வேலை வாய்ப்புக்காக கிழக்கு மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல பெண்கள் கொழும்பில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
கிராமப் புறங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்குக் கொழும்பிலும் பிற பிரதேசங்களிலும் தொழில் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வரும் ஒரு கும்பலே இவர்களைக் கொழும்பில் சிறைவைத்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் வருமானம் பெற்று வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வறுமைப்பட்ட குடுங்களிலுள்ள இளம் யுவதிகளே இவ்வாறு ஏமாற்றப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் பலாத்கார பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு அங்கு பலாத்கார பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நுவரெலிய மாவட்டத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரே இந்தத் தகவல்களைப் பொலிஸாரிடம் அம்பலப்படுத்தியுள்ளார்.
தாம் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல பெண்கள் பலாத்காரப் பாலியலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையைத் நேரடியாகக் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பதுளையில் வான் ஒன்றை திடீர் சோதனைக்குட்படுத்திய பொலிஸார், அதிலிருந்த 13 பேரைக் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 11 பேர் பெண்களாவர். கிளிநொச்சி, கிண்ணியா, தோப்பூர், மஸ்கெலியா, கினகத்தேன, பசறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment