Translate

Sunday, 3 June 2012

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இனவாத கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்! பா.அரியநேத்திரன்


பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இனவாத கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்! பா.அரியநேத்திரன்தமிழ் தேசிய கூட்டமைப்போ நானோ ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத நோக்குடன் நடக்கவில்லை என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளா அவர்களே இனவாத கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளா விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பது கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசின் கீழ் இருக்கின்ற ஒரோயொரு பயிற்சி வைத்தியர்களைக் கொண்ட வைத்தியசாலையாகும். இதன் மூலம் அனைத்து இனத்தவர்களும் நன்மை பெற்று வருகின்றனர்.

இவற்றின் தரத்தினை உயர்த்தி மக்களுக்கு அதன் சேவையை பெற்றுக்கொள்ள அரசியல் தலைமைகள் முன்வர வேண்டுமே ஒழிய அவற்றின் பகுதியை வேறு ஒரு இடத்துக்கு கொண்டு செல்வதையே நாங்கள் எதிர்க்கின்றோம்.

இதன் பகுதியை காத்தான்குடிக்கு என்றல்ல எந்த பகுதிக்கு கொண்டுசென்றாலும் இதனை அனைவரும் எதிர்ப்பார்கள். நான் கூறவந்த விடயத்தை பிரதியமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

இதில் இனவாதம் பார்க்கப்படவில்லை. எனினும் பிரதியமைச்சர் இதன் ஒரு சில பகுதிகளை காத்தான்குடிக்கு கொண்டுசெல்ல முற்பட்டதாக ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் எனது கருத்தினை முழுமையாக மறுதலிக்கவில்லை.

பிரதியமைச்சருக்கு உண்மையான அக்கரையிருந்தால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பயிற்சி பெறுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மட்டக்களப்பு போதான வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டுமே ஒழிய அவற்றினை வேறுபகுதிக்கு கொண்டுசெல்ல முனையக்கூடாது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்கும் முன்னின்று செயற்பட்டவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதை யாரும் மறக்கமாட்டார்கள்.

2004ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மேற்கொண்ட பாரிய முயற்சி காரணமாகவே இந்த பீடம் இங்கு தாபிக்கப்பட்டது.

நாங்கள் காத்தான்குடியை அபிவிருத்தி செய்வதற்கு என்றும் தடையானவர்கள் அல்ல அதேபோன்று இனவாத கருத்துக்களை பேசிக்கொண்டு அரசியல் செய்பவர்களும் அல்லர். நாங்கள் பிழையான நடவடிக்கைகளை பிழையென்று கூறுவதில் எப்போதும் பின்னிற்பதில்லை. அதனை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா போன்றவர்கள் இனவாதமாக்கமுற்படுவது கவலைக்குரிய விடயமாகும். இந்த நிலையில் நின்றுபார்த்தால் பிரதியமைச்சரின் கருத்துக்களே முற்றுமுழுதான இனவாத கருத்தாகவுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக பேரவையில் அருட்தந்தை சிறிதரன் சில்வஸ்டர் உயிரிழந்ததன் பின்னர் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களினால் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்ட நிலையிலும் இரகசியமான முறையில் வேறு ஒருவரை அதற்கு நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை நாங்கள் எதிர்க்கின்றோம். அது தொடர்பில் எங்களுக்கு பல்வேறு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

எனவே இனிவரும் காலங்களிலாவது இனவாத நோக்கியதான சிந்தனையை தவிர்த்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையை தரமுயர்த்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாட்டை சிறப்பான முறையில் மேற்கொள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா உட்பட அனைவரும் முன்வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment