சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய பயணம் சிறிலங்காவுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.
பயணத்திற்கான தேதியை சிறிலங்கா அரச தரப்பு வெளிப்படையாக தெரிவிக்காத போதும், கடந்த முறைப் பயணம் போல் இம்முறைப் பயணம் கேள்விக் குறியாகிவிடக்கூடாது என்பதில் வலுதீவிரமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சிலும், லண்டனிலும் மக்கள் போராட்டங்கள் நடந்துள்ள நிலையில், எதிர்ப்பினைத் தொடர்ந்தும் வெளிப்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் அறைகூவல் விடுத்துள்ளது.
ஜனநாயகத்தில் அபார நம்பிக்கை வைத்திருக்கும் பிரித்தானியா மண்ணில், இரத்தம் தோய்ந்த கரங்களுடன், பிரித்தானிய மாகாராணியை சந்திப்பதை நீதிக்காய் போராடிவரும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றென உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைகாட்சி இலங்கையின் கொலைக் களம் என்ற ஆவணப்படத்தின் வழியே, சிறிலங்காவின் தமிழினப் படுகொலையினை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்க காண்பித்துள்ள நிலையில், பிரித்தானிய மண்ணில் இனப்படுகொலையின் சூத்திரதாரி கால்பதிப்பது, நீதிக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசுத் தலைவரின் வருகைக்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் பொருட்டு, புலம் பெயர் நாடுகளில் உள்ள பிரித்தானிய தூதரகங்களுக்கு முன்னால், அமைதியான முறையில் ஒன்றுகூடல்களை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment