Translate

Tuesday, 29 May 2012

தமிழர் பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்:யாழ்.ஆயர் _


  "தமிழர் பகுதிகளில் அதிகளவான இராணுவப் பிரசன்னம் காணப்படுகிறது. இது குறைக்கப்பட வேண்டும். சிவில் கடமையில் இவர்களது தலையீடு அதிகமாகவே உள்ளது. இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலம் தாழ்த்தாது அரசுடன் பேச வேண்டும்" என யாழ்ப்பாணம் வந்த அவுஸ்ரேலியத் தூதுவரிடம் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்ட அவுஸ்ரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகர் றொபின் மோடி யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை நேற்று முன்தினம் மாலை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பு தொடர்பில் ஆயர் மேலும் தெரிவிக்கையில்;

எங்களுக்கு இவ்வளவு தொகையில் இராணுவம் தேவையில்லை. தேவைக்கு அதிகமான இராணுவத்தினரை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிவிலியன்களுடைய விடயங்களில் தலையிடாது அவர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரேரணைகள் இன்னும் தமிழ் மொழியில் வெளிவரவில்லை. இது எமது மொழியில் வெளிவருமானால் பொதுமக்களும் இது தொடர்பான போதிய விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பிரேரணைகள் தொடர்பில் இதுவரை எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கட்டாயம் இதனை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலமாவது சுமுகமான உறவைக் கொண்டுவர முடியும். மேலும் யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் அபிவிருத்திகள் சில நடைபெற்று வருகின்றன. இதனை நாம் வரவேற்கின்றோம். இதேவேளை எமக்கான அதிகாரப் பகிர்வும் உரிமையுடன் வாழுகின்ற அரசியல் தீர்வும் அவசியம் தேவை.

இதனை எவ்வாறு என்பதைக் கூறாவிட்டாலும் துன்புறுத்தப்பட்ட மக்கள் சார்பில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசி நல்ல முடிவை காலம் தாழ்த்தாது கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

தெரிவுக்குழுவில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை சந்தேகத்துடன் பார்க்கின்றார்கள். காரணம் காலம் தாழ்த்தும் செயலாகவே காலம் காலமாக நடைபெற்று வருகிறது. செய்ய வேண்டிய தேவைகள் செய்யப்படாதவையாகவே உள்ளன. தெரிவுக்குழு நல்லதாக இருந்தாலும் நம்பக்கூடிய காரியங்கள் தேவையாக உள்ளன. அரசு எத்தகைய நடவடிக்கைகளை செய்தாலும் தாம் விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை மூடிமறைத்து மறுபுறம் தீர்வை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனத் தெரிவித்தார். ___


No comments:

Post a Comment