கடந்த மாதம் 20-ம் தேதி போடப்பட்ட கடிதம் ஒன்றுக்கு, இந்த மாதம் முதல் வாரத்தில்தான் பதில் கிடைத்தால், இரு காரணங்கள் இருக்கலாம். போஸ்டல் டிபார்ட்மென்ட், சுறுசுறுப்புடன் பணி புரியாமல் இருக்கலாம். அல்லது, பதில் எழுதியவருக்கு பெரிதாக ஆர்வம் இல்லாதிருக்கலாம்.
இலங்கை பிரச்னை குறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு, தற்போது பிரதமரிடம் இருந்து பதில் வந்துள்ளது.
பிரதமரின் பதிலில், “இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க பேச்சு தொடர்பாக, கடந்த மாதம் 20-ம் தேதியிட்ட தங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது.
கடந்த மாதம் 21-ம் தேதி ரியோ-டி-ஜெனிரோ மாநாட்டில், இலங்கை ஜனாதிபதியை சந்தித்தேன். அப்போது இந்தப் பிரச்னை தொடர்பாகவும், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதற்காக இலங்கை அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசினேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பதில் வந்து சேர்வதற்குள், கடிதத்தில் என்ன எழுதினோம் என்பதை கருணாநிதியும் மறந்திருப்பார். “அப்படி என்னதான் பேசித் தொலைத்தோம்” என்பதை இலங்கை அமைச்சர் சம்பிக ரணவாக்கவும் மறந்திருப்பார்.
இருந்தபோதிலும், பிரதமர் மறக்காமல் பதில் போட்டிருப்பதில் இருந்து, தமது அபிமானத்துக்குரிய கூட்டணிக் கட்சித் தலைவர்பால் அவர் கொண்டுள்ள அன்பையும், இலங்கைத் தமிழர் விஷயத்தில் அவருக்குள்ள ஆர்வத்தையும் புரிந்து கொள்ளலாம்.
சரி, கடிதத்தில் என்ன தெரிவித்துள்ளார் பிரதமர்?
“தமிழர் பிரச்னைக்கு இலங்கைக்கு உள்ளேயே தகுந்த அரசியல் தீர்வு காண தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் குறித்து, இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன்” என்று எழுதியுள்ளார்.
பிரதமரே வலியுறுத்தி விட்டதால், சீக்கிரம் பிரச்னை தீர்ந்துவிடும். சீக்கிரம் என்றால், டெசோ மாநாட்டுக்கு முன்னாடிகூட பிரச்னை தீர்ந்து போகலாம்.
No comments:
Post a Comment