Translate

Tuesday 1 May 2012

கற்பகா ஆடைத் தொழிலகம் திறப்பு விழா

இலண்டன் அகிலன் பவுண்டேசன் தலைவர் திரு.எம்.கோபாலகிருஸ்ணன் அவர்களின் நிதி உதவிமூலம் மட்டக்களப்பு சமூக நலன்புரி அமைப்பினால் கற்பகா ஆடைத் தொழிலகம் திறப்பு விழா 2012.04.27 ந் திகதி புதுக்குடியிருப்பில் உள்ள சமூக நலன்புரி அமைப்பு காரியாலயத்தில் அதன் தலைவர் திரு.எஸ்.திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு விசேட அதிதியாக கலந்துகொண்ட திரு.எஸ்.கோபலகிருஸ்ணன் அவர்களால் கற்பகா ஆடைத் தொழிலகம் திறந்து வைக்கப்பட்டது. மற்றும் இந் நிகழ்வின் சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ.சீ.யோகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்தோடு மாவட்ட செயலக உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர், பயிற்சி பெறும் மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் திரு.எம்.கோபாலகிருஸ்ணன் அவர்களின் சேவையை பாராட்டி கெளரவ.சீ.யோகேஸ்வரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். 


தலைமையுரை ஆற்றிய நிறுவனத்தின் தலைவர் திரு.எஸ்.திருநாவுக்கரசு அவர்கள் அநாதை மஇல்லங்களில் இருந்து கல்வியை முடித்துகொண்ட மாணவிகளின் எதிர்கால நலன்கருதியே இவ் ஆடைத் தொழிலகம் ஆரம்பிக்கப்படுவதாகவும், இவர்களால் தயாரிக்கப்படுகின்ற ஆடைகளை விற்பனை செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கைச் செலவுக்கான வருமானத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். 

இந் நிகழ்வின் விசேட உரையாற்றிய திரு.எம்.கோபாலகிருஸ்ணன் அவர்கள் இது வெறும் பயிற்சி மாத்திரமல்லாது ஒரு ஆடைத் தொழிலகமாக யுவதிகள் சுயதொழில் செய்யக்கூடிய வகையில்   நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என்ற கருத்தை தெரிவித்தார். அத்தோடு எம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு வெளிநாடுகளில் உள்ள எம் புலம்பெயர்ந்த உறவுகள் மூலமாக உதவியினை பெற்று பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்திக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட கெளரவ.சீ.யோகேஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த உறவுகள் பல உதவிகளை செய்து வருகின்றார்கள் என்றும் அந்த வகையில் திரு.எஸ்.கோபாலகிருஸ்ணன் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறுபட்ட மனிதநேயப் பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்றும், அதில் அநாதை இல்லங்களை பொறுப்பேற்றல், இலவச கணனிப் பயிற்சிக்கான உதவிகள் மற்றும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக பப்படக் கம்பனி, அத்தோடு இது போன்ற ஆடைத் தொழிலகம் என்பன போன்ற பல்வேறு உதவிகளை எம் மக்களுக்கு ஆற்றி வருகின்றார் என்றும், யுவதிகள் வேலைவாய்ப்புக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு அசெகரியங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் ஆகவே இது போன்ற தொழிலகங்கள் எம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படுவது தற்போதைய காலத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது என்று வலியுறுத்தி கூறினார்.

No comments:

Post a Comment