Translate

Tuesday 15 May 2012

சாள்ஸ்அன்ரனியின் இறுதிக்கணங்கள் -ஒரு போராளியின் வாக்குமூலம்


சாள்ஸ்அன்ரனியின் இறுதிக்கணங்கள் -ஒரு போராளியின் வாக்குமூலம்
பகுதி 01
'..... அப்ப நாங்கள் இரட்டை வாய்க்காலுக்கு அருகே நிண்டம். இது மே 02 ஆந் திகதி. பின்னேரம். மம்மல்பொழுது. அண்டைக்கு ஒரு பவளில அண்ணை (தலைவர் பிரபாகரன்) வந்திறங்கினார். முந்தின மாதிரி இல்லை. ஆள் கொஞ்சம் மெலிஞ்சிருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெரிதாக இல்லை. ஆனால், லைன் போட்டிருந்தது. முன்னரண் நல்ல பாதுகாப்பு. ஆனால் செல் சங்காரமாகக் கூவிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. ஆனந்தபுரத்தில நிண்ட ஆமி போட்டுத்தாக்கிக் கொண்டிருந்தான். தாராளமாக றவுண்ஸ்சும் வரும். அங்காற் பக்கத்தில சண்டை நடக்குது. சண்டையெண்டால் இடைவிடாத தொடர் சண்டை. இப்பிடியான நிலைமையில முன்னரணுக்கு அண்ணை வந்திருக்கிறதைப் பார்க்க எனக்கு என்னவோ போல இருந்தது. மனம் பதறியது. ஆனால் என்ன செய்ய முடியும்?

ஆனந்தபுரம் சண்டையும் எங்களைக் கைவிட்டிட்டுது. இப்ப மாத்தளன் பக்கத்தில வந்த ஆமி வலைஞர் மடத்தில் நிண்டு சுத்தி வளைச்சமாதிரி நிற்கிறான். என்ன செய்யிறது? அடுத்தது என்ன நடக்கும்? அண்ணை என்ன செய்யப்போறார்? இயக்கம் என்ன முடிவெடுக்கும்? எண்டு ஒரே மண்டைக்குழப்பமாக இருந்தது. சனங்கள் ஆமியிட்டப்போறதும் திரும்பி வாறதுமாக ஒரே அமளி. இயக்கம் சிலவேளை சனங்களைத் தடுக்கும். சிலவேளை விடும். உண்மையாக அப்ப என்ன முடிவோட இயக்கம் இருந்தது எண்டு எனக்குக் குழப்பம். அப்பதான் அண்ணை அங்க வந்தார்.
இப்பிடி இறுக்கமான நிலைமை இருக்கேக்க அண்ணை இப்பிடி வந்து ஒரு பாதுகாப்புமில்லாமல் நிற்கிறதெண்டால் எப்பிடியிருக்கும்? ஆனால், அண்ணையின்ரை பெடியள் உஷாராகத்தான் இருந்தாங்கள். அவங்கள் தங்களின்ரை பாதுகாப்பைச் செய்திருந்தாங்கள். எண்டாலும் செல் வந்தால் அல்லது றவுண்ஸ் வந்தால் என்ன செய்யிறது?
ஆனால், அண்ணை ஒரு பதற்றமும் இல்லாமல் இறங்கி நிண்டு தளபதிகளோடு கதைத்தார். நிலைமைகளைப் பார்த்தார். அப்ப தம்பியும் (சார்ள்ஸ் அன்ரனி – பிரபாகரனின் மகன்) அங்கதான் நிண்டான். கூட நிண்ட தளபதிகளோட கதைச்சார். நாங்கள் அவர் நிண்ட இடத்தில இருந்து ஒரு நாற்பது மீற்றர் தூரத்தில இருந்து நிலைமைகளைப் பார்த்துக் கொண்டிருந்தம்.
எனக்கு அண்ணையைப் பார்க்க ஒரு மாதிரியாக, பாவமாக இருந்தது. இதுக்கு முந்தி அப்பிடி நாங்கள் அவரைப் பார்க்கேல்லை. எப்பவும் துடிப்பாக இருப்பார். சிலவேளை பகிடி விட்டுக் கதைப்பார். பெடியள் நல்லாப் பம்பலடிக்க வேணும் எண்டு சொல்வார். எல்லாரையும் உற்சாகப் படுத்துவார்.
ஆனால், அண்டைக்கு அவர் இதுக்கெல்லாம் நேர் மாறாகவே இருந்தார். படு சீரியஸாகவே தெரிந்தார். சுற்றி நிண்டவையும் படு சீரியாசகத்தானிருந்தினம். எதைப் பற்றியோ ஆராய்கிறார்கள் எண்டு வடிவாகத் தெரிஞ்சுது. ஒரு பத்து நிமிசமிருக்கும். பிறகு பவளில ஏறிப் போய் விட்டார்.
அவர் போனபிறகு தளபதிகள் கூடிக் கதைத்தார்கள். பிறகு எங்களைக் கூப்பிட்டார்கள். கூப்பிட்ட தளபதிகள் என்ன சொல்லப் போகிறார்கள்? என்ன திட்டத்தைத் தரப்போகிறார்கள் என்று அறிவதில் எனக்கு ஆர்வம். எதிரியை விழுத்த வேணும் அல்லது மாற்றத்திட்டத்தைப் போட்டு அவனை மடக்க வேண்டும் என்று துடிச்சுக் கொண்டிருந்தன்.
பானு, ஜெயம், புலனாய்வுத் துறைக்காரர், கணனிப் பிரிவுக்காரர், எங்கட கொம்பனி லீடர்ஸ்... எண்டு ஒரு நானூறு பேருக்கு மேல இருந்திருப்பம். அப்ப இரவாகீட்டுது. புதிசா லைனைப் போடுற வேலை இன்னொரு பக்கத்தில நடந்து கொண்டிருக்குது. அதேவேளை வாற ஆமியை எப்பிடித் தடுப்பது? எப்பிடித் திசை திருப்புறது? எண்டு நாங்கள் மண்டையைப் போட்டு உடைச்சுக் கொண்டிருக்கிறம். இந்த இக்கட்டைப் புரிஞ்சு கொண்டுதான் அண்ணை மாற்றுத் திட்டமொன்றை வரைந்திருந்தார்.
ஆமி எதிர்பார்க்காத பக்கத்தால பிரிச்சுக் கொண்டு போறது எண்டதுதான் இந்தத் திட்டம். ஆனால், இதைப் பற்றி அப்ப எங்களுக்கு முழுமையாக தெரியாது. எங்களுக்கு அப்ப சொன்னதெல்லாம் கெதியில - இரண்டொரு நாளுக்கிடையில ஒரு நல்ல முடிவு கிடைக்கப்போகுது. அதுவரையில நாங்கள் விடாமல், தளர்ந்து போகாமல் தாக்குப்பிடிக்க வேணும். இதுதான் முக்கியமான கட்டம். இந்தக் கட்டத்தைக் கடந்திட்டமெண்டால் பிறகு நிலைமையை வெண்டு திருப்பி விடலாம் எண்டார்கள்.
எங்களுக்கும் வேற வழியில்லை. அதோட இது சரியெண்டும் பட்டுது. இதுவரையும் எத்தனையோ உயிரைக் குடுத்துப் போராடிய போராட்டத்தை எப்பிடிக் கைவிடுறது? எவ்வளவு பேரின்ரை உழைப்பும் தியாகமும் இந்தப் போராட்டத்துக்காகச் செய்யப்பட்டிருக்கு?
நாங்கள் கடைசிவரையில நிண்டு பிடிக்கிறது எண்ட முடிவுக்கு நான் வந்தன். கனபேர் அந்த மனநிலையிலதான் நிண்டார்கள். ஆனால், கிட்ட வந்த ஆமி விடுவானா? அவன் தொடர்ந்து சண்டைபிடிச்சுக் கொண்டேயிருந்தான். சனங்கள் செத்துக் கொண்டேயிருந்துதுகள். தப்பின சனங்கள் எங்க போறது, என்ன செய்யிறது? எண்டு ஒண்டுந்தெரியாத நிலையில இருந்ததுகள். இதுகளையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு நெஞ்சு வெடிச்சிடும்போல இருந்தது. அழுகை வந்தது. ஆனால் நான் அழயில்லை. எங்கடை வீட்டுக்காரர் எங்கை போய்ச்சினம் எண்டே தெரியாது. என்ரை ஒரே மகனின் முகம் நினைவில் வந்து வந்து போகும். மனைவிக்கு நான் தெளிவாகவே ஒரு விசயத்தைச் சொல்லியிருந்தன். நீ சனங்களோட இரு. அதுகள் என்ன முடிவெடுக்குதுகளோ அதையே நீயும் எடுத்துக் கொண்டு அதுகளோட போ. நான் கடைசிவரையும் செய்யக் கூடியதைச் செய்து போட்டுத்தான் பிறகு வாறதைப் பற்றி யோசிப்பன் எண்டு. அவையை நான் கடைசியாகக் கண்டது மாத்தளனில. அதுக்குப் பிறகு என்ன நிலைமை எண்டு ஒண்டுமே தெரியாமற் போயிட்டுது.
எல்லாத்தையும் நினைக்க நினைக்க நெஞ்சில நெருப்பு மூண்ட மாதிரி ஒரு ஆக்ரோஷம். ஆனால், நிலைமை வரவர மோசமாகிக் கொண்டு வந்தது. ஆமி அங்குலம் அங்குலமாக நகர்ந்து முன்னுக்கு வந்து கொண்டிருந்தான். சனங்களும் குறைஞ்சு கொண்டு வந்தது. பெடியளின்ரை வேகத்திலயும் ஒரு தொய்வு. என்ரை இருபது வருச இயக்க வாழ்க்கையில இப்பிடியொரு நிலைமையைக் காணேல்ல.
இப்படி இருக்கேக்கதான் இயக்கம் கடைசிச் சண்டைக்குத் தயார்ப்படுத்தியது. அது மே 14 ஆம் திகதி. அதுதான் எங்கட இயக்கத்தின்ரை கடைசிச் சண்டையாக இருந்திருக்க வேணும். ஆனால் அது அப்படி நடக்கேல்ல. எல்லாமே மாறீட்டுது.
அந்தச் சண்டையில எத்தனை பேர் இறங்கினது எண்டு எனக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் கணினிப் பிரிவைச் சேர்ந்த எண்பது பேர் ஒரு பக்கத்தால இறங்கினம். 'எங்களுக்கு முதல்ல வேற 'ரீம்'கள் உள்ளுக்குப் போட்டுதுகள்' எண்டு சொன்னார்கள்.
'நாங்கள் அடிச்சுக் கொண்டு உள்ளுக்க இறங்க வேணும். அப்பிடி இறங்கி உள்ளுக்க போனால் எங்கள எடுக்கிறதுக்கு அங்க ஆக்கள் தயாராக இருக்கிறார்கள். உள்ளுக்க நிக்கிற 'ரீம்'களோட அப்பிடியே காட்டை ஊடறுத்துக் கொண்டு போக வேண்டியதுதான். ஆமியின்ர கவனம் எல்லாம் முன்னரணில் இருந்ததால், காட்டுப்பக்கத்தில அவன்ரை பலம் குறைவாக இருக்கு. நாங்கள் காட்டுக்குள்ளால் முன்னேற வேணும்' எண்டு சொல்லப்பட்டது. பிறகு எங்க போறது எண்டு ஒண்டுந் தெரியாது. அது தளபதிகளுக்குத்தான் தெரியும்.
இப்ப நாங்கள் இரட்டை வாய்க்காலுக்கு தென் மேற்காக இருக்கிற றோட்டைக் கடந்து பறட்டைக் காட்டுக்குள்ளால் ஊடுருவி, நந்திக் கடல் களப்பைக் கடக்க வேணும். நந்திக்கடல் களப்பில் எங்களுக்கெண்டு தயாராக வள்ளங்கள் நிண்டன. நாங்கள் அதுக்குக் கிட்ட போக ஆயத்தம். அந்த நேரம் பார்த்து வந்து விழுந்தது செல். எனக்கு முன்னால ஒரு பத்து மீற்றர் தூரத்தில விழுந்த செல் வெடிச்சது. நான் பக்கத்தில கவரெடுத்திட்டன். என்னைப் போல அவனவன் அங்கங்க விழுந்து படுத்திட்டான். இரண்டு பேருக்குக் காயம். அதுக்கப்பால் பார்த்தால்....
ஐயோ... தம்பி (சார்ள்ஸ் அன்ரனி) விழுந்து போய்க் கிடந்தான். வெடிச்ச 'செல்' தம்பியைக் கொண்டு போனது. எல்லாரும் குழம்பிப் போனோம். தம்பிக்கருகில் மணிவண்ணன் எண்ட கணினிப் பிரிவு மென்பிரிவுப் பொறுப்பாளர் நிண்டார். ஆனால், அவருக்குக் காயம் இல்லை. அவர் குழறினார். பெடியள் எல்லாம் குழம்பிக் குழறத் தொடங்கியிட்டாங்கள். தம்பியின்ர தலையில 'செல்' காயம் ஏற்படுத்தியிருந்தது. அவன் ஏற்கனவே சட்டித் தொப்பி போட்டிருந்தாலும் 'செல்' வந்து விழுந்த நேரம் பார்த்து கஸ்ரகாலத்துக்கு தொப்பியைக் கழற்றியிருந்தான்.
தம்பியின் இழப்பு எல்லாரையும் தடுமாற வைச்சது. என்ன செய்யிறது எண்டே ஒருவருக்கும் தெரியாத நிலை. ஆனால், தம்பியின் உடலை எடுத்து அனுப்பி விட்டு, நாங்கள் சண்டைக்கு ஆயத்தமாகினம். ஆனால், திட்டமிட்டமாதிரி அண்டைக்கு நாங்கள் களப்புக்குள்ள இறங்கிக் கொள்ள முடியேல்ல.
16 ஆம் திகதி முன்னிரவு. நாங்கள் களப்புக்குள்ளே இறங்கினோம். அறுபது தொடக்கம் எண்பது பேர்வரையில் எங்கட ரீமில இருக்கும் எண்டு நினைக்கிறன். இரவு. பதற்றம். எங்கே போறது? என்ன செய்யிறது? ஒண்டும் தெரியாமல் வெற்றி தோல்விகளைப் பற்றிச் சிந்தித்துப் பிரயோசனமில்லை எண்ட நிலையில களப்புக்குள்ளே கால் வைத்தேன். எத்தனை வெற்றிகளைப் பெற்ற நாங்கள் இப்ப...? சண்டைக்களத்துக்க இறங்கேக்கை ஒரு நாளும் இந்த மாதிரித் தடுமாற்றங்களோட நான் இறங்கினதில்லை. ஆனால், இப்ப... நிலைமை குழம்பியிருக்கேக்க இறங்கிறம். அப்ப மனநிலை எப்பிடியிருக்கும்?
ஏறக்குறைய என்னைப் போல ஒரு மனநிலையிலதான் மற்றப் பெடியளும் பெரும்பாலும் இருந்திருப்பினம். எண்டாலும் அண்டைக்கு இரவு இறங்கினம்.
நாங்கள் அடிச்சுக் கொண்டு போவது நல்லதா இல்லையா எண்டு முடிவெடுக்க முதலே மாறன் ஆட்கள் எங்களை முந்தி இறங்கி முன்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறாங்கள். ஆகவே நாங்கள் அதைப் பின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தம்.
ஆனால், நாங்கள் எதிர்பார்த்த மாதிரி நந்திக் கடலுக்கு மேற்கே இறங்க முடியேல்ல. சண்டை தொடங்கீட்டுது. நாங்கள் கரையிறங்க முதலே ஆமி எங்களக் கண்டிட்டு அடிக்கத் தொடங்கீட்டான். நாங்களும் அடிச்சம். கடுமையான சண்டை. இந்த நிலைமையில என்ன செய்ய முடியும்? களப்புக்கு மற்றப்பக்கத்தில, காட்டுக்குள்ள நிற்பதாகச் சொன்ன ரீமின்ரை நிலைமை என்ன எண்டு தெரியாது. அவன் எங்களுக்குச் செல் போட்டான். நாங்கள் காயம் பட்டவர்களையும் தூக்கிக் கொண்டு பின்வாங்கினோம். எனக்குப் படகில் ஏற முடியவில்லை. படகு தள்ளி நிண்டது. அந்தக் கணத்தில் நான் முடிந்தேன் என்றே நினைத்தேன். ஆனால், எப்பிடியோ மிஞ்சிய படகில் ஒரு மாதிரி ஏறித் தப்பிவிட்டேன். கரைக்கு வர முதலே நான் காயப்பட்டுவிட்டிருந்தேன். மிஞ்சி வந்தது ஒரு ஏழெட்டுப்பேர்தான். எனக்குத் துக்கம் தாங்க முடியேல்ல. அடுத்ததாக என்ன செய்யிறது எண்டுந் தெரியேல்ல.
கரையில் வந்து பார்த்தேன். அந்த ரண்டு மணித்தியாலத்துக்குள் எவ்வளவோ மாற்றங்கள். சனங்கள் சிதறிக்கிடந்தனர் பிணங்களாய்.... அங்கும் இங்குமாய் எல்லாம் எரிஞ்சும் புகைஞ்சும் கொண்டிருந்துது. ஆனால், காட்டுக்குள்ள கடுமையான சண்டை நடக்குது எண்டு தெரிஞ்சது. அந்தளவுக்குச் சத்தம். ஆனால், அங்க என்ன நிலைமை எண்டு ஒண்டுந் தெரியாது. இஞ்ச முள்ளிவாய்க்கால் பக்கத்தில இயக்கப் பெடியளும் பிள்ளையளும் சிவிலுக்கு மாறிக் கொண்டிருந்தினம். சிலர் அப்பவும் சண்டைக்கு ஆயத்தமாக இருந்தினம். நான் என்ன செய்வம் எண்டு யோசிச்சுக் கொண்டிருந்தன். கடைசிவரையும் சண்டை பிடிப்பம் எண்டு மனம் சொல்லிச்சு. ஆனால், நிலைமை ஒவ்வொரு நொடிக்கிடையிலும் மாறிக் கொண்டிருந்தது. எனக்குத் தெரிந்த போராளிகள் சிலர் சிவிலுக்கு மாறிவிட்டார்கள். சிவில் எண்டால் சனங்களைப் போல சாறம் உடுத்துச் 'சேர்ட்' போட்டுக் கொண்டு, ஆற்றையோ ஒரு பிள்ளையைத் தூக்கிக் கொண்டு சனத்தோட சனமாகக் கரைந்து விடுவது... பெண்போராளிகளும் அப்பிடித்தான். அவையள் சனங்களைப் போல சாதாரண சட்டைகளைப் போட்டுக் கொண்டு, நெற்றியில குங்குமப் பொட்டையும் வைச்சுக் கொண்டு சனங்களாகிச்சினம். இதில பிரச்சினையாக இருந்தது, தலைமயிரைக் கட்டையாக வெட்டியிருந்த பெண்போராளிகள்தான். அவையள் தலையை மூடி மொட்டாக்குப் போட்டுக்கொண்டு, சிவில் உடுப்பில சனங்களுக்குள்ள கரைஞ்சு கொண்டிருந்தினம்... ஆனால் இது லேசான விசயமில்லை. என்ன நடக்கப்போகுது எண்டு தெரியாமலே எல்லாம் நடந்து கொண்டிருந்திது.
இதைப் பார்க்க எனக்கு என்ன செய்வதெண்டே தெரியாத அளவுக்குத் துக்கமாக இருந்தது. உடுப்புக் கழன்று விழுந்த பிறகு நிர்வாணமாக நாங்கள் நிற்கிற ஒரு உணர்வு. ஆனால், அங்கும் இங்குமாக சண்டை இன்னும் நடந்து கொண்டேயிருந்தது. இதுதான் எங்கட இயக்கம் - விடுதலைப் புலிகள் எண்டு சொல்லிற மாதிரி கடுமையான சண்டை. எந்தப் பக்கம் அது நடக்குது எண்டு கணிக்க முடியாத அளவுக்கு எல்லாப்பக்கத்திலயும் சத்தம்......'
நான் கடைசியாக அங்கியிருந்து – முள்ளிவாய்க்கால்ல இருந்து வெளிக்கிடேக்க அநேகமாகச் சனங்கள் இல்லை. நாங்கள் (சனங்களும் நாங்களுமாக) ஒரு இருநூறு பேர்வரையில கடைசீல வெளியேறினம். காயப்பட்ட ஆக்களைத் தூக்கிக் கொண்டு வாறதுக்காகவே நாங்கள் நிண்டம். அதுக்கு முதல்ல போற ஆக்களிட்ட தூக்கி விடக்கூடிய காயக்காரரைத் தூக்கி விட்ட பிறகே நாங்கள் வெளிக்கிட வேண்டியிருந்தது. அதுக்குப் பிறகும் கொஞ்சப்பேர் அங்கயிருந்து வெளியேறிவந்தினம். பத்தையளுக்குள்ள, வடலிகளுக்குப் பின்னால, பங்கர்களுக்குள்ள எண்டு முனகற் சத்தங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தது....
 ....உண்மையில நான் அங்கயிருந்து வெளியேறேக்க கேட்ட சத்தத்தை விட இப்ப என்ரை காதுக்குள்ள கேட்கிற சத்தம்தான் பெரிசு....'
பகுதி – 02
'...... பிறகு நான் தடுப்பில இருந்து இப்ப வெளியில வந்திருக்கிறன். நாங்கள் முந்தி இருந்தபோது இருந்ததுக்கும் இப்ப இருக்கிறதுக்கும் இடையில எவ்வளவு வேறுபாடுகள்... எவ்வளவு மாற்றங்கள்.... சனங்கள் ஏதோ இருக்குதுகள். நானும் இருக்கிறன். எல்லாரும் என்னவோ செய்து கொண்டிருக்கிறம்.
ஆமிக்கும் ஒண்டுந் தெரியேல்ல. எங்களுக்கும் ஒண்டும் தெரியேல்ல. பேப்பரைப் பார்த்தால் சம்மந்தன் சிங்களக் கொடியைத் தூக்கிப் பிடிக்கிறார். ரணிலின்ரை மேதினக் கூட்டத்தில அரசாங்கத்தின்ர ஆக்கள் புலிக்கொடியைப் பிடிக்கிறார்கள்.
மே மாதத்தை தமிழர்கள் எப்படி இனிக் கொண்டாடப்போகினம்? அதை எப்பிடி நினைவு கூரப்போகினம் எண்டு நான் தடுப்பில இருக்கேக்க நினைப்பன். ஆனா, வெளியில வந்து பார்க்கத்தான் விளங்குது என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்குது, இனி எப்பிடியெல்லாம் நடக்கப்போகுது எண்டு....
முந்தி, எங்களுக்கு ஒரேயொரு நினைவு நாள்தான் பொதுவாக இருந்தது. மாவீரர் நாளெண்டு. இப்ப நாங்கள் முள்ளிவாய்க்கால் முடிவு நாளையும் கொண்டாட வேணும் எண்டு நினைக்கிறன்....
ஒரு சமூகத்தின்ர வாழ்வில எதெல்லாம் மறக்கவே முடியாத அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துதோ அதுவே அவர்களின் வரலாற்றுச் சுவடுகளாகும் எண்டது என்னுடைய கணிப்பு....'

No comments:

Post a Comment