Translate

Sunday, 24 June 2012

யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது வழக்குத் தொடருவேன்: மாவை சேனாதிராசா


நீதிமன்றில் எமக்கெதிராக பொய் வழக்குத் தாக்கல் செய்தமைக்கும், எமக்கு அவமானம் ஏற்படுத்தியமைக்கும் எதிராக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது வழக்குத் தொடரப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார்.

நேற்றய தினம் யாழ். நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்த நிலையில், இந்த செய்தியினை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று தினக்குரல் ஏட்டின் முற்பக்கத்தில் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக மாவை சேனாதிராசா மீது, யாழ். நீதிமன்றத்தில் வழக்கொன்றை, யாழ். பொலிஸ் நிலைய தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தாக்கல் செய்துள்ளதாகச் செய்தி வந்திருக்கிறது.

கடந்த 18ஆம் திகதி யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்யவிருந்த இடத்தில் இந்த அதிகாரியை நான் பார்த்திருக்கவில்லை. நான் அந்த இடத்திற்குச் சென்ற பொழுது கஜேந்திரன் நீதிமன்றத் தடை உத்தரவை மதித்துப் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர்தான் நீதிமன்றத் தடையுத்தரவையே பார்த்திருந்தேன். “அவ்வுத்தரவை எனக்குக் காட்டிய போது” என்று குறிப்பிட்டிருப்பதே முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

யாழ். பொலிஸ் நிலைய தலைமைக் காரியாலய பொலிஸ் அதிகாரி சிகேரா, என் மீது வழக்குப் போட்டிருந்தால் நீதிமன்றத்தினால் எனக்கு அழைப்பானை விடுவிக்கப்பட வேண்டும். அப்படியானால் அதை எதிர் கொள்வோம்.

அப்படி அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தால் “பொய் வழக்குத் தாக்கல் செய்ததற்கும்” அத்தகைய செய்தி பத்திரிகையில் வந்திருந்தமைக்கு எதிராகவும், உண்மைக்கு மாறான நடவடிக்கையால் எனக்கு அவமானம் ஏற்படுத்தியமைக்கு எதிராகவும் சிகேராவுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்கு என்னால் முடியும். அதன் பொருட்டு எனது வழக்கறிஞர்களை நாடியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment