Translate

Monday, 4 June 2012

கிட்லரை விஞ்சியது இலங்கை அரசு; வடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டது குறித்து கூட்டு எதிர்க்கட்சிகள் கருத்து


கிட்லரை விஞ்சியது இலங்கை அரசு; வடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டது குறித்து கூட்டு எதிர்க்கட்சிகள் கருத்து
news
 வடக்கில் சந்திக்குச்சந்தி இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் கூட இவ்வளவு இராணுவ முகாம்கள் இருந்தனவா என்பது சந்தேகம். 
 
வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடு அதிகமாக இருப்பதால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாதுள்ளனர். இவ்வாறு கொழும்பில் நேற்று பொது எதிரணிக்கட்சிகள் தெரிவித்தன.
 
மேலும், வடக்கில் தேர்தலை நடத்துவதற்கு அரசிற்கு அச்ச மில்லையெனில், சுயாதீன பொலிஸ், தேர்தல்கள் திணைக்களம், அரச சேவைகள் திணைக்களங்கள் என்பவற்றை நிறுவி அங்கு தேர்தலை நடத்துமாறும் அரசிற்கு பொது எதிரணிக்கட்சிகள் சவால் விடுத்துள்ளன.
 
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிரணிக்கட்சிகளின் ஊடக வியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்ட விடயங்கள் பொது எதிரணிக்கட்சிகளின் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டன.
 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேத்ர தெரிவித்தவை வருமாறு:
 
45 50ஆயிரம் வரையிலான தமிழ் மக்கள் இன்னமும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எப்போது தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள்? அவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
நாட்டில் பல அராஜகங்களை அரங்கேற்றிவரும் அரசினால், தற்போது நாட்டில் தேசிய சொத்துகளான புதையல்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன. எல்லாவல மேதானந்த தேரர்தான் அரசு புதையல்களைத் தோண்டி எடுப்பதற்குத் தரகராகச் செயற்படுகின்றார். 
 
இவர் பௌத்த தர்மத்தை மீறிச் செயற்படுகின்றார். மதத் தலைவர்கள் எம்.பியாவதைத் தடைசெய்தல் வேண்டும் என விஜேதாஸ ராஜபக்ஷ எம்.பி. தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார். இது மிகவும் சிறந்ததாகும். நாமும் இதற்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம்.
 
இந்திய நடிகைகளின் பங்கேற்புடன் நடத்தப்படும் கார்ல்டன் ரக்பி உற்சவத்துக்கு 210 மில்லியன் ரூபாவை அரசு செலவுசெய்துள்ளது. இதில் 74 ஆயிரம் ரூபாவே இலங்கையின் ரகர் வீரர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. ஏனைய மில்லியன் கணக்கான பணம் அனைத்தும் இந்திய நடிகைகளுக்கும் வெளிநாட்டு வீரர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
 
சர்வதேசத்தின் அழுத்தம் மஹிந்த அரசுமீது பிரயோகிக்கப்பட்டதால்தான் தாம் விடுதலை அடைந்தார் என சரத் பொன்சேகா கூறுகின்றார். இவரது விடுதலைக்கு யார் பாடுபட்டார்கள் என்பதை அறியாதவர்போல் பொன்சேகா கூறுகின்றார்.
 
பொன்சேகாவுக்கென நாட்டில் தனி மரியாதையும் வரவேற்பும் உள்ளது. அரசுடனோ அல்லது டிரான் அலஸுடனோ அவர் கூட்டுச் சேர்ந்தாரெனில் சிறிசேன குரேக்கு நடந்ததே அவருக்கும் நடக்கும் என்றார்.

No comments:

Post a Comment