Translate

Sunday, 20 May 2012

மன்னார் ஆயரின் பாதுகாப்பு தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணையகம் கவலை


இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பாக நீண்ட காலமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்புத் தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணையகமானது தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள போதகர் என்ற வகையிலும் இதய சுத்தியுடனும் செயற்படும் மதத் தலைவர் என்ற வகையிலும் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் தனது மக்களாகிய தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி வருகின்றார்.
இலங்கையில் 30 ஆண்டுகளாகத் தொடரப்பட்டு மே 2009 நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட மிகக் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தின் போது 146,000 பேர் வரை காணாமற் போயுள்ளதாக இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தது தொடர்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பிடம் இலங்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என மே 13/2012 அன்று வெளியிடப்பட்ட சண்டேலீடர் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மன்னார் மறை மாவட்ட ஆயரிடம் சென்று விசாரணை மேற்கொண்டதை இலங்கை பொலிஸ் பேச்சாளரான அஜித்ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் மீது குற்றப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள முடியும். எனினும் இவ்வாறான எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாத தனிப்பட்டவர்கள் மீது இவ்வாறான குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்படுவதானது இலங்கையைப் பொறுத்தளவில் தற்போது வழக்கமான ஒன்றாகவே மாறி விட்டது. இவ்வாறு குற்றம் செய்யாத ஒருவர் மீது விசாரணைகளை மேற்கொள்வதென்பது மக்களின் அடிப்படை குடியுரிமையை மீறுகின்ற செயலாகக் காணப்படுவதுடன் மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் குழப்பம் என்பவற்றைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்துள்ளது.
மன்னார் மறை மாவட்ட ஆயர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து சதித் திட்டத்தின் மூலம் ஆயரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இலங்கையைப் பொறுத்தளவில் காணாமல் போதல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் என்பன வழமையாக நடைபெறுகின்ற சம்பவங்களாக மாறிவிட்டன. இலங்கையில் சில மதகுருமார்கள் மற்றும் புத்த பிக்குகள் கூட காணாமற் போயுள்ளனர். கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்த பலர் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் நாட்டில் மீள் இணக்கப்பாட்டைக் கொண்டு வரவேண்டியதன் தேவைப்பாட்டையும் குறிப்பிட்டு மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்கள் இலங்கை அதிபருக்கும் மனித உரிமைகள் பேரவைக்கும் கடிதங்களை அனுப்பியிருந்தார்.
இலங்கையில் தனது இன மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமை தொடர்பில் குரல் கொடுப்பவர்கள் தற்போது மிக மோசமான ஆபத்தைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வாறான சூழ்நிலைகளின் மத்தியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அடிகளாரின் பாதுகாப்பு தொடர்பில் பலர் கவலை கொள்கின்றனர். இவருக்கான பாதுகாப்பை வழங்கி அடிகளாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் எடுக்க வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தி நிற்கின்றது.
இலங்கையில் உள்ள அனைத்து இராஜதந்திர அமைப்புக்கள் உள்ளடங்களாக ஒடடுமொத்த அனைத்துலக சமூகமும் இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது தமது அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என நாம் கோரி நிற்கின்றோம்

No comments:

Post a Comment