Translate

Sunday, 3 June 2012

பாரதி இருந்திருந்தால், சிங்களவரைச் சபித்து அறம் பாடி இருப்பார்: வைகோ _


  பாரதி இன்று இருந்திருந்தால்,சிங்களவரைச் சபித்து அறம் பாடி இருப்பார். எனவே அவரது பெயரில் கொழும்பு நகரில் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டாம் என சென்னை பாரதி சங்க நிர்வாகிகளையும், பேராசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: 



கொழும்பு தமிழ்ச் சங்கமும் சென்னை பாரதி சங்கமும் இணைந்து, ஜுன் 1ஆந் திகதியன்று கொழும்பில் பாரதி விழா நடத்துவதாகவும் தமிழகத்தில் இருந்து பேராசிரியர்களும், சொற்பொழிவாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிகிறேன். இதனுடைய கருப்பொருள் 'தேமதுரத் தமிழ் ஓசை உலகெலாம் பரவச் செய்வோம்' என்று அறிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு, தமிழ் ஈழமே ஓர் அடக்குமுறை சிறைக்கூடமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது. தமிழர்களின் ஊர்ப் பெயர்கள் அனைத்தையும் மாற்றி சிங்களப் பெயர்களாக ஆக்கி விட்டனர். இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் அழிவதையே தடுக்க முடியாதவர்கள், உலகெங்கும் தமிழோசை பரப்பப் போவதாக கூறுவது உலகத்தை ஏமாற்ற சிங்கள அரசுக்குத் துணைபோகும் செயலாகும்.

இனப்படுகொலைகளை மூடி மறைக்க, அங்கு அமைதி ஏற்பட்டுள்ளது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டுப் பல போலி நாடகங்களை நடத்தி வருகின்றன. சிங்களவரைக் கண்டனம் செய்ய வேண்டிய தமிழ்ச் சங்கம் உண்மையை மூடி மறைக்க, இப்படி நிகழ்ச்சி நடத்துவது மிகவும் வேதனை அளிக்கின்றது.

பாரதி இன்று இருந்திருந்தால், சிங்களவரைச் சபித்து அறம் பாடி இருப்பார். எனவே, கொழும்பு நகரில் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டாம் என சென்னை பாரதி சங்க நிர்வாகிகளையும், பேராசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். _

No comments:

Post a Comment