Translate

Tuesday 8 May 2012

தமரா குணநாயகம் ஐக்கிய நாடுகள் பதவியில் இருந்து நீக்கம்! கியூபா தூதுவராக நியமனம்


சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த ஜெனீவாவுக்கான ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்த வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவர் கியூபாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம் ஜெனீவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
இந்தநிலையில் தமக்கான நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ரவிநாத ஆரியசிங்க இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜெனீவாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டால், இது இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்ற சர்வதேச பிரசாரத்துக்கு வலுச் சேர்க்கப்படும் என்று தமரா குணநாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழரான தமரா குணநாயகம்,ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் போது, இலங்கையில் இறுதிப்போரின் போது மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தநிலையில் தாம் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து நீக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் அவர் பிபிசிக்கு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இவ்வாறான பதவி மாற்றங்கள் எவையும் மேற்கொள்ளப்படாது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை தமது புதிய பதவிக்குறித்து தமரா குணநாயகத்தின் கருத்து எவையும் இதுவரை வெளியாகவில்லை.

No comments:

Post a Comment