வொஷிங்டனில் நேற்று முன்தினம் காலை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சுமார் 200 நாடுகளின் மனித உரிமை நிலைவரம் குறித்த 2011 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டார்.
இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 44 பக்க அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு
இலங்கை பல கட்சி அரசமைப்பைக் கொண்ட குடியரசு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 ஜனவரியில் இரண்டாவது ஆறாண்டுப் பதவிக்காக மீளத் தெரிவு செய்யப்பட்டார்.
அரசமைப்பு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடாளுமன்றம் 2010 ஏப்ரலில் தெரிவு செய்யப்பட்டது. இலங்கை அரசில் ஜனாதிபதி குடும்பமே ஆதிக்கம் செலுத்துகிறது.
ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்கள் பாதுகாப்புச் செயலர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என முக்கியமான இரண்டு நிறைவேற்று அதிகாரமுள்ள பதவிகளை வைத்துள்ளனர். மூன்றாவது சகோதரர் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கிறார்.
ஜனாதிபதியின் மகன் உள்ளிட்ட பெருந்தொகையான அவரது உறவினர்கள் முக்கியமான அரசியல் மற்றும் இராஜதந்திரப் பதவிகளில் இருக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டுமே எல்லா பிரதான கட்சிகளாலும், தேர்தல் சட்டங்கள் மீறப்பட்ட மோசடியானதாகவே இடம்பெற்றன.
பெருமளவு அரச வளங்கள் ஆளும் கூட்டணியால் தேர்தல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் அரச படைகளினதும், அரச ஆதரவு துணை ஆயுதக்குழுக்களினதும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளே பிரதானமான மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது.
அரசியல் நோக்கம் கருதி இந்தக் குழுக்கள் செயற்படுகின்றன. இந்தக் குழுக்களால் தாக்குதல்களை நடத்தப்படுகின்றன. குடியியல், சமூக செயற்பாட்டாளர்களும், விடுதலைப் புலிகளின் அனுதாபிகளெனக் கருதுவோரும் துன்புறுத்தப்படுகின்றனர்.
ஊடகவியலாளர்கள் சுயதணிக்கையை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது.
இன்னொரு முக்கியமான மனித உரிமைப் பிரச்சினை காணாமற்போனவர்கள் விவகாரம்.
முன்னைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமற்போயுள்ள போதும் அதற்குப் பொறுப்புக் கூறப்படவில்லை. படையினர் தடுப்பிலுள்ளோரை சித்திரவதை செய்து துன்புறுத்துகின்றனர். சிறைச்சாலைகளின் மோசமான நிலை தொடரும் பிரச்சினையாகவே உள்ளது.
அதிகாரிகளால் பொதுமக்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர். அரச படைகளாலோ பொலிஸ் துறையாலோ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு எண்ணிக்கையிலானோர் விசாரணை சூழலில் மரணமாகியுள்ளனர்.
நீதி விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. உண்மையான நீதி மறுக்கப்படுவது ஒரு பிரச்சினையாக இருக்கிறது.
நீதித்துறைக்குள் நிறைவேற்று அதிகாரத் தலையீடுகள் உள்ளன. விதிகளை மீறும் வகையில் பொதுமக்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிடுகிறது.
கருத்து வெளிப்பாட்டு _தந்திரம், ஊடக சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை, ஒன்றிணையும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
தீவின் எல்லாப் பகுதிகளுக்கும் பொதுமக்கள் சென்று வரக்கூடிய நிலை உள்ளபோதும், வடக்கு, கிழக்கில் இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் பரந்தளவில் உள்ளன.
உயர்பாதுகாப்பு வலயங்களும் இருக்கின்றன. பொதுமக்கள் செல்வதற்கு தொடர்ந்தும் தடுக்கப்பட்ட பகுதிகளும் உள்ளன. அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகின்றனர். சுயதணிக்கை பரவலாக உள்ளது.
18 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் சுதந்திரமான ஆணைக்குழுக்கள் மற்றும் அரசமைப்பு சபைக்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியே பெற்றுள்ளார்.
இதற்கு நாடாளுமன்றத்தின் ஆலோசனை கேட்கலாமே தவிர, அனுமதி பெற வேண்டியதில்லை. 2010 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நீதியற்ற வகையில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அரசு செல்வாக்குச் செலுத்தத்தக்க விதத்தில் நடந்ததாக சந்தேகங்கள் உள்ளன.
வெளிப்படைத் தன்மையின்மை அரசின் முக்கியமான மோசமான பிரச்சினை.
வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான பாகுபாடும் பிரச்சினையாக உள்ளன.
சிறார்கள் தவறாக நடத்தப்படுவதும், ஆட்கள் கடத்தப்படுவதும் பிரச்சினைகளாக உள்ளன.
உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு எதிரான சிறுபான்மைத் தமிழ்ச்சமூகத்தினருக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்கின்றன. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட எண்ணிலடங்காத தமிழர்கள் உள்ளனர்.
தொழிலாளர் உரிமைகளும், சிறார் தொழிலாளர் பிரச்சினைகளும் உள்ளன.
மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்ட மிகக் குறைந்தளவிலான அதிகாரிகளையே அரசு சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது.
ஆனால், மோதல்களின் போது அனைத்துலக மனிதஉரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறிய எவருமே பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை.
பரந்தளவிலான மனிதஉரிமை மீறல்கள், குறிப்பாக பொலிஸாரின் சித்திரவதைகள், ஊழல், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அதிகார பூர்வமாகத் தண்டிப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
அரச ஆதரவு துணை ஆயுதக்குழுக்களில் உள்ள அடையாளம் தெரியாத நபர்களே கொலைகள், தாக்குதல்கள் பொதுமக்கள் துன்புறுத்தல்களுக்குப் பொறுப்பாக இருந்துள்ளனர்.
அவர்களுக்கும் அரச படைகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன. இப்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment