மட்டக்களப்பை ஆக்கிரமிக்கும் சிங்கள இராணுவத்தினர் பட்டிப்பாழை வட்டாரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தாந்தாமலை முருகன் கோயில் கற் சிலைகளை இடித்து சிதைத்துள்ளனர்.
கிழக்குப் பகுதியினர் இக்கோயிலை ' சின்ன கதிர்காமம்' கோயிலென்று அழைப்பது வழக்கமாகும். இதனை சுற்றியுள்ள 25 ஏக்கர் நில பகுதி, 1959-ஆம் ஆண்டில் சிலோன் நீதிமன்ற ஆணையினரால் சைவ புனித தளமாக முத்திரையிடப் பட்டது.
தாந்தாமலை முருகன் கோயில், 1994-ஆம் ஆண்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புலிகள் படையினரால் காக்கப்பட்டும் நன் முறையில் பராமரிக்கப்பட்டும் வந்தது. ஆனால், நடந்த போருக்குப் பின்னர் அது இலங்கை இராணுவ படையினரின் கைக்கும் கொழும்பு தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கும் கைமாறிவிட்டது.
இதனிடையே, இச்சைவ கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கொழும்பு அரசாங்கத்தினர் புத்தர் கோயில் கட்ட முற்படுவதாக கிராம மக்கள் கவலைக்கிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போது கோயிலை ஆக்கிரமித்துவரும் இலங்கை இராணுவத்தினர் மே 18 அன்று, 'கிரானைட்' கற்களால் வடிக்கப்பட்ட சிலைகளையும் கோயில் சிற்பங்களையும் சிதைத்துள்ளனர் என கோயில் நிர்வாகத்தினர் தொடுத்துள்ள புகாரின் வழி தெரியவந்துள்ளது.
இடித்து அழிப்பதென இலங்கை இராணுவத்தினரால் முடிவுசெய்யப்பட்ட அக்கோயிலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் P. அரியநேத்ரன், கோயில் நிர்வாகிகளின் அழைப்பின்பேரில் கோயிலை பார்வையிட சென்றுள்ளார்.
"சென்ற சனிக்கிழமை ஜூன் 2 அன்று, கோயிலை பார்வையிட நான் அங்கு சென்றிருந்தேன். அங்கே சுவாமி முத்தையா அவர்கள் தியானம் புரியும் கந்தவேல் கோயில் மீதான சேதத்தை பார்த்து மனமொடிந்துபோனேன்.." என்று கவலையுடன் தெரிவித்துள்ளார் அரியநேத்ரன்.
இதன் தொடர்பாக இலங்கை அரசிடம் கோயில் நிர்வாகத்தினர் பல்முறை புகார் தொடுத்தும் அதற்காக எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுத்ததாயில்லை. தொடர்ந்து, கோயில் தளத்தில் புத்தர் கோயில் கட்டுமானத்தை நிறுத்தக்கோறி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ராஜபக்சேவுக்கும் அறிக்கை ஒன்று நிர்வாகத்தினர் அனுப்பியுள்ளனர். அதற்கும் எந்த பதில் நடவடிக்கைகளும் இல்லை.
தாந்தமலையும் அதன் சுற்றுவட்டார கிராமங்களும் தொன்றுதொட்டு சைவ திருத்தளமாகவே திகழ்ந்து வருகிறது.
மேலும் கிடைக்கப்பெற்ற தகவலின் படி, இலங்கை இராணுவ உதவியோடு கோயில் தளத்தை கைப்பற்றயிருக்கும் சிங்கள புத்தர்கள் இதற்கு முன்னரும் பட்டிப்பாழை வட்டாரத்திலுள்ள மற்றுமொரு சைவ கோயிலையும் கைப்பற்றியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
தமிழரசி வெற்றிக்குமரன்
No comments:
Post a Comment