பிறேசிலில் நடந்த சந்தப்பின் போது, தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க முற்பட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பொய்யான புள்ளிவிபரங்களைக் கூறி- அவரது கவனத்தை திசைதிருப்பி- சிறிலங்கா அதிபர் ஏமாற்றிய விபரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நேற்று முன்தினம் றியோடிஜெனீரோவில் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பாக இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், செய்தியாளர்களிடம் தகவல் வெளியிட்டுள்ளார் “சிறிலங்காவில் தமிழர்களுக்கான புனர்வாழ்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பாக இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. மூன்று இலட்சமாக இருந்த, மீளக்குடியேறக் காத்திருந்த இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தற்போது 3000 ஆக குறைந்துள்ளதாக இந்தியப் பிரதமரிடம் மகிந்த ராஜபக்ச எடுத்துக் கூறினார்.
சிறிலங்காவில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் மகிந்த ராஜபக்ச விளக்கமளித்துள்ளார். எனினும், இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டவர்கள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் பற்றிய விடயங்களுக்கே அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
மீள்குடியமர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் வடக்கிற்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படுவதாகவும், நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியதாக“ ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியப் பிரதமரிடம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மீள்குடியமர்வு தொடர்பாக கொடுத்த புள்ளிவிபரங்கள் முழுப்பொய் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கையில், இன்னமும் 6022 பேரே மீளக்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறிலங்கா அரச ஊடகமான டெய்லி நியூசில் இன்று வெளியாகியுள்ள செவ்வி ஒன்றில், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இன்னமும் மீளக்குடியேற்றப்படாமல் 6034 பேர் முகாம்களில் உள்ளதாக கூறியுள்ளார்.ஆனால், மன்மோகன்சிங்கிடம் இந்த எண்ணிக்கையை பாதியாக குறைத்துக் கூறி ஏமாற்றியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
அத்துடன் அதிகாரப்பகிர்வு பற்றிப் பேச முற்பட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் கவனத்தை மீள்குடியமர்வு, மின்சார வசதிகள் என்று பேசி நேரத்தை இழுத்தடித்ததாகவும் தெரியவந்துள்ளது.
றியோ மாநாட்டில் அதிகளவு வெளிநாட்டுத் தலைவர்களை சந்திக்கும் இறுக்கமான நிகழ்ச்சிநிரலைக் கொண்டிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சிறிலங்கா அதிபரைச் சந்திக்க குறுகிய நேரத்தையே ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment