழந்து நிற்கின்ற, காணாமல் தவித்துக்கொண்டிருக்கின்ற எங்களுடைய உறவுகள் இந்த நாளில் அத்தகையோரை நினைத்து ஆத்மசாந்திப் பிரார்த்தனை செய்வது மனித குலத்தின் மாண்பாகக் கருதப்படுகிறது" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment