Translate

Sunday, 3 June 2012

நாட்டு அதிபர் ஒருவரின் திருட்டுப்பயணம் - ஏகன்

இந்த கணத்தில் சிங்கள தேசம் என்பது அதிபர் இல்லாத ஒரு தேசமாகவே இருக்கிறது. சிங்கள தேசத்தின் அதிபர் இப்போது சிங்களதேசத்தில்தான் இருக்கிறாரா அல்லது அவர் உத்தியோகபூர்வமான வெளிநாட்டுப்பயணத்துக்கு புறப்பட்டுவிட்டாரா என்ற எதுவே தெரிவிக்கபடாமலேயே மறைக்கப்பட்டு இருக்கிறது. பாவம் வாக்களித்த சிங்கள மக்கள்.



போர் நடைபெறும் பகுதிகளுக்கும் அதிக அபாயம் உள்ள பகுதிகளுக்கு விஜயம் செய்யும் நாட்டு அதிபர்கள் தமது பயணத்தை ரகசியமாக வைத்து அந்த போர் பகுதிக்குள் இறங்கிய பின்னரே வெளிப்படுத்தும் வழமையும் உண்டு. ஆனால் சிங்களதேசத்தின் அதிபர் மகிந்த வருகை தரப்போவதோ பிரித்தானியாவுக்கு. அதிலும் பிரித்தானியாவின் மகாராணியாரின் முடிசூட்டிய வைரவிழாவுக்கு பிரித்தானியாவின் முடியாட்சிக்கு உட்பட்டிருந்த தேசம் என்ற முறையில் சிங்களதேச அதிபருக்கு அனுப்பபட்ட அழைப்பின் பேரில் வருகிறார்.

பிரித்தானிய மகாராணி உத்தியோக பூர்வமாக பகிரங்கமாக அனுப்பிய அழைப்புக்கு வருவதற்கு மகிந்தருக்கு ஏன் திருட்டுத்தனம் தேவைப்படுகிறது. இந்த நிமிடம் வரைக்கும் மகிந்தர் சிறீலங்காவிலிருந்து புறப்பட்டதை எந்தவொரு சிறீலங்கா ஊடகமும் (சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகம் உட்பட) வெளிப்படுத்தவில்லை.

ஏதோ ஒரு சைக்கிள் திருடன்போல கட்டுநாயகாவின் பின் கதவால் முக்காடு போட்டுக்கொண்டு விமானம் ஏறி இங்கும் முந்தைய முறைபோல பின் கதவால் வெளியேறி ஏதாவது ஒரு ஐந்துநட்சத்திர விடுதியில் போய் இருந்து... இதற்குதான் நாட்டு அதிபரின் உத்தியோகபூர்வ பயணமா..?

மகாநாயக்கர்கள் பிரித் ஓதி கையில் கட்டிவிட்ட கயிறுகள் எதுவும் லங்கா எல்லை தாண்டியவுடன் காப்பாற்றாது என்று மகிந்தர் நினைத்துவிட்டாரா? அல்லது விமான நிலையத்தில் சென்றமுறை நிரம்பி இருந்த தமிழீழ தேசிய கொடி அவரை அச்சுறுத்தி விட்டதா? எந்த கொடியை நந்திக்கடல் ஓரத்தில் நிரந்தரமாக இறக்கிவிட்டேன் என்று இறுமாந்திருக்கிறாரோ அந்த கொடி அதே வீரியத்துடன் அதே உணர்வுடன் மீண்டும் அவர் கண்ணுக்கு முன்னாலேயே, அவருக்கு சில அடிகள் தூரத்திலேயே அசைந்து பறப்பதை தவிர்ப்பதற்காகவா மகிந்தரின் இந்த திருட்டு பயணம்.

எப்படியாயினும் மகிந்தருக்கு இது தோல்வியே. இத்தனை மணிக்கு மகிந்த மாத்தையா பிரித்தானியாவுக்கு பயணமாகிறார் என்று அறிவித்து பஞ்சநாயகர்கள் வழி அனுப்ப மந்திரி பிரதானிகள் கை அசைக்க விமானம் ஏறாமல் மறைவான பயணம் செய்வதே அவருக்கு தோல்விதான்.

இது சென்றமுறை மகிந்தருக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய மக்கள் அனைவருக்கும் வெற்றிதான். இந்த முறையும் சென்றமுறையைவிட அதிகமாக திரளவேண்டும். இன்னும் அதிகமான தமிழீழ தேசிய கொடிகள் நிறைய வேண்டும். தமிழீழம் என்ற சொல் எங்கும் ஒலிக்க வேண்டும்.

No comments:

Post a Comment