முள்ளிவாய்க்கால் துயர் பகிர்வு தமிழர் தாயகம் எங்கும் இன்று; புலம்பெயர் நாடுகளிலும் விசேட நிகழ்வுகள் சுடரேற்றி அஞ்சலி செய்யுமாறு அழைப்பு |
2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெரும் துயரை நினைவு கூர்ந்து அந்தக் குறுகிய வன்முறை வெளியில் தம்மை ஆருதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகப் பிரதேசங்களெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றன.
முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் இன்று ஈடுபடுகின்றனர்.
அத்துடன் இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக இன்று விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வழிபாடுகளின்போது உயிரிழந்தவர்கள் விசேடமாக நினைவு கூரப்படுவர்.
தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆகப் பிந்திய மிக மோசமான இந்தப் படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நிகழ்வுகள் இன்று புலம்பெயர் நாடுகளிலும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளைப் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளன.
முள்ளிவாய்க்காலில் வலி தந்த அந்தக் கணங்களை வலிமை கொள்ள வைக்கும் கணங்களாக மாற்றுவதற்கு அனைத்துத் தமிழ் மக்களும் 2009 மே 18 இல் மரணித்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், 18 மே இயக்கமும் தமிழர் தாயகத்தில் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த இனப்பேரழிவின் போது கொல்லப்பட்டோருக்காக இன்று ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்டமைப்பின் பிரதான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தீபம் ஏற்றும் நிகழ்விலும் உயிர்நீத்த உறவுகளின் குடும்ப உறுப்பினர்களையும் அனுதாபிகளையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஈழத்தமிழர் இனப்படுகொலையின் உச்சமான இன்றைய நாளைக் கரிநாளாகக் கடைபிடிக்குமாறு இன்று மாலை 6.10 மணிக்கு வீடுகளில் சுடரேற்றி முள்ளிவாய்க்காலில் மடிந்துபோன உறவுகளுக்கு மௌன வணக்கத்தைச் செலுத்துமாறும் 18 மே இயக்கம் தமிழ் மக்களிடம் கோரியுள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அது நேற்று வெளியிட்டிருந்தது.
வவுனியாவிலும் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் இன்று இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முற்பகல் 10 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
துயரத்தில் இருப்பவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர். அவர்களுக்கு ஆறுதலளிப்பதற்கு எமது சமூகம் தயாராக இருக்கிறது என முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூரும் தினத்தில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இன்று வட அமெரிக்கத் தமிழர்கள் அணி திரண்டு நீதி கோரவுள்ளனர். இன்று முற்பகல் 10 மணிக்குப் பேரணியாகத் தொடங்கி ஐ.நாவுக்கு முன்னால் நினைவெழுச்சி நிகழ்வாக இது நிறைவுபெறும்.
அத்துடன் கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
தமிழகத்திலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. வைகோ தலைமையில் மெரீனா கடற்கரையிலும் சீமான் தலைமையில் கோவை பெரியார் சிலைக்கு அண்மையிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.
ஒட்டுமொத்த தமிழினமும் இன்றைய நாளை துக்கநாளாகவும் மடிந்த மக்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளாகவும் அனுஷ்டிக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புக்களும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 18 May 2012
முள்ளிவாய்க்கால் துயர் பகிர்வு தமிழர் தாயகம் எங்கும் இன்று; புலம்பெயர் நாடுகளிலும் விசேட நிகழ்வுகள் சுடரேற்றி அஞ்சலி செய்யுமாறு அழைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment