Translate

Monday, 30 July 2012

மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெற - வன்முறைகளை அரசு கட்டவிழ்த்து விடுகிறது ! - சுமந்திரன் குற்றச்சாட்டு!


மூன்று மாகாணசபைத் தேர்தல்களிலும் அப்பட்டமான முறையில் தேர்தல் சட்டதிட்டங்களை மீறி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு எப்படியாவது தாம் வெற்றிபெறவேண்டும் என இலங்கை அரசு முழு வீச்சுடன் செயற்பட்டு வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மூன்று மாகாணங்களிலும் ஆளுந்தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தேர்தல் திணைக்களத்திற்கு நாம் முறைப்பாடு செய்துள்ளோம். இருப்பினும், இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணசபைகளுக்கும் இன்னும் ஒருவருட ஆயுட்காலம் இருக்கும் முன்னரே அவற்றைக் கலைத்து அரசு தேர்தலை நடத்துகிறது. இந்த மூன்று மாகாணசபைகளையும் கைப்பற்றும் நோக்கில் அரசு தேர்தல் சட்டதிட்டங்களை மீறிச் செயற்பட்டு வருகின்றது.
மூன்று மாகாணங்களிலும் ஆளுந்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாம் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற குற்றச்செயல்கள் குறித்தே நாம் இதில் அதிகமாகக் கவனம் செலுத்தியுள்ளோம்.
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்திற்கு நாம் முறைப்பாடு செய்துள்ளோம். இருப்பினும், அது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக இருந்தவர் வீட்டிற்கு 50 மீற்றர் தூரமளவில்தான் எமது கிழக்கு மாகாண வேட்பாளரின் வீடு உள்ளது. இப்படி இருக்கையில், கடந்த 18 ஆம் திகதி எமது வேட்பாளரின் வீடு இனந்தெரியாத நபர்களால் சங்கிலி போட்டு பூட்டப்பட்டிருந்தது. முதலமைச்சர் வீட்டிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் நடந்த இச்சம்பவம் முதலமைச்சரின் வீட்டின் காவலாளிகளுக்குக்கூடத் தெரியவில்லையா?
இந்தப் பிரச்சினைகள் இவ்வாறிருக்க, உயர்தர மாணவர்களின் இஸட் புள்ளி விவகாரம் மாணவர்களின் மனநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் அது தவறு என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தபோது தமது தவறை அரச தரப்பு ஒத்துக்கொண்டிருக்கலாம். தவறை அரசு ஒத்துக்கொண்டிருந்தால் ஏழு மாத காலம் வீணடிக்கப்படத் தேவையில்லை. தாம் கூறியது சரியென அரசு அந்த உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் காலத்தை வீணடித்தது.
இப்போது பரீட்சைக்கு ஒருமாத காலம் இருக்கையில் மாணவர்களைப் பரீட்சைக்குத் தயாராகுமாறு கூறுகிறது. இது மிகவும் தவறான செயல். இஸட் புள்ளி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படவேண்டும் என தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

No comments:

Post a Comment