Translate

Saturday, 16 June 2012

திருமலையில் குவியும் பன்னாட்டு முதலீடுகள்–இதயச்சந்திரன் சிறீலங்க


ஊடகவியலாளர்களை, ஒரு நாட்டின் உளவாளிகள் என்ற எழுந்தமானமாக எதுவித ஆதாரமுமற்று குற்றம் சாட்டும் போக்கு ஒன்று வளர்ந்து வருவதைக் காண்கிறோம்.
இது ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை உருவாக்க உதவாது என்பதனை, பிரித்தானியாவில் இயங்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளைத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவதூறு அரசியலிற்குள் செல்ல விரும்பாததால் இதனை இத்தோடு விட்டு விடுகிறேன்.

ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும் புரிந்துணர்வும் உருவாக வேண்டிய கால கட்டமிது.
தமிழ், முஸ்லிம், சிவில் சமூகங்களும் முற்போக்கான சிங்கள சிவில் சமூகங்களும் இணைய வேண்டிய தேவையொன்று ஏற்படுகிறது.
கட்சிகளைப் பொறுத்தவரை, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி அண்மைக் காலமாக தெரிவித்து வரும் கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் வட,கிழக்கில், அரசால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு மற்றும் இராணுவ நிர்வாக மயமாக்கல் என்பன தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதை கருத்திற் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படுகின்றது.
யுத்தம் முடிவுற்ற பின்னர் சர்வதேச சமூகத்தின் இலங்கை மீதான பார்வை எவ்வாறு அமைகிறது என்பதை புரிந்து கொள்ளும் நுண்ணரசியலை ஆழமாகப் பார்க்க வேண்டும்.
நவதாராண்மைவாத உலகக் கோட்பாட்டில் வளர்ச்சியடையும் நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தே அதிகம் பேசப்படுகிறது.
மனித உரிமை என்கிற விவகாரத்தின் ஊடாக குறைந்த பட்ச ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் வகையில் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
மக்கள் பேரழிவினைச் சந்தித்த போது மௌனமாக இருந்தவர்கள், அதற்கு உதவி புரிந்தவர்கள், அம் மக்களுக்கான நீதியை, அழித்தவர்களே பெற்றுக் கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை மனித உரிமையைப் பற்றி பேசுவோர் நில ஆக்கிரமிப்பில் தீவிரமாக ஈடுபடும் ஆட்சியாளரை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை.
உதாரணமாக வெளியேற்றப்பட்ட மூதூர் கிழக்கு மக்களின் எதிர்காலம் குறித்து இவர்கள் அக்கறை கொள்வது போல் தெரியவில்லை.
முதலீட்டு ஆக்கிரமிப்புப் போட்டிக்குள் அவர்கள் முடங்கிப் போயுள்ளார்கள்.
கடந்த வியாழனன்று இலங்கை முதலீட்டுச் சபையும் ஸ்ரீலங்கா கேற்வே இன்டஸ்ரீஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டின் (Srilanka Gateway Industries pvt Ltd) தலைவர் பிரபாத் நாணயக்காரவும் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
திருமலைத் துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதியில் 4 பில்லியன் (Billion) அமெரிக்க டொலர் முதலீட்டில் கனரக கைத்தொழில் மையத்தை நிறுவுவதாக அமைகிறது அந்த ஒப்பந்தம்.
நாட்டிற்குள் வரவழைக்கப்பட்ட மிகப் பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) இதுவென பெருமிதமடைகிறார் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்னாண்டோ.
இந்த வணிகக் கூட்டமைப்பில் உள்ளூர் நிறுவனங்களும், பிரேஸில், அவுஸ்திரேலியா, ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் அமெரிக்க போன்ற
நாடுகளில் இயங்கும் நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன.
மொத்தத்தில், பன்னாட்டு பல்தேசியக் கம்பனிகளின் முதலீடு இக் கனரக கைத்தொழில் மைய நிர்மாணத்தில் ஈடுபடுத்தப்படுவதை நோக்கலாம்.
நேரடியாக 3500 மக்களும், மறைமுகமாக 20,000 மக்களும் இங்கு வேலை வாய்ப்பினைப் பெறுவார்களென எதிர்வு கூறப்படுகிறது. அத்தோடு சம்பூரை மையமாகக் கொண்ட 97 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கனரக தொழிற்சாலை நிர்மாணிப்பிற்கான விசேட வலயமொன்று உருவாக்கப்படப் போகிறது.
மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இத் திட்டத்தின் முதற் கட்டப் பணிக்கான செலவு 700 மில்லியன் டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் பன்னாட்டுக் கம்பனிகளின் இவ் வருகையை நில ஆக்கிரமிப்பின் புதிய வடிவமாகவும் பார்க்கலாம்.
ஏற்கனவே இந்தியாவின் அனல் மின் நிலைய நிர்மாணிப்பு விவகாரத்தால் சர்ச்சைக்குரிய பிரதேசமாக கருதப்பட்ட சம்பூர், இன்று பன்னாட்டு நிறுவனங்களின் வரவினால் புதிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றது.
இந்நிலையில் திருமலை மாவட்டம், வேறொரு பிரச்சினையை எதிர்கொள்வதையும் பார்க்கலாம்.
2002 இல் யூ.என்.பி. ஆட்சிக் காலத்தில் பெற்றோலிய வளத்துறை அமைச்சினால் 33 ஆண்டு கால குத்தகையில் பிரித்தானியரால் நிர்மாணிக்கப்பட்ட 99 எண்ணெய் சேமிப்பு குதங்கள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.
அதனை மீளப் பெறுவது குறித்து இலங்கை அரசு ஆராய்வதாக செய்திகள் கசிகின்றன.
வருகிற 29 ஆம் திகதி இலங்கைக்கு  விஜயம் மேற்கொள்ளும் இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனன் , இவ் விவகாரம் குறித்து பேச வருகிறாரெனக் கூறப்படுகின்றது.
1987இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில், ‘இந்திய நலனிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திருமலை அல்லது எந்த துறைமுகத்தையும் வேறு நாட்டு இராணுவத்தின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என்பதோடு, திருமலை எண்ணெய் சேமிப்பு குதங்கள் இலங்கை – இந்திய கூட்டு நடவடிக்கை மூலம் பராமரிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கான் யுத்தத்தில் பின் தள வழங்கல் மையமாக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையைப் பயன்படுத்த அமெரிக்கா விரும்புகிறது என்கிற செய்தி கசிந்தவுடன், 2002 ஏப்ரல் முதலாம் திகதியன்று அன்றைய இந்திய உயர்ஸ்தானிகர் கோபாலகிருஷ்ணகாந்தி  சீனன்குடாவிலுள்ள குதங்களைப் பார்வையிடச் சென்றார்.
அவ்வேளையில் அங்கிருக்கும் 15 குதங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது பாவனைக்கு உட்படுத்தியிருந்தது.
உலகின் ஆழமிக்க இயற்கைத் துறைமுகமாகக் கருதப்படும் திருமலை துறைமுகமானது, அமெரிக்க இராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் மையமாக மாறி விடும் அபாயம் இருப்பதை உணர்ந்ததால், இந்தியாவின் இந்த எண்ணெய் குத குத்தகை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அன்று கூறப்பட்டது
ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் தனது 60 சதவீதமான படை வலுவை நகர்த்தும் அமெரிக்காவின் திட்டமும், குதங்களை மீளப் பெற உத்தேசிக்கும் அரசின் நகர்வும் இந்தியாவிற்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதலாம்.
குறிப்பாக வட, கிழக்கிலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க இடங்கள், வேறு வல்லரசாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடக்கூடாதென்கிற அச்சம் இந்தியாவிற்கு இருப்பதை மறுக்க முடியாது.
போர்க் குற்றம் மற்றும் பொருளாதார அழுத்தங்களிலிருந்து தப்பிச் செல்வதற்கு, மேற்குலகோடு ஒரு இணக்கப்பாட்டு அரசியல் நகர்வினை இலங்கை அரசு மேற்கொள்கிறதாவென்கிற சந்தேகமும் இந்தியாவிற்கு ஏற்படுகின்றது.
ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யலாமென மார்ச்சில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் ஜப்பானிற்கும் விலக்களித்த அமெரிக்காவானது மலேஷியா, தென்னாபிரிக்கா, தென் கொரியா, தைவான் மற்றும் துருக்கியோடு இலங்கைக்கும் அச் சலுகையை அண்மையில் வழங்கியது. புதிய இணக்கப்பாட்டு நகர்வினை உறுதிப்படுத்துகிறது.
அடுத்ததாக, அமெரிக்கச் சந்தைக்கான ஆடை ஏற்றுமதி கடந்த வருடத்தில் மட்டும் 1590 மில்லியன் டொலர்கள்.
ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையூடாக மேற்கொள்ளப்படும் இவ் வர்த்தகம் குறித்தான மீளாய்வு ஒன்றினை மேற்கொள்ள, அமெரிக்காவின் வர்த்தக துறையின் உயரதிகாரி மைக்கல் ஜே. டிலானி அவர்கள் இலங்கை வந்துள்ளார்.
அவரோடு மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர், அவ்வரிச்சலுகை நீடிக்கும் சாத்தியப்பாடு உண்டென இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.
ஆகவே ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி, ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நீடிப்பு, ஐ.நா. சபையின் அவமானகரமான நாடு என்கிற குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு என்பன, இலங்கை குறித்தான மேற்குலகின் மென்போக்கினை வெளிப்படுத்துவதைக் காணலாம்.
இந்நிலையில் இலங்கைக்கு வருகிறார் சிவ்சங்கர் மேனன்.
2004 ஆம் ஆண்டு தை மாதம் கைச்சாத்திடப்பட்ட, 2006 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (SAFTA) திருத்தங்களைச் செய்வதன் ஊடாக இந்திய இறக்குமதியைக் குறைத்து, உள்ளூர் தேசிய முதலாளிகளை ஊக்குவிக்கலாமென்று அரசு திட்டமிடுவது மேனனிற்கும் தெரிகிறது.
ஆகவே பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாகக் குறைவடைந்த நிலையில், ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்படும் பின்னடைவுகளை இந்தியா அனுமதிக்கப் போவதில்லை.
சார்க் நாடுகளின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, தீர்வை குறித்த விடயத்தில் சில உடன்பாடுகளை எட்டியிருந்தது.
2006 -2007 காலப் பகுதியில் வரி விதிப்பினை 20 சதவீதமாகக் குறைப்பதாயும், 2012 உடன் அதனை இல்லாமல் செய்வது என்பதன் அடிப்படையில் அதன் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இலங்கை அரசு தனது 208 பொருட்களின் இறக்குமதி தொடர்பான சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
அத்தோடு இவ்வருட மே மாதம் வரை இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் 71,668 ஆக இருப்பதோடு அது குறைவடையும் சாத்தியங்கள் உண்டென்பதால் இந்தியாவுடன் உரசல் நிலையை மேலும் வளர்த்துக் கொள்ளுமா இலங்கை அரசு? என்கிற கேள்வியும் எழுகின்றது.
நன்றி – வீரகேசரி வார இதழ்

No comments:

Post a Comment