Translate

Tuesday, 10 July 2012

இலங்கையில் வழிபாட்டு தலங்கள் அழிப்பு: ராஜபக்சேவை கண்டித்து மதத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோவில்கள், 400-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்க பாதிரியார்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்புக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 


இவற்றை கண்டித்து அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை- மயிலை கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமை தாங்கினார். 

நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, பாண்டிமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மூத்த தலைவர் ஐதர் அலி, தென்னிந்திய திருச்சபை பேராயர் தேவசகாயம், இந்திய சுயாதின திருட்சபை பிஷப் டேவிட், இந்திய சுதந்திர திருச்சபை பிஷப் பிரகாஷ், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, இந்திய தவ்கீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முகமது முனீர், உளுந்தூர்பேட்டை அப்பர்சாமி மடத்தின் தலைவர் சிவஞான தேசிக சுவாமிகள், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் இஸ்மாயில், கிறிஸ்தவ கூட்டமைப்புத் தலைவர் போதகர் விக்டர் தர்மராஜ், இந்திய கிறிஸ்தவ மக்கள் கட்சித் தலைவர் நாதன், மற்றும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் மத உரிமையை பாதுகாக்க கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ராஜபக்சேவின் உருவப் பொம்மையையும் இழுத்து வந்து தீவைத்தனர். போலீசார் அதை அப்புறப்படுத்தினார்கள்.

போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசும்போது, இலங்கையை ஒரு மத, ஒரு இன, ஒருமொழி நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் சிங்கள அரசு செய்து வருகிறது. ஈழ தமிழர்களின் துயரத்தை ஐ.நா.சபைக்கு எடுத்துச் சென்று அவர்கள் உரிமை பெற இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றனர். 

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர்

No comments:

Post a Comment