Translate

Saturday 23 June 2012

ஆதீன மடத்தில் ஆபாச நடனம்: நித்யானந்தா மீது வழக்கு பதிவு _


  மதுரை ஆதீன மடத்தில் ஆபாச நடனம் ஆடியது தொடர்பாக நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் மீது விளக்குத்தூண் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன். இவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து உள்ளதாவது: பஜனை செய்வதற்காக நானும் நண்பர்களும் மே 12இல் மதுரை ஆதீன மடத்திற்கு சென்றோம். நித்யானந்தா எங்களைத் தனியாக அழைத்து, ‘சமாதானமாகப் போய்விடுவோம்'' என்றார். ‘ஆதீனத்தில் சமய, சன்மார்க்க நெறிகள் மீண்டும் கடைப்பிடிக்கப்பட்டால் ஆதரவு தருகிறோம்'' எனக் கூறினோம்.


‘நான் நடத்தும் பூஜையில் கலந்து கொண்டால், மெய்ஞான பேரின்பத்தை அடைவீர்கள்'' என நித்யானந்தா கூறினார். அதனால் மண்டபத்தில் நித்யானந்தா சீடர்களுடன் அமர்ந்தோம். கன்னடம் பேசிய பெண்கள் மற்றும் அரவாணிகளுடன் நடிகை ரஞ்சிதா அங்கு வந்தார். பெரிய சிம்மாசனத்தில் மூத்த ஆதீனம் அமர்ந்திருக்க, அவரது காலை வருடியபடி வைஷ்ணவி இருந்தார். சிறிய சிம்மாசனத்தில் நித்யானந்தாவும், அவருக்கு பின்னால் ரஞ்சிதாவும் இருந்தனர்.

பெங்களூர், திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த நித்யானந்தாவின் ஆண், பெண் சீடர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி வந்தனர். பரிசுத்த நீர் என்று கூறி ஒரு திரவத்தை அனைவருக்கும் கொடுத்தனர். அதைக் குடித்ததும் மெய் மறந்தது. உடல் லேசானது. ஆங்கிலப் பாடல் இசையுடன் ஒலிக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் இசைக்கு ஏற்ப ஆடினர். அதில் இணைந்து ஆடுமாறு எங்களிடம் நித்யானந்தா கூறினார். நாங்கள் தலை அசைத்தோம்.

பின்னர் புலித்தோல்களையும் யானைத் தத்தங்களையும் தரையில் அடுக்கினர். தத்தங்களை தலையணையாக வைத்து நித்யானந்தா படுத்தார். அங்கு நடந்த செயல்கள் பிடிக்காமல் நாங்கள் வெளியேறி, நித்யானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க விளக்கத்தூண் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பொலிசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஏ.செல்வம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார். நேற்றுக் காலையில் மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீலிடம், மனுதாரர் புகார் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்கிறார்களா? அல்லது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் அன்பரசன், விளக்குதூண் பொலிசார், நித்யானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவித்தார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை முடித்து உத்தரவிட்டார். __

No comments:

Post a Comment