Translate

Saturday, 5 May 2012

சிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் பரிந்துரைகள் � சுஸ்மா குழு கைளித்தது!


�சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண வலியுறுத்துவதுடன் நின்று விடாமல், தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கவும், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும்.�


இவ்வாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சிறிலங்கா சென்று திரும்பிய சுஸ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லியில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இந்தியப் பிரதமரின் பணியகத்தில் இடமபெற்ற சந்திப்பின் போது, சுஸ்மா சுவராஜ் குழு தமது பயணம் தொடர்பாக தயாரித்த அறிக்கை மன்மோகன்சிங்கிடம் கையளிக்கப்பட்டது.

நேற்றுக்காலை 10 மணி தொடக்கம் சுமார் 45 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, மற்றும் இந்தியப் பிரதமர் பணியக துணை அமைச்சர் நாராயணசாமி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு உறுப்பினரிடமும் மன்மோகன்சிங் கருத்துகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

அதேவேளை, இந்தச் சந்திப்பின் போதும், குழுவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலும் பின்வரும் விடயங்கள் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • சிறிலங்காவில் தமிழர் பிரச்சினையை தீர்க்க அரசியல் தீர்வு தான் ஒரே வழி. இதை ஏற்படுத்தாவிட்டால், தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. எனவே, பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும்படி, சிறிலங்கா அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
  • அத்துடன் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒன்றிணைந்த சிறிலங்காவில் தமிழர்கள் கௌரவமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தும்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்தனர்.

காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாண அரசுகளிடம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். இதை சிறிலங்கா அரசு எதிர்க்கிறது.

  • தமிழர்கள் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டு.ம்
  • வடக்கில் உடனடியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதன்மூலம் தமிழர்களின் கையில் நிர்வாகத்தைக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறிலங்கா அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் தடைப்பட்டுப் போய் உள்ள பேச்சுக்களை உடனடியாக மீளத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது தற்போதைய உடனடி தேவையாகும்.

பேச்சுக்களில் எந்தெந்த விடயங்கள் குறித்துப் பேசுவது என்ற விவரத்தை, சிறிலங்கா அரசாங்கம் சொல்ல மறுப்பதே இந்தப் பேச்சுக்கள் முடங்கிப் போயிருப்பதற்குக் காரணம்.
எனவே, பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை இறுதி செய்யும்படி, சிறிலங்கா அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

அதன்பின், பேச்சுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • வடக்கில், வளங்கள் நிறைந்த விளைநிலங்களில், தற்போது சிறிலங்கா இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளைநிலங்களில் இருந்து, சிறிலங்கா இராணுவத்தை அகற்றிவிட்டு அவற்றை நிலத்தின் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழர் பகுதிகளில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள எண்ணிலடங்கா சிறிலங்கா இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும்.
  • சிறிலங்கா இராணுவத்துக்குப் பதிலாக காவல்துறையை அந்தப் பகுதிகளில் நிறுத்த வேண்டும்.
  • சிறிலங்கா தமிழர் பிரச்னையை, தமிழகத்துப் பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சினையாக கருத வேண்டும்.
  • அங்கு இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட நிதி உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முறையாகச் சென்றடைகிறதா என்று கண்காணிக்க வேண்டும். தற்போது இந்தக் கண்காணிப்பை, சிறிலங்கா இராணுவம் செய்து வருகிறது. 
  • இந்தக் கண்காணிப்பைச் செய்வதற்கு இந்தியா சார்பில் நிபுணர்களை அனுப்ப வேண்டும்.
  • தமிழர் வசிக்கும் பகுதிகளில், அவர்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொள்ளவும், நடவடிக்கை எடுக்கவும் தமிழ் அதிகாரிகளை அதிகளவில் நியமனமிக்க வேண்டும்.

மீள்குடியமர்வைப் பொறுத்தவரை, 2005ம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமே அங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.  இது தவறானது. 2005ம் ஆண்டுக்கு முன்பே இரண்டரை லட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். 

  • அவர்களின் இடங்கள் பறிபோய் உள்ளன. எனவே, அவர்களையும் மீள்குடியேற்றம் செய்ய வகை ஏற்படுத்திட வேண்டும். 
  • எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களிடையே ஒருவித அச்சம் இப்போதும் உள்ளது.

கோவில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் எல்லாம் சிறிலங்கா இராணுவத்தினர் நிறைந்து காணப்படுகின்றனர்.

இது தமிழர்களிடையே ஒருவித பீதியை இன்னும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இது தவிர வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் கூட சிறிலங்கா இராணுவத்தினரின் கெடுபிடிகள் உள்ளன.

இது தேவையற்ற குழப்பத்தை தமிழர்களிடையே ஏற்படுத்தி வருவதால், இதை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இந்தியக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குழுவின் கருத்துகளைக் கேட்டபின்னர், அவர்களிடம் பேசிய மன்மோகன்சிங், சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க, சிறிலங்கா அரசுடன் இணைந்து இந்தியா செயற்பட்டு வருகிறது என்றும் அங்குள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு பக்கபலமாக நிற்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

முன்னதாக நேற்றுக்காலை, செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, சிறிலங்கா விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சுஸ்மா சுவராஜ் குழுவிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2481

No comments:

Post a Comment