Translate

Friday 18 May 2012

சிறிலங்கா மீது குவியும் அனைத்துலக கவனம் – லண்டன் விவாதத்தை எட்டரை இலட்சம் பேர் பார்த்தனர்


விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் நடத்திய போர் முடிவுக்கு வந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், சிறிலங்கா விவகாரம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 
சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், அதற்கான பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியன குறித்தும், போருக்குப் பிந்திய நல்லிக்க சூழல் குறித்தும் அனைத்துலக அளவில் விவாதங்கள் எழுந்துள்ளன.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் போர் குறித்து அனைத்துலக அளவில் விவாதங்கள், கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன், அனைத்துலக ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
“சிறிலங்கா – நல்லிணக்கமும் நீதியும்“ என்ற தலைப்பில் நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் விவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது.பிபிசியில் ‘ஹாட்ரோக்‘ நிகழ்ச்சியை வழங்கும் ஸ்டீபன் சக்குர் இந்த விவாதத்துக்குத் தலைமை தாங்கினார்.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கல்லும் மக்ரே, தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளர் ஜான் ஜனநாயகம், அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார ஆய்வாளர் யோலன்ட் போஸ்டர், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ராஜீவ விஜேசிங்க, சிறிலங்கா அதிபரின் இணைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
இந்த விவாதம் அனைத்துலக அளவிலான பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விவாத அரங்கம் முன்பதிவுகளால் ஏற்கனவே நிறைந்து விட்டதால், விவாதத்தை இணையத்தில் நேரலையாகப் பார்க்குமாறு புரொன்ட்லைன் கிளப் அறிவித்திருந்தது.
நேற்று முன்தினம் இரவு பிரித்தானிய நேரப்படி இரவு 7மணிக்கு ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் இடம்பெற்ற இந்த விவாதத்தை 844,042 பேர் இணையம் மூலம் நேரலையாகப் பார்வையிட்டுள்ளனர்.இதுவே இந்த விவகாரம் அனைத்துலக அளவில் எந்தளவுக்கு கவனத்தைப் பெற்றுள்ளது என்பதற்காக ஆதாரமாக அமைந்துள்ளது.
அதுவேளை போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையிலும், பொறுப்புகூற வலியுத்தியும், அனைத்துலக ஊடகங்கள் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment