பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறைஉருவாக்கப்படுவதன் ஊடாகவே நீதியுடனும் கௌரவத்துடனும் நிலையான சமாதானத்தை அமைதியைத் தோற்றுவிக்க முடியும் எனப் பிரிட்டன் தொழிற்கட்சியின் தலைவர் எட் மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் 3ஆவது ஆண்டு நினைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எட் மிலிபான்ட் வெளியிட்டுள்ள நினைவுச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது:
இலங்கைத்தீவில் ஆயுத முரண்பாடு முடிவுக்கு வந்த 3ஆவது ஆண்டினை நாம் இன்று நினைவு கூருகின்றோம். உங்கள் குடும்ப உறவுகள், நண்பர்கள், உங்கள் நேசிப்பிற்குரியவர்களை இழந்த உங்களின் பெருந்துயரத்தில் நான் உங்களுடன் பங்கெடுத்துக் கொள்கின்றேன்.
2009இல் நடந்தேறிய நிகழ்வுகள் இன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஐ.நா சபை நிபுணர் குழு அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்குரிய நம்பகரமான விசாரணைப் பொறிமுறை இலங்கையின் அர\ தரப்பால் தோற்றுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கைத்தீவின் தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் இன்றைய நிலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தொழிற்கட்சி கரிசனை கொண்டுள்ளது. பொறுப்புக்கூறலுக்கும் மீள் நல்லிணக்கத்திற்குமுரிய காத்திரமான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில்தான் நிலையான சமாதானத்திற்குரிய பாதையை இடமுடியும்.
போரின் இறுதி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டவற்றினை விசாரிப்பதற்குரிய சுதந்திரமான அனைத்துலக பொறிமுறையை உருவாக்குமாறு தொழிற்கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்த அடிப்படையிலேயே தற்போது இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் சபையினால் கொண்டுவரப்பட்ட பொறுப்புக்கூறல் மற்றும் மீள் நல்லிணக்கத்தை கோருகின்ற தீர்மானத்தினை நாங்கள் ஆதரிக்கிறோம்.
ஆகையினால் ஐ.நா.வுக்கு ஒத்துழைப்பு வழங்கி, இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் ஆக்கபூர்வமானவற்றை நடைமுறைப்படுத்துமாறும், அதனூடு போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்குமாறும் இலங்கை அரசைக் கோருகின்றோம்.
இந்த அடிப்படையில் ஐ.நா தீர்மானத்தை நெருக்கமாக அவதானிக்குமாறும், அதனை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்குமாறும் பிரிட்டன் அரசு மற்றும் அனைத்துலக சமூகத்திற்கு இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தவுள்ளோம்.இந்த விவகாரத்தில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது போகுமாயின் 2013ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பிரிட்டனின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பிரிட்டன் பிரதமரும்அரசும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மக்களின் உரிமைகளைக் காப்பதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகள் அவசியம் என்பதை இலங்கை அரசு உணர்ந்து கொள்வது அவசியமானது என்றுள்ளது.
No comments:
Post a Comment