Translate

Sunday, 3 June 2012

ஆளும் கட்சிக்குள் உக்கிர உட்பூசல்


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்துவது தொடர்பில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் உக்கிர முரண்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை முன்மொழிவுகள் தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் நோக்கில், அரசாங்கம் தனிப்பட்ட ரீதியில் கட்சிகளின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோரியிருந்தது.
இதன்படி சில கட்சிகள் ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளன. சில கட்சிகள் வெகு விரைவில் தமது நிலைப்பாடுகளை வெளியிட உள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவுகளை அமுல்படுத்தப்பட வேண்டுமென பொதுவாக கருத்து வெளியிட்டுள்ளன.
எனினும், தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் மஹஜன எக்சத் பெரமுன போன்ற கட்சிகள் ஆணைக்குழுவின் சகல முன்மொழிவுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளன.
இதேவேளை, கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பான நிலைப்பாட்டை வெளியிடவில்லை. இது தொடர்பாக ஆராய விசேட ஆணைக்குழு ஒன்றை கட்சி நியமித்துள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரப் பகிர்வு, வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல், இராணுவ முகாம்களை அகற்றுதல், தேசிய கீதம் இசைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடான நிலைமை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment