“பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசுக்கு ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு நிதியுதவி செய்தார்” என ம.தி.மு.க. கூறியுள்ளது. “அப்படிப்பட்ட ஒருவர் பாரத தேசத்தின் குடியரசுத் தலைவராக எண்ணம் கொண்டுள்ளார். அதற்கு, ‘தமிழர் காவலர்’ என்று தம்மை கூறிக்கொள்ளும் கருணாநிதி ஆதரவு கொடுக்கிறார்” எனவும் தெரிவித்துள்ளது அக்கட்சி.
ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், திருப்புவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் யுத்தம் நடந்தபோது, மத்திய அரசில் அமைச்சராக இருந்து நிதி உதவி செய்தவர் பிரணாப் முகர்ஜி. அவரது நிதியுதவியால், புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.
அதே பிரணாப் முகர்ஜி தற்போது ஜனாதிபதி வேட்பாளர் என்ற போர்வையில் தமிழர்களின் ஆதரவை வேண்டி நிற்கிறார்.
இந்த பிரணாப் முகர்ஜியை, கருணாநிதி ஆதரிக்கிறார். இதனால், மீண்டும் ஒரு தடவை தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் கருணாநிதி. ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கருணாநிதி, ஈழம் மலர டெசோ மாநாடு கூட்டி நாடகம் போடுகிறார்” என்றும் பேசினார் நாஞ்சில் சம்பத்.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் பிரணாப் முகர்ஜி, மத்திய அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்தார். அந்தப் பதவியில் இருந்து இலங்கை அரசுக்கு எப்படி ‘நிதியுதவி’ செய்தார் என்பதை ம.தி.மு.க. விளக்கவில்லை.
எப்போது விளக்குவார்கள் என்பதும் தெரியவில்லை.
No comments:
Post a Comment