Translate

Tuesday, 5 June 2012

இவர் 50 ரூபாய் டாக்டர்!


இந்த காலத்தில் படிப்பதே பணம் சம்பாதிக்கத்தான் என்கிற நிலை இருக்க, 'நான் சேவை செய்வதற்காகவே படித்தேன்' என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் சொன்னபடியே சேவையும் செய்து கொண்டிருக்கிறார் 28 வயதேயான இளம் டாகடர் வித்யா.


இவர் ஒரு பல் டாக்டர்.

உங்களை 50 ரூபாய் டாக்டர் என்று சொல்கிறார்களே ஏன்?

50 ரூபாய்க்கு மேல் நோயாளிகளிடம் நான் கட்டணம் வசூலித்ததில்லை. அதனால் அப்படி சொல்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில் கஷ்டப் படுகிறவர்களிடம் அந்த 50 ரூபாய் கூட வாங்க மாட்டேன்.

அதுமட்டுமல்ல, உங்களை மொபைல் டாக்டர் என்றும் சொல்கிறார்களே?

வீட்டிலிருக்கும் வயதானவர்கள், நோயாளிகள், முடியாதவர்கள் இவர்களுக்குப் பல்லில் ஏதாவது தொந்திரவு என்றால், எனக்கு போன் செய்வார்கள். நான் உடனே ஏன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவேன். அதனால் என்னை 50 ரூபாய் டாக்டர், மொபைல் டாக்டர் என்றெல்லாம் செல்லமாக கூப்பிடுகிறார்கள்.

உங்களின் 'வளமுடன் வாழ்வோம்' அமைப்பைப் பற்றியும், அது தொடர்பான உங்களின் சேவை பற்றியும் சொல்லுங்கள்?

அம்மா கல்யாணி சென்னை போர்ட் ட்ரஸ்ட் மருத்துவமனையில் நர்ஸா வேலைப் பார்த்தாங்க. அப்போ அம்மாவைப் பார்த்தே எனக்கு மனசில் டாக்டரா ஆகணும்னு லட்சியம் வளர்த்துக் கொண்டேன். அப்பா பழநிவேலும் எனக்கு உறுதுணையா இருந்தார். நான் சென்னை ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜில்தான் படித்தேன். படித்து முடித்தவுடனே, எனக்கு சென்னை தரமணி மருத்துவமனையில் HIV நோயாளிகளை பராமரிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆர்வமா சேவை செய்தேன். அப்போதெல்லாம் என் மனம், இப்படி விழிப்புணர்வு இல்லாமல் அநியாயமாக நோயில் விழும் இவர்களுக்கு விழிப்புணர்வு தந்தே ஆகவேண்டும் என்றே சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருக்கும். அதன்பின் கேன்சர் பற்றிய விழிப்புணர்வுக்காக நான் மறுபடியும் என் சேவையைத் தொடரவேண்டியதாக இருந்தது. இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்க யோசிக்கத்தான் 'வளமுடன் வாழ்வோம்' அமைப்பைத் தொடங்கினேன்.

சென்னையை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் சென்று மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தியிருக்கிறேன். நிறைய கல்லூரிகள், அலுவலகங்கள், அமைப்புகள் இவற்றிலும் சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தியிருக்கிறேன். அதேபோல நகரங்களிலும் விழிப்புணர்வு முகாம், மருத்தவ சிகிச்சை முகாம் நடத்தியிருக்கிறேன். இதற்காக நான் யாரிடமும் பணம் கேட்டதில்லை. என் அப்பா, கலிபோர்னியாவில் இருக்கும் என் சகோதரன் இவர்களிடம்தான் பணம் கேட்பேன்.

இப்போது புதிதாக என் வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் என் கணவர் கிரிசபரி கூட எனக்கு உதவி செய்து, என்னை ஊக்கப் படுத்துகிறார். யாராவது நிதியுதவி கொடுத்தால் என்னால் இன்னும் நிறைய சேவைகள் செய்யமுடியும்.

கிராமப் புறப் பெண்களையும் பார்த்து இருக்கிறீர்கள், நகர்ப்புறப் பெண்களையும் பார்த்திருக்கிறீர்கள். இவர்களில் யாரிடம் பொதுவாக நோய்க்கான விழிப்புணர்வு உள்ளது என்று நினைக்கிறீர்கள்?

கிராமப் புறப் பெண்களிடம்தான் என்று சொல்வேன். காரணம், அவர்கள் தலைவலி, கால்வலி என்றால் கைவைத்தியம் என்று ஏதாவது செய்து கொள்வார்கள். இந்த கைவைத்தியம் எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. ஆனால், நகர்ப்புறப் பெண்கள் தானே சென்று மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பில் பக்கவிளைவை ஏற்படுத்திக் கொள்வார்கள். முதலில் மருந்து கடைக் காரர்கள் தன்னிச்சையாக மருந்து தருவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.

'வளமுடன் வாழ்வோம்' அமைப்பின் செயல் திட்டங்கள் என்னவென்று தெளிவாக சொல்லலாமே?

புகையிலை, பீடி, சிகரெட் இன்னும் பிற பொருள்களை ஆண்கள் உபயோகிப்பதால்தானே வாய் புற்றுநோய் வருகிறது. இதற்கு விழிப்புணர்வு கொடுத்தே ஆகவேண்டும். பெண்களுக்கு வரும் பிறப்புறுப்பு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தரவேண்டும். இவர்களுக்கான மருத்துவ பரிசோதனையைக் கட்டாயப் படுத்த வேண்டும். குழந்தைகள் பாலியல் தொந்திரவுக்கு ஆளாவதைத் தடுக்க வேண்டும். இப்படி நிறைய வஷயங்கள் செய்ய வேண்டும். நோயில்லாத சமுதாயம் உருவானாலே நம் நாட்டில் உழைப்பவர்கள் அதிகமாவார்கள். நமது நாடும் பொருளாதாரத்தில் முன்னேறும். அதுவரை என் சேவை தொடரும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், பொருளாதார நெருக்கடி வந்தாலும், நான் தளர்ந்து போக மாட்டேன். என்னால் முடிந்தவரை நோயில்லாத சமுதாயமும், ஆரோக்கியமான சமுதாயமும் உருவாக்க பாடுபடுவேன். தெளிந்த நோக்கோடு, மன உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கும் டாக்டர் வித்யாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினோம்.

4தமிழ்மீடியா

No comments:

Post a Comment