அறிக்கையில் வைகோ!
வைகோ அறிக்கை வருமாறு: இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொடூரமாக படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேயின் பேரினவாத சிங்கள அரசின் உண்மையான கோரம் முகம் மீண்டும் அம்பலத்திற்கு வந்து விட்டது.
தமிழ் இனத்தின் தாய்மார்களும், குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும், ஆயுதம் ஏந்தாதவர்களும் விமான குண்டு வீச்சாலும், பீரங்கி தாக்குதலாலும் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகத்தின் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற கொலைக் களங்களை அந்தப் பெயர்கள் நினைவூட்டுவதைப்போல, முள்ளிவாய்க்கால் என்று சொன்னாலே, தமிழர்களின் நெஞ்சைப் பிளக்கின்ற வார்த்தை ஆயிற்று.
ரத்த வெறி பிடித்த சிங்கள இனவாத கட்சியான ஜாதிகாஹேளா உறுமையா கட்சியைச் சேர்ந்தவருமான அமைச்சர் சம்பிகா ரணவக்க தமிழர்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் போதும் என்று நினைக்கிறோம் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று கொக்கரித்து ஊளை விட்டுள்ளார்.
சிங்கள அமைச்சரின் ஆணவ திமிர் பேச்சு இலங்கை அதிபர் ராஜபக்சேயின் குரூரமான எண்ணத்தின் வெளிப்பாடே ஆகும். இந்திய அரசு தந்து வரும் உதவியினாலும், ஆதரவினாலும்தான் இலங்கை அமைச்சர் வாய்க் கொளுப்போடு பேசியுள்ளார்.
வேதனையில் வெந்துபோன தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்க சிங்களவன் வெறியாட்டம் போடுகிறான். இதற்கெல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக சிங்களவன் பதிலும் விலையும் தர வேண்டிய காலம் வந்தே தீரும். முள்ளிவாய்க்கால்கள் மீண்டும் வரும்.
தமிழர்கள் சிந்திய ரத்தத் துளிகளும், தந்த உயிர்களும் சிங்களர் கொட்டத்தை அடியோடு ஒடுக்கி விடுதலை வெள்ளி முளைக்கும் களங்களாக அமையும். அகங்காரத்தோடு தமிழர்களை இழிவுபடுத்திப் பேசிய சிங்கள அமைச்சருக்கும், அந்த அரசுக்கும் கண்டனமும் எச்சரிக்கையும் இந்திய அரசு செய்யத் தவறுமானால், தமிழ் இனத்திற்கு தொடர்ந்து இந்திய அரசு துரோகம் இழைக்கும் பலிக்கே ஆளாகும் என எச்சரிக்கின்றேன்.
என்று வைகோ தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment